ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 24, 2024

நாரதரின் வழியில் சென்று தான் நசுக்கிட வேண்டும் மூட்டைப் பூச்சிகளை…!

நாரதரின் வழியில் சென்று தான் நசுக்கிட வேண்டும் மூட்டைப் பூச்சிகளை…!

 

உண்ணும் உணவில் வருவதல்ல உடலின் ஆரோக்கிய நிலை. எல்லாமே மனநிலையில் இருந்து வருவது தான்.
1.கழிவுப் பொருளை வைத்து வேலை செய்பவனுக்கு… அவன் உடம்பு “ஆரோக்கியமாக இருந்திடப் பார்த்திருப்பாய்…”
2.ஆனால் பரிபக்குவமான உணவை உண்பவனுக்கோ ஆயிரம் வியாதிகள் அவனுக்குள்ளே கலந்திருக்குமப்பா.

நல்லதை மறந்துவிட்டுப் பல நினைவுகள் அவனுள்ளே சுற்றிக் கொண்டிருப்பதனால் நெஞ்செல்லாம் வேதனை வளர விட்டு இருப்பவன் சுவாச நிலையில் எல்லாமே அண்டிக் கொள்கின்றது.

கழிவு பொருளைக் கையில் எடுப்பவன்
1.அவனைச் சுற்றி இருக்கும் அழுக்கைப் பற்றி எண்ணாதபடி தான் வேலை செய்ததற்குண்டான கூலி பெறுவதையே எண்ணி
2.அந்த நிலையிலேயே உணவை உட்கொள்கின்றான்… தீமையான அந்தப் பொருளைப் பற்றி அவன் எண்ணுவதில்லை.
3.அவனுடைய சம்பாத்தியத்தில் அவன் நினைவு மாறாமல் இருப்பதால் அந்தத் தீது அவனைப் பாதிப்பதில்லை.
4.அவனுடைய எண்ணம் தான் அவனை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

மனிதன் எண்ணி எடுக்கும் எண்ணங்களுக்குண்டான பாதிப்புகளைப் பற்றித் தெரிந்து கொண்டாய் அல்லவா..! எண்ணத்தை உயர்த்தி விட்டால் நல் வாழ்க்கை வாழ்ந்திடலாம்.

ஆகவே அவனவன் சுவாச நிலையில் உள்ளது தான் வாழ்க்கை நிலையும் எண்ணமும் எல்லாம்.

சுவாச நிலைக்கும் எண்ணத்திற்கும் பாடங்கள் பல நாள் பகர்ந்து விட்டேன் இனியும் உன் நிலையை ஒரு நிலைப்படுத்திடப் பார்த்திடப்பா.

தியான நிலை… சுவாச நிலை மன நிலைகளைப் பொறுத்தே உள்ளது எந்த நிலை வந்தாலும் மன நிலையை சந்தோஷமாகவே வைத்துக் கொள்.
1.அது எப்படி வரும் அந்நிலை…? என்று கேட்பாய்.
2.கலக்கம் வரும் பொழுது நானாகவா அதைச் செய்து கொண்டேன்…! அதற்கு என்ன செய்வது…? என்று கேட்டிடுவாய்.

கதையில் படித்திருப்பாய் ஊரெல்லாம் பற்றி எரிந்தாலும் பிடில் வாசித்தான் ஒரு மன்னன் என்று.

எரியும் ஊர் எரிந்து விட்டது அதனுடன் அழுது அவன் என்ன செய்திடுவான்…?
1.மனநிலை ஒரு நிலையில் இருந்திட்டால் ஊர் எரிவதும் தெரியாது.
2.உலகளவு துவேஷம் வந்தாலும் தாங்கிடுமப்பா அந்த மனநிலை.

வரும் துவேஷத்தை எண்ணிக் கொண்டிருந்தால் எதிர் துவேஷம்தான் எழும்பி நிற்கும். துவேஷிப்பவனை துவேஷத்தன்மையில் துவேஷிப்பது அல்ல அந்நிலை என்று முதலிலேயே பகர்ந்துள்ளேன்.

நாரதரின் கதையையும் புகட்டி உள்ளேன்..! உன் மனநிலையை மாற்றிடாமல் துவேஷிக்கும் தன்மையை ஏற்றிடாமல் தியான நிலையில் ஒரு நிலைப்படுத்திடப்பா உன் மன நிலையை.
1.அந்நிலையில் உதித்திடும் பல உதயங்கள் உனக்குள்ளே.
2.நாரதரின் வழியில் சென்று தான் நசுக்கிட வேண்டும் மூட்டைப் பூச்சிகளை…! புரிகிறதா…!

பெரும் குடிகாரனின் எண்ணமெல்லாம் குடியிலும்… அதை அடைவதற்கான வழியிலும் வந்து கொண்டே இருக்கும். அவ்வெண்ணத்தின் வழியிலே அவனுக்குள் இருக்கும் ஈசனின் சக்தியையே அவனுள்ளேயே அவ்வெண்ணத்திலேயே கொண்டு செல்கின்றான்… அவன் நினைப்பதும் நடக்கின்றது.

அதே வழியில் தான் பெரும் திருடனும் நடக்கின்றான். திருடனின் எண்ணமெல்லாம் எந்நிலையில் பொருளைக் களவாடலாம்…? என்றே எண்ணுகின்றான். அவனுள் இருக்கும் ஈசனும் அவன் வழிக்கே வருகின்றான். ஒவ்வொருவரின் தொழிலிலும் இதே முறைதான்.

1.எல்லோரிடத்திலும் உயிரிலும் கலந்திருக்கின்றான். அவ்வீசன்.
2.அவனவன் எண்ணத்திற்கு அவனவன் வழி செல்கின்றான்…
3.நல்லவனுக்கும் வழி செல்கின்றான் தீயவனுக்கும் வழி செல்கின்றான்.

ஈசன் என்பவர் யார் என்கிறாய்…?

ஈசன் என்பவன் கல்லும் மண்ணும் அல்ல. காலமுடன் கலந்துள்ளான்… காற்றிலும் ஒளியிலும் கலந்துள்ளான். எண்ணும் எண்ணத்தில் கலந்திடுவான் அவ்வீசன்.

1.ஜெப நிலையை எண்ணுபவனுக்கும் ஜெபத்துடன் கலந்திடுவான்.
2.உலகமெல்லாம் சுற்றியுள்ளான்… எடுக்கும் பிறப்பை முடிக்கும் வரை எல்லா எண்ணத்திலும் எல்லா உயிரிலும் கலந்திருப்பான் ஈசன்.

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பதன் பொருள் இதுவே…!

ஜெப நிலையில் பாடம் புரிந்து கொண்டு எடுத்த பயனை நல்வழியில் முடித்துக் கொண்டு பிறகு ஏழு ஜென்மங்களின் பாடம் பற்றி முதலிலேயே சொல்லி உள்ளேன்.

அந்நிலையைப் புரிந்து கொண்டு வாழ்க்கை முறையைப் பயனுள்ளதாக்கி நல்லெண்ணம் எண்ணிக் கொண்டு சுவாச நிலையை மாற்றிடாமல் வடிகட்டி வருபவன் தான் பெருநிலை அடைகின்றான்.
1.இவ்வுலக வாழ்க்கையின் கலியின் கடைசிக் காலம் இது.
2.மனித ஜீவனின் கடைசிக் காலமப்பா இது.
3.இப்பயனைப் புரிந்து கொண்டு நடந்திட வேண்டுமப்பா.

இருந்தென்ன பயன்…? இருக்கும் வரை சம்பாதிக்கலாம்…! நம் இஷ்டத்திற்கு வாழாத வாழ்க்கை நமக்கு எதற்கு…? என்ற வாதங்கள் தான் பலர் மனதில் உள்ளது.

பல ஆண்டுகளாகச் சம்பாதித்து பல நிலையில் இருப்பவர்களுக்கும் ஒரு குண்டைப் போட்டு விட்டால் உலகமே அழிந்திடும் தன்மையில் உள்ளதப்பா.

இருக்கும் வரை சந்தோஷமாக இருங்கள்…
1.நல் சுவாசத்தை எடுங்கள்… நல் உணர்வுடன் இருங்கள்…
2.அணுவென்ன…? அணுகுண்டென்ன…? உலக நிலை மாறினாலும்
3.உன் நிலையை ஒரு நிலைப்படுத்தினால் வந்துவிடலாம் “போகரின் நிலைக்கே…”

பாடங்கள் பகிர்ந்திட்டால் பல கோடி பகர்ந்திடலாம். உலகத்தன்மையில் இருளடையும் தன்மை தான் இனி சில காலத்திற்குள் நடந்திடுமப்பா. ஒளி என்பதும் இல்லை பெரும் காற்றும் இல்லை ஒளியும் காற்றும் இல்லாவிட்டால் நீரும் இல்லை. உலக ஜீவராசிகளும் இல்லை. இந்நிலை வருவதற்கே கலியுகம் என்ற கடைசிக் காலத்தை குறிக்கிறார்கள்.

ஒரு நிலைப்படுத்திடப்பா உன் நிலையை…! புரிகிறதா…?