ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 5, 2024

“தர்மயுத்தம்” என்ற பெயரில் ஞானிகள் கொடுத்த உண்மையையே தலைகீழாக மாற்றி விட்டார்கள்

“தர்மயுத்தம்” என்ற பெயரில் ஞானிகள் கொடுத்த உண்மையையே தலைகீழாக மாற்றி விட்டார்கள்

 

ஒவ்வொரு காலத்திற்குள்ளேயும்…
1.ஆதியில் இருந்து இன்று வரையில்
2.காலத்துடன் ஒன்றி கடவுள் என்பவர் பிறக்கின்றார்… அவதாரம் எடுக்கின்றார்

நீ அறிந்த காலம் வரை சொல்கின்றேன்.

சிவனாகப் பிறந்ததும் அவனே; சிவனின் மகனாக வந்ததும் அவனே; இராமனின் காலமும் அவனே; கிருஷ்ணனும் அவனே; நபியும் அவனே; இயேசுவும் அவனே; புத்தனும் அவனே…!

புத்தரின் காலத்திற்குப் பின் கடவுளின் சக்தியைக் கொண்டு அவதாரம் யாரும் எடுக்கவில்லை. இராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் நபி புத்தர் இயேசு ஆகியோர் ஞான அருள் பெற்ற “ஞான தீபங்கள்” ஆவர்.

சிவனும் சித்தர் தான்…! அன்றும் அவதாரம் எடுத்தார் “இன்றும் அவதாரம் எடுத்திருக்கின்றார்…!” அன்றுள்ள காலத்தில் மக்களால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. இக்காலத்தில் மக்களின் மனமே மாறிவிட்டது.

கலியின் தன்மையைப் பார்த்தாயா…?

கலியின் தன்மை எல்லாம் மாற்றிடத் தான் மானிடருக்குத் தியானத்தைப் பற்றி சொல்கின்றேன் கல்கியின் தன்மையில் வந்து விட்டால் காவியத்தில் வந்துவிடும்… கருத்துடன் எல்லாம் நடந்து விடும் கர்ம பயனைப் பெற்றுவிடலாம் காவியத்தன்மையில் இடம் பெற்றிடலாம்.

இக்கலியுகத்தின் எண்ணமெல்லாம் காவியத்தில் நிலைத்திடாது காலப்போக்கில் அழிந்துவிடும்.
1.பறக்கும் மனிதனை இனி நீ காண்பாய்
2.பாரினில் உள்ள நிலை எல்லாம் பார்த்திடலாம்

பழிக்கும் எண்ணம் தான் இன்று உள்ளது பழிவாங்கிடும் நிலையே தான் இருக்கின்றது. நல்லதை எண்ணும் நிலை இல்லை… தூற்றிடும் உள்ளங்கள் தான் உண்டு.

கலியில் பிறந்த மனிதன் எல்லாம் காவியத்தில் வந்திடுவானா…? உன் அறிவுக்கு எட்டும் விஷயங்களை எல்லாம் சிறுகச் சிறுகப் பகிர்ந்திடுவேன்.

இராமாவதாரத்தைப் பற்றி விளக்கங்கள் சொன்னேன்… சிறு புள்ளிதான் அது…! கிருஷ்ணாவதாரத்தின் நிலையைப் பார். கிருஷ்ணனின் கதையிலேயே “கிருஷ்ணரின் பிறப்பின் ஜாதகத்தைக் கணித்து விட்டார்கள்...”

கிருஷ்ணனின் அவதாரம் என்ற நாளில் தான் ஜாதக நிலையும் வந்தது
1.பெரும் குறை (குழப்பம்) நிலையும் வந்தது.
2.மனிதனின் நிலையையே மாற்றியது கிருஷ்ணாவதாரக் காலத்தில் தான்.

இராமாவதாரம் முடிந்து கிருஷ்ணாவதாரம் ஆரம்பிப்பதற்குள் மனிதரின் நிலை எல்லாம் சிறிது சிறிதாக மாறிவிட்டது. கிருஷ்ணாவதாரத்தில் தோன்றிய சித்தன் தான் கிருஷ்ணாவதாரம் என்ற நூலையும் எழுதியவன்.

கிருஷ்ணன் என்பவன் பிறந்தானா…? பிறந்து வெண்ணையை அவன் உண்டானா…? வாயைத் திறந்து உலகத்தன்மையே காட்டினானா…? கிருஷ்ணன் என்பவன் யாரப்பா…?

மனிதர்கள் தங்களுடைய நிலைக்காக இராமாவதார நூலில் உள்ள “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற நிலையையே மாற்றி கிருஷ்ணாவதாரம் என்ற நூலில் கிருஷ்ணனுக்குப் பல மனைவிகளை அமைத்தார்கள்.

இராமாவதாரத்தில் உள்ள நிலையிலும் கிருஷ்ணாவதாரத்தில் உள்ள நிலையிலும் உள்ள மாற்றங்களைப் பார்த்தாயா…? இராமாவதாரத்தில் தந்தை சொல் தட்டாத தனயனும் சகோதரப் பற்றுமுள்ள தமயனையும் காணலாம்.

தர்மம் நியாயம் என்பதெல்லாம்
1.கிருஷ்ணாவதாரத்தில் தர்மயுத்தம் என்ற நிலையிலேயே அழிந்து விட்டது.
2.பெரும் சூதும் சூதாட்டமும் கிருஷ்ணாவதாரத்தில் அமைந்ததுவே.
3.தன் நிலை உயர்ந்திட எந்த நிலையிலும் இருக்கலாம் என்னும் பழக்கமே கிருஷ்ணாவதாரத்தில் தான் வந்தது.
4.சொல்லும் செயலும் மாறியதும் கிருஷ்ணாவதாரத்தில் தான்.

சித்தன் எழுதிய கீதையையே மாற்றி விட்டார்கள். கிருஷ்ணாவதாரத்தில் கீதையின் உபதேசங்கள் எல்லாம் படித்தவுடன் புரிகின்றதா…?
1.பாமரனுக்கும் புரிந்திடும் கீதையைப் பழிக்கும் நிலையில் விட்டு விட்டார்கள்.
2.குருவும் சிஷ்யனும் என்ற நிலையைக் குருடாக்கி விட்டார்கள்.
3.தான் கற்றதைப் பிறருக்குச் சொல்லும் நிலையில் இல்லாமல் மாற்றி விட்டார்கள்.

கோவில் குளங்கள் என்பதையே ஜாதி மதம் என்னும் தன்மையில் ஏற்றி விட்டார்கள். ஜாதியும் மதமும் கிருஷ்ணாவதாரத்தில் வந்ததுதான். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் கிருஷ்ணாவதாரத்தில் வந்தது.

ஏழை பெருத்தவன் சிறுத்தவன் பெரும் செல்வந்தன் என்னும் நிலையில் கிருஷ்ணரைச் செல்வந்தனாகவும் குசேலரைப் பரம ஏழையாகவும் காட்டியது கிருஷ்ணாவதாரத்தில் தான்.

நூலின் தன்மையையே அவரவர் இஷ்டத்துக்கு மாற்றி விட்டார்கள். கிருஷ்ணாவதாரத்திற்குள்ளே கிருஷ்ணன் என்பவன் இல்லை அப்பா. “கிருஷ்ணா…” என்னும் ஜெபம் ஓங்கிடவே கிருஷ்ணனின் கதையும் வந்ததப்பா.

சக்தியின் சக்தியே அக்கிருஷ்ணன் அப்பா. கிருஷ்ணனின் கதை எல்லாம் மனிதர்கள் (அவர்கள்) சொன்ன கதையப்பா. ஆகவே கிருஷ்ணனின் கதையைப் படித்துக் கிருஷ்ணனே இப்படித்தான் இருந்தான்…! என்னும் நிலை வேண்டாம்

கிருஷ்ணாவதாரக் காலத்தில் மனிதர்கள் இருந்த நிலையை வைத்துத்தான் கதையெல்லாம் உள்ளது. “தர்மயுத்தம்” என்பதும் மனிதர்கள் வைத்த கதை தான்

கிருஷ்ணாதாரத்தில் வந்த கிருஷ்ணனைப் பார்த்தவர் யாரப்பா…? இராமனும் வாழ்கின்றான்… கிருஷ்ணனும் வாழ்கின்றான்… கலியும் வாழுகின்றது கல்கியும் வருகிறது… “எல்லாமே ஈஸ்வர சக்தியின் ஆசியால்…!”