ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 4, 2024

எல்லாமே முதல் படி தான்… முடிவு என்பதற்கு இடமே இல்லை

எல்லாமே முதல் படி தான்… முடிவு என்பதற்கு இடமே இல்லை

 

பரஞ்சோதி வடிவானவனே
பரம பிதாவாகி நின்றாய்
பரம்பொருளை எல்லாம்
பகர்ந்திடுவாய் இம்மானிடர்க்கே

பாட்டின் ஆரம்பத்தைப் பார்த்தாயா…! இதை வைத்துப் பாட்டு எழுது. ஜாதி மதம் இனம் வேண்டாம் என்பதற்குத்தான் இந்தப் பாடலின் முதல் அடியைத் தந்துள்ளேன்.

இப்பாடலின் தொடரை இன்னும் ஒரு முறை உன் வழிக்கே விடுகின்றேன். பாடலின் வரிசை எல்லாம் நான் சொன்ன பிறகு பகர்ந்திடலாம் எல்லோருக்கும்.

1.எந்தச் சொல்லையும் எந்தச் செயலையும் எப்பொழுதும் முழுமையுறாமல் வெளியிடுவது நன்றல்ல… பிறரின் புகழ் நமக்கு வேண்டாம்.
2.பரம் பொருளின் பரம பிதாவாகிய எல்லாமே பரம இரகசியமாகத் தான் இருக்க வேண்டும்.
3.பெரும் சித்தர்களின் நிலை எல்லாச் சொல்லும் வெளியிடாமல் சென்றதன் இரகசியமும் இதுதான்.

முற்றும் அறிந்து விட்டேன் என்பவனின் நிலை எல்லாம் பார்த்தாயா…?
1.எல்லாமே முதல் படி என்பதன் பொருளும் இதுதான்….!
2.எப்படியும் முடிவு பெறுவது வேண்டாம்…
3.நம் உயிரே முடிவு பெறாமல் இருக்கும் பொழுது “எல்லாமே முடிவு பெறாமல் இருக்கட்டும்…” என்றதன் பொருளும் இதுதான்.

பூமியின் நிலையை அறிந்து விட்டாயா…! பெரும் பாற்கடலில் உள்ளே என்ன என்று எண்ணினாயா…? பாற்கடலைக் கடைந்தான் ஈஸ்வரன் என்கின்றீர்… உலகம் உருளுகின்றது என்கின்றீர்…!

உலகம் உருளுகின்றதன் மனம் (MIND) என்ன என்று தெரியுமா…? கடலும் உள்ளது; மலையும் உள்ளது; மடுவும் உள்ளது; மரமும் செடிகளும் உள்ளது; மனிதனோடு மிருகமும் உள்ளது; இயற்கை தந்த பொருளுடன் மனிதனால் சமைக்கப்பட்ட செயற்கையும் உள்ளது. இவற்றுடன் கலந்த ஓரினமும் உள்ளது…!

உலகத்தில் கலந்துள்ள செயற்கையைத் தான் காண்கின்றீர்கள். சாமியிடம் கேட்டீர்களா அவன் வழி சொன்னானா…? அதன் நிலை என்னப்பா...?
1.உன்னுள்ளே இருக்கும் ஈஸ்வரனையே அறிந்து கொள்ள முடியவில்லை
2.பூமியின் உள் நிலையை எப்படி அறிவாய்.

பூமித் தாய் என்னும் “என் தாய்” அங்குள்ளாள். ஒளியின் தன்மையையும் ஒளியின் ஒளியையும் ஒலியின் ஒளியையும் இழுத்துக் கவர்ந்து கொண்டிருக்கின்றாள்… அதிலே தான் நீ நிற்பதும் நடப்பதும்…!

பூமித்தாயின் ஈர்ப்பினால் ஒலியெல்லாம் ஒளியாகி அத்தன்மையை தன்னுள் ஈர்த்து மண்ணில் உள்ள காந்த சக்தியால் உலகை ஆட்டுவிக்கின்றாள்.

உன் எண்ணத்தினால் “எட்டாத பொக்கிஷங்கள்” எல்லாம் இப்பூமிக்குள் குவிந்திருக்கின்றது. பொக்கிஷம் என்றால் காசு பணம் அல்ல...!

உலோகத்தைத் தருகின்றாள்; உருவத்தையும் தருகின்றாள்; உலகத்தையே ஆட்டுவிக்கும் ஊட்டம் எல்லாம் தருகின்றாள்…!

பந்தைப் போன்று உலகம் உள்ளது என்கின்றார்கள். உலக உருண்டை செய்கின்றார்கள் பந்தின் உள்ளேயும் காற்று தான் உலக உருண்டை செய்வதிலும் உள்ளே காற்று தான் உள்ளது. அது போல் உலகின் உள் நிலையிலும் காற்று தான் உள்ளது (விஞ்ஞானிகளால் இன்னும் இதைக் காண முடியவில்லை).

நீ நினைக்கின்றாய் எடுக்க எடுக்க மண்ணும் உலோகமும் தண்ணீரும் தான் உள்ளது என்று.
1.உலகின் வெளி நிலையில் உள்ள காற்றை அறிந்தாயா…?
2.உலகில் வெளி நிலையில் வான் மண்டலம் எப்படி உள்ளதோ அந்நிலை தான் உள் நிலையும்.

உள் நிலையில் உள்ள காற்றெல்லாம் எங்கிருந்து வருகின்றது…? என்று எண்ணுகின்றீர்கள். உள் நிலை காற்று எல்லாம் உலகைச் சுற்றி உள்ள ஒளி ஒலி கலந்த காற்றே…!

நீ விடும் மூச்செல்லாம் பூமித்தாய் ஈர்க்கின்றாள்…! ஈர்க்கும் இம்மூச்சால் தான் இவ்வுலகம் சுற்றுகின்றது என்று முதல் பாடத்திலேயே சொல்லி இருந்தேன்.

ஒலி ஒளி எல்லாம் பூமியில் தாக்கும் பொழுது பூமி அச்சக்தியை தன்னுள் இழுத்துப் பாற்கடலையும் மனிதனையும் பெரும் மலைகளையும் தாண்டித்தான் ஈர்க்கின்றது.

இந்தப் பூமி ஒலியையும் ஒளியையும் காற்றையும் தன்னுள் இழுத்துச் சுற்றுவது தான் “இந்த உலகச் சுற்றே...” உலகின் உள்நிலையும் காற்றுத் தான் உலகின் வெளிநிலையும் காற்றுத் தான்.

இந்தப் பாடத்தின் விளக்கம் புரிந்ததா

நான் சொல்லும் நிலையில் சொன்னால் ஏன் கலக்கம்…? சாமி சொன்னால் தான் ஏற்பாயா…? எல்லாம் அவனே. அவன் சக்தியே… என்பதன் பொருளைப் பார்த்தாயா…?

1.வானுலகில் உள்ள ஒளியும்
2.தன் நிலையில் சுற்றும் ஒளியும் மண்ணுலகை வந்தடையும் தன்மையும் படிப்படியாக விளங்கும்.

படிப்படியாக என்பது நீங்கள் சொல்லும் ஒன்று, இரண்டு, மூன்று என்பது அல்ல சிறுகச் சிறுக என்பதுமல்ல. படி… படி… என்பதன் அர்த்தமே வேறப்பா கீழிருந்து மேல் செல்வது அல்ல படி.
1.ஒவ்வொன்றாக உள்ளதுவே
2.ஒவ்வொரு படியும் ஒவ்வொரு தன்மையில் உள்ளது.
3.ஒவ்வொன்றாக விளக்கம் தருகின்றேன்… தியான நிலைக்குச் செல்

தாயே தந்தையே வணங்கிடுவேன் என் முதல் தெய்வமாக
பெற்ற பயனைப் பெற்றிடவே அருள் செய்யுங்கள்
பெற்ற பயனை எல்லாமே பெற்றவுடன் முடிவுறாமல்
பெற்ற பெயரை எடுத்துத் தருகின்றேன்
“எனக்கு அருள் செய்வீர்களாக…”

நல் மனதைப் பெற்றிடவே நாட்டமெல்லாம் தந்திடுவாய்
“நான்… நான்…” என்று சொல்லை நம்மிடம் விட்டகற்றிடுவாய்
நன் மனதைப் பெற்றிடவே நமக்கருள்வாய்
நம்முள்ளே நீ வந்திடவே நாமெல்லாம் ஜெபித்திடவே
“நாமெல்லாம் போற்றிடுவோம் ஓம் ஈஸ்வரா”