ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 13, 2024

எண்ணத்தின் வேகத்தைப் புரிந்திட்டாயா நீ…!

எண்ணத்தின் வேகத்தைப் புரிந்திட்டாயா நீ…!

 

பாடலை உச்சரிக்கும் தன்மையில் உன் சுவாச நிலை புரிகின்றதா…? பகர்ந்திட்டேன் பகர்ந்திட்டேன் பல நாட்களாக…!

சுவாச நிலை என்பது “ஓம் ஈஸ்வராய நம… ஓம் ஈஸ்வராய நம… என்று உன் மூச்சை வெளி விடுவது அல்ல…”

மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் பொழுது
1.உன் கலக்கத்தை எல்லாம் அடக்கி விட்டு அந்நிலையை மறந்து விட்டு
2.ஓம் ஈஸ்வரா குருதேவா… ஓம் ஈஸ்வரா குருதேவா… ஓம் ஈஸ்வரா… என்று
3.உன் மூச்சை உள்ள இழுக்கவும் வெளிவிடவும் பழகவும்.

சோர்வுடன் விட்ட மூச்செல்லாம் சோர்வுடனே தான்…! பகர்ந்துள்ளேன் பகர்ந்துள்ளேன் பல நாட்கள் ஜெப நிலையில் இருந்திடுங்கள் என்று.

எண்ணம் செயல் இன்பம் துன்பம் சோர்வு அனைத்தும் கலந்தது தான் மனிதன்.
1.மனிதனின் வாழ்க்கையில் இவை அனைத்தும் இல்லாவிட்டால்
2.சுவையும் இல்லை வளமுள்ள வாழ்க்கையுமில்லை.

சோர்வும் வருவதால் தான் மனக்கவலை தன்னை விட்டு அகல்வதில்லை மனதில் உள்ள சோர்வை அகற்றிடாமல் சோர்வின் நிலையிலேயே இருந்திட்டால்…
1.உன்னைச் சுற்றியுள்ள இவ்வுலகில் உள்ள சோர்வின் அணுக்களை எல்லாம்
2.உடலில் அணுவாக மாற்றிடச் செய்யும்.

நல்நிலையில் உள்ள பொழுது நல்ல நிலையில் உள்ளவனுக்கு சந்தோஷம் இன்பமும் “ஈஸ்வரனே” (உயிர்) தருவான். சோர்விற்கும் கலக்கத்திற்கும் எவர் ஒருவர் அடிமையாகின்றாரோ அவர் நிலையெல்லாம் துன்பத்துடனே…!

சோர்வும் கலக்கமும் வந்திட்ட பொழுது அந்நிலையையே எண்ணிடாமல்
1.அவன் (ஈசன்) எனக்குள் உள்ளான் என்ற எண்ணம் மனதினுள்ளே வந்து
2.சோர்வின் நிலையை வளர்த்திடாமல் அவனிடம் அதை விட்டு விடும் தன்மை வேண்டும்.

எண்ணும் சோர்வமும் கலக்கமும் மனிதன் நிலையினையே மாற்றிவிடும்… உடல் நிலையையும் மாற்றிவிடும்… மன நிலையையும் மாற்றிவிடும். மன நிலை மாறிவிட்டால் உன்னை அண்டிக் கொள்ளும்… அந்த அணுவெல்லாம்.

அணுவின் தன்மையிலே நல்ல அணுவும் உள்ளதுவே தீயணுவும் உள்ளதுவே. சோர்வின் தன்மையிலே தீய அணுவை அணுகிடுவாய்… தீயணுவின் வேலையெல்லாம் உடல் நிலையையே மாற்றிவிடும். கோபம் சலிப்பு வருவதெல்லாம் இந்நிலையில் தான்.

1.எந்நிலை வந்தாலும் ஈஸ்வரன் (உயிரிடம் - என்னிடம்) என்பவனிடம் விட்டுவிடுங்கள்.
2.அவன் பார்த்துக் கொள்வான்.

நம்மை ஒருவர் துவேஷிக்கும் பொழுதும் நம்மைப் பார்த்து ஒருவர் பொறாமையாக எண்ணும் எண்ணமும்…
1.சோர்வின் நிலையில் உள்ளவனுக்கு உடனே வந்து தாக்கும்
2.காரணம் எல்லா நிலையிலும் எண்ண நிலைதான் மிகவும் துரிதமானது.
3.அவர்கள் எண்ணும் எண்ணம் செல்லும் வேகத்தில் உன் உடலை வந்து தாக்கிவிடும்.
4.உனக்குள் சோர்வும் கலக்கமும் இருக்கும் பொழுது உன் எதிரியின் எண்ணம் உடனே வந்து உன்னைத் தாக்கும்.

இந்நிலையில் வருவது தான் உடல் நிலையில் வரும் மாற்றங்களும் வியாதிகளும் எல்லாமே.

அதற்குத் தான் பிறரின் கண் படும்… சுற்றிப்போடு…! என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்பாய்.

அந்நிலை வருவதெல்லாம் உன் சோர்வினால் தான்.
1.சோர்வுடையவனுக்கு எல்லாத் தீய குணங்களும்
2.எண்ணும் எண்ணத்தை விடத் துரிதமாக வந்தடையும்.

பெரும் காற்றும் மழையும் மின்சாரமும் செயற்கை மின்சாரங்கள் எல்லாமே செல்லும் வேகத்தை விட “எண்ணத்தின் வேகம்” உலகிலேயே உயர்ந்த வேகம்…!

எண்ணத்தின் வேகத்தைப் புரிந்திட்டாயா நீ…!
1.இருக்கும் நிலையில் இருந்து நீ செய்யும் தியானத்தில் உன் எண்ணம் எம் மண்டலத்தைச் சுற்றியும் பாயும்.
2.மனிதனின் சக்தி உலக சக்திக்கெல்லாம் அப்பாற்பட்ட பெரிய சக்தி
3.அச்சக்தியின் தன்மையை யாரப்பா உணர்ந்துள்ளார்கள்…?
4.எண்ணத்தின் தன்மையை எண்ணிப்பார்…! உன் உணர்வை எண்ணிப்பார்.
5.நாட்டமெல்லாம் அவன் அருள்வான் நலிங்கிடாதே… எந்நிலை வந்தாலும் மாற்றிடும் தன்மை வேண்டும்.

சோர்வு சோகம், கோபம் குரோதம் நலிவு வருவதெல்லாம் மனிதனுக்குச் சரிபாதி உள்ளது அதை எல்லாம் வென்று… அந்நிலைக்கு நம் மனதை இடம் கொடாது
1.நம் நிலையை ஒருநிலைப்படுத்தி
2.மின்னல் வந்தாலும்… பூகம்பம் வந்தாலும்… நம் நிலையை மாற்றிடாமல் இருந்திடுவதே இத்தியானத்தின் முறை.

தியானத்தில் அமர்ந்து தான் இந்நிலை வர வேண்டும் என்பதல்ல…!

உன் உடலில் உள்ள கோடான கோடி அணுக்களையும் உன்னைச் சுற்றி உள்ள பல கோடி அணுக்களையும் ஒருநிலைப்படுத்தத்தான் “இந்தத் தியான முறை எல்லாம்…!”

மனிதனின் நிலையில் ஒரு பாதி இது என்று சொன்னேன். மறு பாதி என்ன என்றால் ஆசை பேராசை பற்று உல்லாசம் நிறைந்துள்ளது.
1.ஆசையை வளர்த்து விடுகின்றான்
2.பாசத்தைப் பகிர்ந்து விடுகின்றான்.
3.உள்ள நிலையை மறந்து விட்டுப் பெரும் உல்லாசத்தை நாடி விடுகின்றான்.

அத்தகைய நிலையில் மனம் எடுக்கும் சுவாசத்தில் நன்மை தீமை ஒன்றுமே தெரிவதில்லை.

தன் நிலையில் உள்ள ஆசையை வளர்த்திட மென்மேலும் ஆசைப்பட்டு அந்த ஆசை அணுவுக்கே அடிமையாகின்றான். பாசம் என்பதும் இப்படியே…! பெரும் பாசத்திற்கு அடிமையாகி விடுகின்றான்.

உல்லாசத்திற்கு அடிமையாகின்றான் இந்நிலையில் உள்ளவனுக்கு எந்நிநிலையும் அவன் கண்ணிற்குத் தெரியாது.

1.இந்த நிலைகளை எல்லாம் அகற்றிவிட்டு
2.தன் நிலையில் எது வந்தாலும் அடக்கி ஒருநிலைப்படுத்துபவனுக்கே
3.”தியான நிலை” என்பது கூடி வரும்.

தர்மம் நியாயம் என்பதெல்லாம் உன் அளவில் கஷ்டப்பட்டு உன்னை நீ வருத்தி உன் வழியில் பொருள் திரட்டிப் பிறருக்கு அளிப்பது தான் தானம் அல்ல.

எந்த நிலையிலும் நம் நிலையில் ஒருவரின் பொருளுக்கோ ஒருவரின் துவேஷத்திற்கோ ஆளாகாமல் ஒருவரை ஏமாற்றியோ பிறரின் சொத்தை அபகரிக்கக் குறுக்கு வழியில் சென்றிட்டோ… தன்னிலையை மறந்து பிறருக்கு உபதேசம் செய்வதோ… இதுவல்ல தர்மம்.

தர்மம் நியாயம் என்கிறோம்… தர்மம் என்பது தன் வழியில் உள்ள நியாயத்தை என்றும் கடைப்பிடித்து மற்றவரின் கஷ்டத்தைப் பார்த்து உன் உள்ளத்தால் வார்த்தையால் அன்பைப் பொழியும் பொழுது நீ தரும் பொருளினாலோ நீ இடும் பிச்சையினாலோ வருவதல்ல தர்மம்.

ஒருவரின் கஷ்டத்தைப் பார்த்த பின்
1.உள்ள நிலையில் உன்னால் முடிந்த அளவு அவருக்கு அன்பையும் உன் ஆறுதலையும் பகிர்ந்து
2.அக்கஷ்டப்படும் மனிதருக்கு “உன் அருளை” எப்படிப் பாய்ச்சுகின்றாயோ
3.அதிலே உள்ளதப்பா தர்மமும் நியாயமும்.

அவன் நிலையைப் பார்த்து பழித்துப் பேசிடவோ துவேஷித்திடவோ வேண்டாம். பொருளினால் மற்ற உதவிகள் அளிப்பதனால் மட்டும் வருவதில்லை தர்மமும் நியாயமும்…! (இது முக்கியம்)

உன் ஜென்ம நிலையை உணர்ந்து கொண்டால் எல்லாமே விளங்கிவிடும்… உன் வழிக்கு எல்லாமே.

1.தியான வழியில் அமர்ந்தால் உன் உடலில் உள்ள அணுக்கள் எல்லாம்
2.நான் பாடத்தில் சொன்ன எல்லா அணுக்கள் எல்லாமே “உன்னை வந்து தாக்கப் பார்க்கும்.

உன் எண்ணத்தின் வழியிலேயே அந்நிலையில் நீ செய்யும் தியானம் எல்லாம் அவன் (ஈஸ்வரன்) நிலையில் ஐக்கியப்படுத்து
1.உன் மனதைப் பெரும் நிதானப்படுத்திச் சாந்தமுடன்
2.எந்நிலையும் உன்னைத் தாக்கிடாமல் எந்த அணுவும் உன்னை அடைந்திடாமல்
3.உன் மனதை ஒருநிலைப்படுத்தி நீ விட்டிடும் மூச்சிலே தான் தியானமே கை கூடும்.

அந்நிலையில்… தியான நிலை கைகூடும் அந்த நிலையில்
1.அவன் பாதத்தை வணங்கிடப்பா.
2.அவர் பாதம் என்பதெல்லாம் உன் சக்திக்குள்ளே தான் உள்ளதப்பா.
3.அந்நிலையில் உள்ளவனுக்கு எண்ணும் எண்ணமெல்லாம் அவனருள்வான் உன் வழிக்கே.

உங்களுக்கு எண்ணத்தின் வேகத்தைச் சொன்னேன் அந்நிலையில் தியான நிலையில் உள்ளவனின் எண்ணத்தின் வேகம் உலகை மட்டுமல்ல உலகைச் சுற்றியுள்ள பல கோடி… பல கோடி… கோடி மண்டலங்களையும் அறிந்திடலாம்.

எந்நிலையில் உள்ள நிலையும் உன் தியான நிலையில் எண்ணத்திலேயே கண்டிடலாம்… பல கோடி கண்டிடலாம். தியான நிலையைப் பகிர்ந்திட்டவன் எல்லாம்… இந்நிலையை யாரும் பகிர்ந்திடவில்லை.

“தியானம் தியானம்” என்கிறார்கள். எந்த நிலைக்குத் தியானம் என்கிறார்கள்…?

தியான நிலையில் இருந்து உலக நிலையையும் வேறு பல நிலைகளையும் அறிந்து விட்டு என்ன பயன்…? என்ற எண்ணம் எல்லோருக்குள்ளும் சுழல்கின்றது.

1.தியான நிலைக்கு வருவதெல்லாம் அவன் அவன் செய்த பூர்வ புண்ணியப் பலனே.
2.பழிப்பவர்கள் பழிக்கட்டும்… வருபவர்கள் வந்திடட்டும் தியான நிலைக்கே.
3.முதல் பாடத்திலேயே சொல்லி உள்ளேன் கல்கியின் நிலையை.
4.அந்நிலைக்கு வருபவனுக்குத் தான் இந்தத் தியான நிலையும் கைகூடுமப்பா…!

தியான நிலையைப் புரிந்திட்டாயா உன் பாட்டின் தன்மையை மாற்றிக் கொள்வாயா…!

திருவருள் தந்திடுவீர் தாயே தந்தையே
திருமகன்(ள்) பணிகின்றேன்
திருவருள் தந்திடுவீர் தாயே தந்தையே
திரு குருவின் அருள் பெறவே
திருமானின் அருள் பெறவே
திருவருள் தந்திடுங்கள் தாயே தந்தையே.