ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 27, 2024

“தன்னுள்ளேயே” ஈசனின் சொரூபத்தைக் கண்டவர் எல்லோருமே வருகின்றார்கள் கல்கிக்கு

“தன்னுள்ளேயே” ஈசனின் சொரூபத்தைக் கண்டவர் எல்லோருமே வருகின்றார்கள் கல்கிக்கு

 

விட்ட குறையினால் வந்து பிறந்தவர்கள் தானப்பா எல்லோரும். இன்று உள்ள கலியுகத்தில் விட்ட குறைகள் உள்ள மக்கள் எல்லோருமே ஜீவித்துள்ளார்கள்.

ஜனப்பெருக்கம் ஜனப்பெருக்கம் என்கிறார்கள் ஜனப்பெருக்கத்தைக் குறைக்கின்றார்களாம்… அவர்கள் ஆயுளை வளர்க்கின்றார்களாம்
1.இருப்பவன் இருந்து கொண்டே இருக்க வேண்டுமாம்…
2.ஜனப்பெருக்கத்தைக் குறைக்கின்றானாம்… ஆளுகின்றானாம் நாட்டை
3.அவன் ஜனப்பெருக்கத்தைக் காக்கின்றானாம் உளவறிந்து.

எப்படி இருக்கிறதப்பா இக்கதை எல்லாம்…?

கலியில் வந்து விட்டார்கள் விட்ட குறை உள்ளவர்கள் எல்லோருமே மனிதர்களாகவும் மற்ற ஜீவராசிகளாகவும் இனி பிறப்பவர்களும் இப்பொழுது கலியில் மடிபவர்கள் தான் பிறக்கிறார்கள்.

கலியின் கடைசி நிலையில் எல்லோருமே எல்லா ஜீவ ஜெந்துகளும் அவரவர்கள் செய்த பாவ புண்ணிய நிலையில் வந்து விடுகின்றார்கள். விட்ட குறை என்றதும் இதனால் தான்.

மனிதன் ஆடு மாடு பூச்சி புழு எல்லாமே வந்து விடுகின்றன இக்கலியின் கடைசியில். இக்கலியிலிருந்து தப்பி வடிகட்டி எடுப்பவன் தான் கல்கிக்கு வருகின்றான்.

கல்கியில் வருபவன் எல்லாம் யாரப்பா…?

1.இக்கலியில் விட்ட குறை உள்ளவர்கள் அல்ல.
2.இவ்வுலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு எடுத்த பிறப்பில் இருந்தெல்லாம்
3.எவன் ஒருவன் இக்கலியின் கடைசியில் தன் நிலை உணர்ந்து தன் மனத்தை மனம் என்னும் கோவிலாக்கி
4.மற்ற எல்லா நிலையையும் கடந்து முக்தி எனும் நிலை எய்தி
5.தன் நிலையை உயர்த்தி… தான் என்ற அகந்தையை விட்டுத்
6.தன்னுள்ளேயே ஈசனின் சொரூபத்தைக் கண்டவர் எல்லோருமே வருகின்றார்கள் கல்கிக்கு.
7.கல்கியில் வருகின்றார்கள் ஞான நிலை பெற்ற தீபங்கள் எல்லோருமே.

நீ நினைக்கின்றாய் ஆயிரம் ஜெபங்கள் இருந்து அடுக்கடுக்காக மந்திரங்கள் ஓதித் தான் பிறந்த நிலையை மறந்து விட்டு ஈசனுக்கு பூஜை செய்து… பல மந்திரங்கள் சொல்பவன் எல்லாம் வந்திடுவான் கல்கிக்கு என்று.

வருபவன் யாரெல்லாம் என்று ஜெப நிலையில் உணர்ந்திடலாம். தான் செய்த பாவ புண்ணியங்களைப் பொறுத்துத் தான் “வடிகட்டப்பட்டு வருகின்றான்” கல்கிக்கே.
1.கலியின் பாதையில் பகர்கின்றேன் தோட்டியும் வருவான் தொண்டனும் வருவான் என்று
2.கல்கிக்கு வருபவன் எல்லாம் கால வெள்ளத்தில் சிக்குண்டு பல கஷ்ட நஷ்டங்களையும் தன்னுள்ளே எண்ணிடாமல் பிறந்த பயனை எண்ணி
3.அந்நிலையின் உயர்வை ஊன்றி பிறந்த பயனை எல்லாம் எடுத்தவனே வருகின்றான் கல்கிக்கு.

என்னப்பா…? சொல்லும் பாடம் உனக்குத்தான்…!

கலியின் கடைசியில் வந்துள்ளோம் பிறந்த பயனை… விட்ட குறையை இக்கலியின் கடைசிக்குள் உன் ஜெபநிலையின் உதயத்தில் முடித்திடப்பா.

முதல் பாடத்தில் பகர்ந்த நீ விட்ட குறை என்ன…? என்று உனக்குள்ளே உணர்த்தி உள்ளேன். ஊன்றிப் பார்த்தால் இன்று உனக்குள்ள நிலை எல்லாம் சிறு தூசிதானப்பா… தூசியை ஊதிவிடு...!

உன் நிலையை… நீ விட்ட குறையை இக்கலியின் கடைசியில் நிலைக்கச் செய்வாய். பெரும் செயற்கை யுகத்தைக் கண்ட இம்மாமனிதர்கள் எல்லோருமே மூச்சிருக்கும் நிலையில் உன் சுவாச நிலையால் விட்ட குறையை முடித்திடப்பா.

உன் ஜெப நிலையின் தன்மையில் தான் ஐவர் மலையின் அந்தரங்கம் வந்துவிடுமப்பா. அந்நிலையில் வந்த பயனை எடுத்துத்தான் அங்கு நீ பதித்திடப்பா.

1.அவ்வார்வ எண்ணத்திலே உன் ஜெப நிலையை மாற்றிடாமல்
2.”ஒன்றே செய்வேன்… நன்றே செய்வேன்…” என்றுள்ள செய்யுளின்படி செய்திடப்பா நற்காரியத்தை.

இக்கலியின் கடைசியில் நிலைப்பவன் யார் என்பதெல்லாம் புரிந்திருக்கும் ஜெப நிலையும் புரிந்திருக்கும்

பல பாடங்களைப் பதித்துள்ளார் உன் மனதினிலே என் சிஷ்யன் (ஞானகுரு). படித்த பாடத்தை விட்டிடாமல் பாடம் மட்டும் கேட்டு விட்டால் உன் நிலைக்கு என்றப்பா வருவது…?

பள்ளிக்குச் சென்று படிப்பதெல்லாம் அறிவை வளர்க்கத் தான்.
1.வளர்ந்த பின் அறிவின் பயனைப் பெற வேண்டாமா…?
2.என்றப்பா அந்நிலைக்கு உன் நிலையை உயர்த்திடுவாய்…?

கால நிலையில் விஷத்தன்மை கலக்கின்றதப்பா மிகத் துரிதமாக… விஷத்தன்மையையும் வான மண்டலத்தையும் வென்றிடவே உன் ஜெப நிலையைக் கூட்டிக் கொள்ளப் பார்.

விட்ட குறையை முடித்திடப்பா வீண் விஷமிகளை எண்ணிவிடாதே, பாடத்தின் நிலை புரிந்ததா…?

48 நாள் என்ற பாடம் அன்றொரு நாள் உன் ஜெப நிலைக்கு முடிவு வைத்தேன். அந்த 48 நாளில் நடந்ததெல்லாம் என்னப்பா…? பார்த்திட்டாயா அவன் நிலையும் உன் நிலையும்.

48 நாளில் தேவனின் நினைப்பால் ஊன்றி வைத்தாய் கலசத்தை உன் நினைவில். அந்த 48 நாளில் உன் எண்ணமெல்லாம் அவன் தருவான் என்ற நிலையும் மறக்கச் செய்தேன். தந்தாலும்… உன் நிலைக்கு வேண்டாம் என்று நீயே உன் எண்ணத்தில் ஊன்றிக் கொண்டாய்.

பகைவன் என்பவனின் கஷ்டத்தையும் பார்த்திட்டாய் பாலகரின் நிலையையும் உயர்த்திட்டாய். உன் மனத்தையே ஒரு நிலை ஆக்கியுள்ளாய். இந்நிலையில் உனக்கு இந்த 48 நாட்களில் பகர்ந்துள்ள பல பாடங்களை மனநிலையில் ஒருநிலைப்படுத்தி உணர்ந்துள்ளாய்.

வாழ்க்கையில் வாழ்வு என்ன…? என்ற அர்த்தங்களும் அறிந்திருப்பாய், தியான முறையின் வழிகளையும் புரிந்திருப்பாய். சொல்வாக்கை அருளி இருப்பேன்.

இந்த 48 நாளில் சிறு குறையும் உள்ளதப்பா.
1.உன் நிலையை உயர்த்திக் கொள்… மனச் சஞ்சலத்திற்கு அடிமையாகாதே
2.ஆசை மனதினை அடக்கிடப்பா அந்நிலையில் வருவது தான் சுவையும் மற்ற எல்லாமே.

கலசத்தின் பயனைப் பெற்றவர் இங்கு உள்ளவரில் ஒருவன் தானப்பா. பகர்ந்தவரும் கலசத்தின் பயனைப் பெறவில்லை… கலசம் வைத்தவனும் நிலை நிறுத்த முடியவில்லை மனநிலையை.

அருளெல்லாம் அளித்துள்ளேன் இக்கலசத்தில். நாளை தியானத்தில் நல்ல அமுதை விட்டிடுவேன்… கலசத்தின் மகிமையைக் கண்டிடுவாய். இனி எல்லாமே உன் வழியில் நல்லாசிகள் தான் நடந்திடுமப்பா.

தேங்காயின் பலனைத் தெரு பூராம் தெரிவது வேண்டாம். மஞ்சள் துணியில் முடிந்து வைத்து… மாற்றான் பார்த்திடாமல் வைத்திடப்பா சில நாட்கள்.

உன் இல்லத்தினிலே உன் ஜெப நிலைக்கு அமரும் இடம் அமைத்தவுடன் நிலையில் (கதவு நிலை) கட்டிடலாம் “என் அங்கத்தின் அங்கத்தை…” அந்நாள் வரையில் உன் இல்லத்தில் பூஜிக்க முடிந்திட்டால் வைத்துக்கொள்.

பூஜை அறை வரும் வரையில் இங்கு இருக்கட்டும் என்ற எண்ணம் இருந்திட்டால் இங்கேயே விட்டுவிடு.

பூஜை அறையில் தேங்காய் உடைக்க வேண்டாம். தேங்காய் பழம் உடைத்து என்ற சொல் வருவது வேண்டாம். அவ்வோட்டில் “என்ன வாசனை வருகிறது….?” பழம் புஷ்பம் மட்டும் போதும்.

தேங்காய் உடைப்பதனால் தேவர்கள் அருளைப் பெறுகின்றார்களாம்… உடைக்கும் சத்தத்தில் தான் தேவர்கள் வருகின்றார்களாம் அத்தேங்காயின் தீர்த்தத்தைப் புசிக்கின்றார்களாம்

இவன் புசிக்க எடுத்து வருகின்றான்…! தேங்காயைச் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்பதில்லை. வந்த இடத்தில் தன் பசியை ஆற்றிக் கொள்ளத்தான் அதைக் கொண்டு வருகின்றான்.

வழி முறையில் வந்த சில மாற்றங்கள் இவைகள். சில வழியில் ஊருடன் ஒத்துச் செல்லுங்கள். “நமக்கு வேண்டாம் தேங்காய் உடைக்கும் தன்மை...” உடைத்த தேங்காயை எடுத்து வந்து விடாதீர்கள் இல்லத்திற்கு. பிறருக்கு அளித்து விடுங்கள் அல்லது பூசாரிக்கே அளித்து விடுங்கள்.