ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 12, 2024

புதிய உலகை நான்(ம்) படைப்பேன்(போம்)

புதிய உலகை நான்(ம்) படைப்பேன்(போம்)

 

“நானேதான் நான்…” என்னும் நிலை எல்லோருக்கும் வேண்டும். நான் என்னும் “அகந்தை” தான் வேண்டாம்.

நான் என்பதை அகற்றிடுங்கள்… நான் என்னும் சொல்லை விட்டுவிடுங்கள்…! என்று சொல்கின்றார்கள். ஆனால்
1.குழந்தையின் பருவத்திலேயே ஊட்டி விடுவதெல்லாம் “நான்” என்னும் சொல்லைத்தான்.
2.வளர்ந்த பிறகு “நான் என்பதை அகற்றிவிடு” என்று சொல்கின்றார்கள்.

ஆக… தன் நிலை உயர்ந்தால் தான் பிறரை உயரச் செய்ய முடியும்.

தன் நிலை என்னும் பொழுது நான் என்னும் நிலை தான் வரும்… நம் நிலை என்று எப்படி வரும்…? ஆகவே நான் என்பதை அகற்றிடுங்கள் என்பதன் பொருளைப் புரிந்து கொள்ளுங்கள்.

“நான்” என்பதையே புரியாமல் செய்வது தான் நான் என்பதெல்லாம்

குயவன் ஒரு மண் பானையைச் செய்துவிட்டு “நாம் செய்தோம்” என்று சொல்ல முடியுமா…? நான் தான் செய்தேன்…! என்று சொல்வான்.

தான் செய்யும் செயலுக்கு… செயல் என்பது தொழிலுக்கோ பிழைப்பிற்கோ உண்ணுவதற்கோ “அந்த நான்” வேண்டும். அந்நிலையில் நான் இருந்தால்தான் தன் நிலையையே பார்த்திட முடியும்.

1.நான்…! என்ற அகந்தை ஆணவம் பொறாமை பழிச்சொல்…
2.என்னைத் தவிர யாருக்கும் ஒன்றும் தெரியாது என்னும் நிலையில் இருந்து கொண்டு பிறரைப் பழிக்கும் நிலை
3.அந்த நிலையில் உள்ள நான் தான் வேண்டாம் என்பது.

நான் என்பதற்கு நான் எதிரி அல்ல…! குழந்தை தன் படிப்பில் ஒரு ஓவியத்தை வரைகிறது. அதை யார் செய்தார்கள்…? என்றால் கேட்டால் “நான் செய்தேன்…” என்று சொல்லக் கேட்டால் அது எவ்வளவு பெருமை…?

அதில் உள்ள அழகு வளர்ந்த பின்னும் இருந்து விட்டால்… அந்த நான் இருந்தால்தான் உலகமே அழகுபடும். அந்த நானில் இருந்திடுங்கள்.
1.நான் செய்திடுவேன் நல்ல காரியத்தை
2.நான் செய்திடுவேன் நல் தியானத்தை
3.நான் தியானம் செய்து நல் அலைகளைப் பரப்பிடுவேன்

இந்த நானை அகற்றாதீர்கள்.

1.மனத்தில் நல் மனமும் உள்ளது தீய மனமும் உள்ளது
2.நானிலும் நல் நானும் உள்ளது தீய நானும் உள்ளது.
3.மனம் எல்லாம் ஒன்றுதான்… நானும் ஒன்று தான்…!

அதைப் பிரிக்கும் வழி தான் நமக்கு வேண்டும்.

ஒரு இயந்திரமோ சமயலோ எதுவாக இருந்தாலும் ஒருவர் செய்வதைப் பார்த்துவிட்டு அவன் செய்து விட்டான்… ஏன் நான் செய்ய முடியாதா…? என்ற நான் வேண்டும்.

மனிதனுக்கு எப்படி ஆசை வேண்டும் என்று சொன்னேனோ அது போலவே “நானும்” வேண்டும். நானுக்கு நான் எதிரி அல்ல…!

ஒரு நல் வழியை நிலைநாட்டிட… “நான் அதைச் சொல்கிறேன்” என்னும் சொல்லில் தவறில்லை.
1.தீய வழிக்குத் தான் நான் என்பதை அகற்றிட வேண்டும்.
2.நான் என்பது நான் என்ற அந்த அகந்தையை அகற்ற வேண்டும்.

ஒரு நிலையில் இருந்திடுங்கள் ஒற்றுமையுடன் இருந்திடுங்கள்.

இன்றைய உலக நிலையில் எல்லாம் ஒரு நிலையும் ஒற்றுமையையும் பறந்திட்டது… கால நிலையைக் கருத்துரைத்தேன்.

குறுகிய காலம் என்றேன் பார்த்தாயா பதட்ட நிலையை…! பரஞ்ஜோதி வடிவானவனே பார்க்கின்றான் இப்பாருலகில் உள்ள நிலை எல்லாம். பகர்வதற்கு என்ன உள்ளது…? இப்பாரின் நிலையை…!

ஆகர்ஷண சக்தி எல்லாம் அழன்று உள்ளது அழிவின் நிலையில்.

கால நிலை மறந்து விடாதே கால நிலையை மறந்து விடாதே காத்திடுவாய் கல்கியுடன் கலந்திடத் தான்…!
1.அழிவு நிலையில் எல்லாம் அழியும் போது நான் இருந்து என்ன பயன்…? என்ற எண்ணம் நமக்கு வேண்டாம்.
2.நம் உயிரின் ஆசைக்காக “நாம் மட்டும் வாழ வேண்டும்” என்ற எண்ணத்திற்காக இருக்கச் சொல்லவில்லை.

உலக நிலையே அழிந்து விட்டால் நாம் வாழ்ந்த நிலைக்கு என்ன பயன்…?

பிறந்த பயனைப் போற்றிடச் செய்யுங்கள் போற்றிடச் செய்யுங்கள் என்பது பிறர் போற்றுவதற்காக அல்ல. புதிய எண்ணம் புதிய செயல் அதைப்போல் புதிய உலகத்தையும் கண்டிடுங்கள்.

சித்திரம் தீட்டிடுவேன் சித்திரம் தீட்டிடுவேன்
சிந்தை உள்ள சிவனின் சித்திரம் தீட்டிடுவேன்
சிவனின் சக்தியெல்லாம் சிந்தையில் வந்திடவே
சித்திரம் தீட்டிடுவேன்
சிவனாரின் ஆசி பெற்றிடவே சித்திரம் தீட்டிடுவேன்
சிவ சிவா என்னும் நாமத்தில் சிந்தை எல்லாம்
கலங்கிடாமல் இருந்திடவே சித்திரம் தீட்டிடுவேன்
சிவ பாக்கியம் பெற்றிடவே சித்திரம் தீட்டிடுவேன்
சிவன் அருளைப் பகர்ந்திடவே சித்திரம் தீட்டிடுவேன்
சிவன் சித்திரம் தீட்டிடுவேன்
(சிவன் சக்தி நடனக்காட்சி)
சிவ நடனம் கண்டிடவே
சீற்றமெல்லாம் குறைந்திடவே
சிவ பாதம் பணிந்து நின்றே சித்திரம் தீட்டிடுவேன்
சிங்கார மழலையிலே
சிரிக்கும் சிரிப்பில் எல்லாமே
சிந்தையுள்ளே மகிழ்ந்திடவே
சித்திரம் தீட்டிடுவேன் சிவனின் சித்திரம் தீட்டிடுவேன்
சிறு சிறு பூவின் மணத்தில் எல்லாம்
சிந்தையில் மனதை ஏற்று
சிவாய நம ஓம் சிவாய நம ஓம்
சிவ சிவாய நம ஓம் சிவ சக்தி நம ஓம்
சிவனின் நாமத்தை ஓதிடவே சித்திரம் தீட்டிடுவேன்…!