ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 23, 2024

கலக்கம் வந்துவிட்டால் “அதுவும் நன்மைக்கே தான்” என்ற எண்ணம் ஏனப்பா உனக்கு வரவில்லை…?

கலக்கம் வந்துவிட்டால் “அதுவும் நன்மைக்கே தான்” என்ற எண்ணம் ஏனப்பா உனக்கு வரவில்லை…?

 

சுவாச நிலையின் பாடத்தைப் பல நாளாகப் பகர்ந்து கொண்டே வருகின்றேன். சுவாச நிலை என்ற பொருள் உன் நிலைக்குக் கடுகளவு தான் வந்துள்ளது… உன் வழியிலும் கடுகளவு தான் ஏற்றுக் கொண்டுள்ளாய்.

சுவாச நிலை என்பதுவே ஒரு மனிதனின் வாழ்க்கை தானப்பா. கஷ்ட நஷ்டங்கள் கலந்ததுவே வாழ்க்கை.

காலமெல்லாம் தவமிருந்தாலும்…
1.கஷ்டம் வரும் பொழுது தன் மனநிலையை அதனுள் ஐக்கியப்படுத்துபவனுக்கு அதே எண்ணம் தான் எச்சுவாசத்திலும் கலந்துவிடும்.
2.அவ்வெண்ணத்தையே சுவாசிப்பதால் சுற்றிச் சுற்றி அவ்வெண்ணமே தான் மனதில் ஒரு நிலைப்படுகின்றது
3.அந்நிலைக்கு வருபவன் எவ்வெண்ணத்தையும் மறக்கின்றான்… தன் நிலை உணர்வதில்லை.
4.முதலில் வந்த அந்த நிலையையே எண்ணிக் கொண்டுள்ளான்.
5.அதனால் வருவது தான் சோர்வும் சோகையும் எல்லாமே…!

சோர்வான மனமுள்ளவனுக்குக் கோப நிலையும் அதிகரிக்கும். இப்படி ஒன்றுடன் ஒன்று கலந்து விட்டால் உடல் நிலையும் மாறிவிடுகிறதப்பா.

இந்நிலையை மாற்ற…
1.கஷ்டம் வரும் பொழுது நல் நிலையை மனதில் எண்ணி
2.அந்தக் கஷ்டத்தை போக்கிட என்ன செய்யலாம்…? என்ற “உதயம்” வருவதற்குச் சிறிது நேரம் தியானத்தில் இருந்திடப்பா.
3.அந்நிலையில் அவன் அருள்வான் பல வழி முறைகளை.

மனதிற்குள் கஷ்டத்தை அடக்கிவிடாதே… ஒதுக்கிடப்பா மனதில் இருந்து கஷ்டங்களை எல்லாம். இது எப்படி சாத்தியமாகும்…? என்று நியாயம் பேசிடுவாய்…! சத்திய நியாயத்தையும் சகலத்தையும் பார்த்திடப்பா.

1.அந்தந்த நேரத்தில் எல்லாம் அவன் வருவான் உன்னுள்ளே… வந்து உன்னை வழி நடத்துவான்.
2.அவன் வழி நடத்திவிட்டால் உன் சுவாச நிலையும் உடல் நிலையும் மாறாதப்பா… நல் சுவாசத்தை எடுப்பதுதான் சரியான வாழ்க்கை முறை.

கலங்கும் நெஞ்சம் இருந்திட்டால் எல்லாமே கலக்கம் தான். அதனால் உடல் நிலையும் மனநிலையும் பாதிப்படையுமப்பா.

கலக்கம் வந்துவிட்டால் “அதுவும் நன்மைக்கே தான்” என்ற எண்ணம் ஏனப்பா உனக்கு வரவில்லை…? கலங்குகின்றாய்…! தடங்கல்களை எண்ணி என்றும் வருத்தப்படலாகாதப்பா. அதுவும் நன்மைக்கே என்ற எண்ணம் தான் வளர்ந்திட வேண்டுமப்பா உன் மனதில்.

1.வாழும் வாழ்க்கை உனதல்ல…!
2.அவன் இட்ட பிச்சை தான் உன்னுடைய வாழ்க்கை. அவன் அருள்வான் எல்லாமே.
3.மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்பதெல்லாம் இதற்குத்தானப்பா… எல்லாம் நன்மைக்கே…!

(இரு நிலையான) ஒளியும் இருளும் ஒன்று போல் தான் மாறி மாறி சுழன்று வருகிறது ஆனால் இருளான நிலைகளை உனக்குள் மாற்றிடாமல் உன்னுள்ளே ஜோதி நிலை பெற வேண்டுமப்பா.

நீ விட்ட கடனை முடிக்கத்தான் வந்துள்ளேன். வழி அமைத்ததெல்லாம் அவன் செயல்…! “ஆண்டிடுவான் அவனே உன்னையும்…” என்று எண்ணிவிடப்பா.

இந்த மனநிலையை மாற்றிடாமல்… அமைதி கொண்டு நல் சுவாசங்களை எடுத்து… நல் எண்ணங்களை உனக்குள் வளர்த்து உயர்ந்த உணர்வைப் பெற்றிடுவாய்.