ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 2, 2024

இறந்தவர்களுக்கு நாம் நல்லதைச் செய்கின்றோமா… அல்லது கெடுதல் செய்து கொண்டிருக்கின்றோமா…?

இறந்தவர்களுக்கு நாம் நல்லதைச் செய்கின்றோமா… அல்லது கெடுதல் செய்து கொண்டிருக்கின்றோமா…?

 

இறந்த உங்கள் தாய் தந்தையின் நினைவாக ஒவ்வொரு அமாவாசையிலும் அல்லது வருடத்தில் ஒரு நாள் அமாவாசை அன்று படையல் வைத்துக் கும்பிடுகின்றீர்கள்.

அன்று விரதம் இருந்து… அவர்கள் எதை எல்லாம் உணவாக உட்கொண்டார்களோ அந்த உணவைப் படைத்து வணங்கி பின் நீங்கள் அதை உணவாக உட்கொள்கின்றீர்கள்.

அமாவாசை அன்று அந்த இருள் சூழ்ந்த காலங்களில் தான் மந்திரவாதிகள் சில வேலைகளைச் செய்வார்கள்.
1.சாங்கிய சாஸ்திரப்படி செய்பவர் குடும்பங்களின் வீட்டு வாசல்படியில் இருக்கும்
2.அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் காலடி மண்ணை எடுத்துச் செல்வார்கள்.

இருண்ட நேரங்களில் அவர்கள் கற்றுணர்ந்த அதர்வண வேதத்தின்படி மந்திரத்தைச் சொல்வார்கள்.

குடும்பத்தில் யார் யார் எந்த தெய்வத்தைப் பக்தியில் எண்ணி அந்த்த் தெய்வத்தின் மந்திரத்தை ஆழமாகப் பதிவு செய்து அதைச் சொல்லிச் சொல்லி ஜெபித்தார்களோ அதன் துணை கொண்டு
1.அவருடைய நாமத்தையும் சொல்லி குடும்பத்தையும் சொல்லி மந்திரவாதிகள் ஜெபிப்பார்கள் என்றால்
2.இறந்த ஆன்மா அவருடைய கைகளிலே கைவல்யமாகி விடுகின்றது.

ஒவ்வொரு குணங்களுக்கும் ஒவ்வொரு மந்திர ஒலி ஒன்று உண்டு. அதை வைத்து அந்த ஆன்மாவில் இருக்கக்கூடியதைக் கைவல்யப்படுத்துவார்கள்.

அதே சமயத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அதாவது… கருக் கலைக்கப்பட்டு வெளிவந்த ஒரு பிண்டத்தைக் கையில் எடுத்து அதை ஜெபிப்பார்கள்.

ஜெபிக்கும் பொழுது அந்தப் பிண்டத்திலிருந்து அகன்று சென்ற அந்த உயிரான்மா அந்தப் பிண்டத்திற்கே மீண்டும் வரும்.

1.மனிதனாக வளர்ந்த மந்திர ஒலியினை அதிலே பாய்ச்சி…
2.இவர்கள் நினைவு எதுவோ அதை எல்லாம் செயல்படுத்தப்பட்டு
3.பிறருக்குத் தீமைகளை விளைய வைக்கவும்… செய்வினை தோஷம் என்று செய்வதும்
4.ஒரு பொருள் மீது இந்த ஒலி அலைகளைப் பரப்பி மந்திரத்தைச் சொன்னால் அந்தப் பொருள் கரைவதும்
5.இன்னொரு இடத்தில் அந்தப் பொருள் உருவாவதும் போன்ற மாயாஜால வேலைகளைச் செய்வார்கள்.

மந்திரத்தை ஜெபித்து காளியைக் கைவல்யம் செய்து வைத்திருக்கின்றேன்; மாரியைக் கைவல்யம் செய்து வைத்திருக்கின்றேன்; முனியப்பனைக் கைவல்யம் செய்து வைத்திருக்கின்றேன்; கருப்பணனைக் கைவல்யம் செய்து வைத்திருக்கின்றேன்… என்றெல்லாம் அவர்கள் சொல்வார்கள்.

தீமையின் விளைவுகளுக்கு ஒப்ப அதற்கென்று ஒவ்வொரு மந்திரச் சொல்லைச் சொல்லிப் பரப்பிவிட்டால் இந்த ஆன்மாவின் துணை கொண்டு எதிலேயுமே ஊடுருவிச் செயல்படும் சக்தியாகச் செயல்படுவார்கள்.
1.சாங்கிய சாஸ்திரத்தில் சிக்கியுள்ளோர்கள் அனைத்தும்
2.ஆன்மாக்களைப் பிறருக்கு கைவல்யப்படுத்துவதற்குத் தான் உதவ முடியும்

உதாரணமாக குடுகுடுப்பாண்டிகள் காலையில் வருவார்கள். அதற்கு முன் இரவிலே ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று எத்தனையோ ஒலிகளை ஒலிப்பார்கள். ஒவ்வொரு வீட்டில் உள்ள உணர்வின் அலைகளை (சில நிகழ்ச்சிகளை) எதிரொலிக்கச் செய்வார்கள்.

காலையில் இங்கே வந்த பின் நீங்கள் அரிசியோ பருப்போ மற்றதோ கொடுத்தாலும்
1.உங்கள் வீட்டில் இருக்கும் பழைய துணி வேண்டும் என்று… அதைத்தான் விரும்பிக் கேட்பார்கள்.
2.நம் தலையிலிருந்து உதிர்ந்த முடி எதுவாக இருப்பினும் அவர்கள் கண்ணுக்கு அது சிக்கும்… அதையும் எடுத்துக் கொள்வார்கள்.

சிரசில் விளைந்த ரோமம் ஒன்று கிடைத்தால் போதும்…! அதை வைத்து
1.உங்கள் குடும்பத்தில் என்னென்ன நடந்தது என்று பழைய நிகழ்ச்சிகளைச் சொல்வார்கள்
2.நம்மை நம்பச் செய்வதற்காகப் பல வித்தைகளையும் செய்வார்கள்.

இது தான் “கடவுளை தனக்குள் கைவல்யப்படுத்தி வைத்திருக்கிறேன்…” என்று சொல்லி அற்புதங்கள் செய்பவருடைய நிலைகள்.

உலக ரீதியில் எடுத்துக் கொண்டாலும்… எந்த மதத்தின் அடிப்படையில் இத்தகைய நிலைகள் செய்கின்றாரோ பிறிதொரு மனித உடலில் விளைந்த… அதாவது இறந்தவரின் ஆன்மாக்களைத் தான் அவர்கள் கைவல்யப்படுத்திச் செயல்படுத்துகின்றார்கள்.

1.மந்திரம் இல்லாத மதம் எதுவும் இல்லை
2.அந்தந்த மதங்களுக்கு உண்டான சாங்கியங்கள் உண்டு
3.அதன் அடிப்படையில் தான் பல நிலைகள் இவ்வாறு இயக்கப்படுகின்றது.

மனிதன் இறந்த பின் மனித உடலில் உருவான இந்த உணர்வலைகள் பூமியில் உண்டு. உடலை விட்டு பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்களும் காற்றிலே தான் சுழன்று கொண்டுள்ளது. அதைத் தான் அவர்கள் கைவல்யப்படுத்திக் கொள்கின்றார்கள்.

1.நம்முடைய ஆன்மா மந்திரக்காரர்கள் கையிலே இப்படிச் சிக்குவது சரியா…?
2.சாங்கிய சாஸ்திரப்படி அமாவசையன்று படையல் செய்து முன்னோர்களைக் கூப்பிடுவது சரியா…? என்று சிந்தித்துப் பாருங்கள்

ஆகவே… மகரிஷிகள் காட்டிய வழிப்படி உடலை விட்டு பிரிந்த ஆன்மாக்கள் யாராக இருந்தாலும் அவர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைப்பதே மேலானது.

(விண் செல்லும் ஆற்றலும்... விண் செலுத்தும் ஆற்றலும்...! - https://wp.me/p3UBkg-1DK)