ஆவி நிலையில் வாழ்வது எல்லாம் “பெரும் அல்லல் படும் நிலை தான்”
“ஆவிகளைப் பற்றி” எல்லாமே தெரியும் தன்மை நாய்க்கு மட்டும் தான் உண்டு. அதற்காகத்தான் என்னுடன் நாயை நிறுத்திக் காட்சி தந்தேன்.
நாயாகப் பிறப்பவர்கள் எல்லாம் ஆவி உலகில் உள்ள பெரும் ஆத்திரக்கார ஆவிகள் என்றேனல்லவா முதல் பாடத்தில். உடலில் இருக்கும் பொழுது எந்த விரோதத்தில் அவர்களின் ஆவி பிரிந்து சென்றதோ
1.அவ்வாவி தான் முடிக்கும் காரியத்தை முடித்தவுடன் வருவது “நாயின் உடலில் தான்…”
2.மனித உடலை எடுக்கும் சந்தர்ப்பமும் பாக்கியமும் அந்த ஆவிகளுக்குக் கிட்டுவதில்லை.
இவ்வழியில் வந்த நாய்கள் எல்லாத் தன்மையையும் ஆவி உலகில் உள்ள ஆவிகள் எப்படி எந்நிலையும் தெரிந்திருக்கின்றனவோ… எந்நிலை என்பது மற்ற ஆவிகளின் நிலையும் முன் ஜென்ம விரோதத்தின் நிலையும் தெரிந்து வைத்திருக்கின்றதோ… அதே போலத்தான் நாயின் உடலிலும் இருக்கும்,.
நாய்க்கு எல்லா சக்திகளும் தெரிந்திடும். நாயின் தன்மையை ஊன்றிப் பார் நாயில் உள்ள வெறித்தன்மைதான் உணர்ந்திட்டாய். நாய்க்கும் ஜென்மத் தொடர் உண்டப்பா.
நாயின் நிலை எல்லாம் பெரும் பூகம்பத்தையும் அறிந்திடும்… வரும் வெள்ளத்தையும் அறிந்திடும்…! அதன் தன்மையில் சிறு அணுவும் ஆவி உலகத்தின் தன்மையும் ஆண்டவனின் தன்மையும் தெரிந்து விடும்.
ஆனால் ஆவியையும் ஆண்டவனையும் பிரித்துப் பார்க்கும் தன்மை அதற்கு இல்லை. அதன் வெறி உணர்விலே அத்தன்மை மறைந்து விடுகிறது.
நாய் கடித்து இறப்பவர்கள் எல்லாம் நாயுடன் முன் ஜென்மத்தில் தொடர்பு உடையவர்களே. முன் ஜென்மத்தில் விட்ட குறையை அந்த நாய் தீர்த்துக் கொள்கின்றது.
நாய் கடித்துத் தப்புபவர்கள் எல்லாம் அவர்கள் முன் ஜென்ம “பூஜா பலனினால்தான்…”
1.பூஜா பலன் என்பது கற்பூரம் காட்டி விடுவது மட்டுமல்ல…
2.அதன் பலனை அடைந்தவன் என்பது அவனின் முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களை வைத்துத்தான் பூஜா பலன் என்று சொல்கின்றேன்.
கடவுள் சிலைக்கு முன்னால் நிற்பவர் எல்லோருமே பூஜா பலன் எய்தியவனா…? இல்லை…!
கோயிலுக்குச் செல்லாதவனும்… கடவுளே இல்லை என்பவனும்… தன் நிலை உணர்ந்து நியாயத்தைக் கடைப்பிடித்து நல்லொழுக்கம் பெற்றவரும்… நாடு போற்றும் தன்மை உள்ள எல்லோருமே… பூஜை பலன் பெற்றவர்கள்.
ஆயிரம் தவறுகள் செய்தாலும் தான் தர்மம் செய்கின்றேன்… கோயில் கட்டி வழிபடுகின்றேன் என்பவன் எல்லாம் பூஜா பலன் பெறுகின்றானா…? இல்லை… பெரும் பூஜ்யம் தான் அவன் நிலை.
கோயில் என்பதையே தான் செய்யும் பாவத்தைக் கொட்டித்தான் பாவ மன்னிப்புக் கேட்கின்றான். அவன் நினைக்கின்றான்…
1.செய்த பாவத்தைச் செய்து விட்டுக் கோவில் கட்டி கும்பிட்டால்
2.கூப்பிட்ட குரலுக்கு “கும்பேஸ்வரன் வந்திடுவான்” என்ற எண்ணம் அவனுக்குள்ளே.
மறு ஜென்மம் என்பது உள்ளதப்பா அவனைப் பார்த்துக் கொள்ள…!
ஆவி உலகில் ஊடுருவி அதன் தன்மையில் பார்த்து விட்டால் உலக நிலை எல்லாமே உன்னுள்ளே தெரிந்திடும்.
1.மனித உடலில் உள்ளவரை தான் அமைதியும் சந்தோஷத்தையும் காண முடியும்.
2.ஆவி நிலை எல்லாம் பெரும் அல்லல் படும் நிலை தான்.
மனித உடலின் நிலையிலேயே மூன்றில் ஒரு பாகம் (1/3) அமைதியான ஆனந்தமான நித்திரை அருளியுள்ளான் அவ்வாண்டவன். எந்த நிலையிலும் அந்த ஆனந்தமான நித்திரை இல்லை அப்பா “ஆவிகளுக்கு…”
மனித உடலில் பெற்ற பேற்றை வழி வழியாகச் சொல்கின்றேன் இப்பேறு பெற்றதற்கு பல கோடித் தவம் வேண்டும். தவமிருந்து பெற்ற உடலைத் தான் தன்னிச்சையாக அழிக்கின்றார்கள் மானிடர்கள்.
1.மனித உடலின் தன்மை எல்லாம் பெரும் பேரின்ப நிலையப்பா
2.மனித உடலில் இருந்து கொண்டே வாழும் வாழ்க்கை அழகுடனும் அர்த்தமுடனும்… ஆனந்தத்திலும்… களித்திட வேண்டுமப்பா.
மனித உடலை எய்தியவன் எல்லாம் தன் நிலையை உணர்ந்திடாமல் பிறந்த உடனே ஆத்திரத்துடனும் பேராசையுடனும் பழிவாங்கும் நிலையிலும் கோப தாபத்துடன் வளர்க்கப்படுகின்றான். எப்படி அப்பா இருக்கும் வாழ்க்கை நிலை…?
பிறந்தவுடனே நல்லறிவை ஊட்டும் குடும்பத்தில் வளரும் குழந்தை நல்ல நிலைக்கு வந்து விடுவான். வளரும் தன்மையிலே வாழ்க்கை அமைகின்றது.
இப்பாடம் புரிவதற்கு புதியவனல்ல நீ…! எல்லா பாடத்தின் தன்மையும் தெரிந்திடவே புகுத்திட்டேன் இதை.