ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 20, 2024

“துர்மரணம் அடைந்தவரின் உணர்வு…” அவர் மீது பாசம் கொண்டவரை எப்படி எல்லாம் பாதிக்கும்…?

“துர்மரணம் அடைந்தவரின் உணர்வு…” அவர் மீது பாசம் கொண்டவரை எப்படி எல்லாம் பாதிக்கும்…?

 

சந்தர்ப்பத்தால் ஒருவர் வேதனைப்படுகிறார்… துடிதுடிக்கின்றார்… என்று நாம் உற்றுப் பார்க்கின்றோம். வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருப்போம்… ஆனாலும்…
1.ஐயோ இப்படி ஆகிவிட்டதே…! என்று கூர்மையாக அதைப் பதிவு செய்து விட்டால்
2.அந்த உணர்வினை ஈர்க்கும் தன்மை அங்கே வந்து விடுகின்றது.
3.கூர்மையாகப் பார்த்தது நமக்குள் ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.

ஆகா…! நல்லவராக இருந்தார் இப்படிப் போய்விட்டாரே…! என்ற உணர்வினைப் பாய்ச்சப்படும் பொழுது அந்த உடலை விட்டு வெளி வந்த பின் யார் இவர் மீது பற்றாக இருந்தார்களோ அந்த ஆன்மா அவருக்குள் ஈர்க்கப்பட்டு விடுகின்றது.

அந்த உணர்வு இங்கே அதிகரித்து இருந்தால் இந்த உடலுக்குள் வந்து அதே வேலையைச் செய்யும். நான் பார்த்தேன் இந்த மாதிரி ஆகிவிட்டது என்று.

அதாவது… பக்கத்து வீட்டில் உள்ள நமக்கு வேண்டியவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துவிட்டால்… அவர் மீது பாசமான நிலைகள் கொண்டு… அந்தத் தூக்குப் போட்ட அதே உணர்வின் நினைவலைகள் நமக்குள் வரும்.

ஆக… எந்த அளவுக்குப் பற்றுடன் இருந்தாரோ அவர்களுக்குத் தான் இந்த நினைவாற்றல் வரும்.

அவர் மடிந்த பின்… இதே உணர்வுகள் இங்கே தூண்டப்பட்டு அஞ்சிடும் உணர்வுகள் இங்கே உந்தி தன்னை அறியாமலே கயிற்றில் கோர்த்துக் கொள்ளும் நிலை வருகின்றது. இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.

இதைப் போன்ற நிலையிலிருந்து நான் தப்ப வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…? விநாயகர் தத்துவத்தில் இது தெளிவாக்கப்பட்டுள்ளது

அதிகாலையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை வலுவேற்றிக் கொள்ள வேண்டும். துர்மரணம் அடைந்து விட்டால் “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் நம் உயிருடன் ஒன்றி அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இதை நமக்குள் பல முறை செலுத்த வேண்டும்.

பின்..
1.உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…
2.அந்த ஆன்மா அருள் ஒளி பெற வேண்டும் இருள் சூழா நிலைகள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் பாய்ச்சுதல் வேண்டும்.
3.இறந்து விட்டார் என்று கேள்விப்பட்ட அடுத்த கணமே அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் அருள் வட்டத்தில் இணைய வேண்டும்
4.உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் ஒளிச் சரீரம் பெற வேண்டும்.
5.அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று எண்ணி விட்டால் அந்த உணர்வுகள் நமக்குள் வராது… “உந்தித் தள்ளிவிடும்…”

அந்த குடும்பத்தைச் சார்ந்தவரும் இதன் வழிகளில் எண்ணினால் அவர்களும் அதை உந்தித் தள்ளிவிடலாம்.

இல்லை… “இப்படி ஆகிவிட்டதே” என்று சோகமும் வேதனையும் கொண்டு ஏங்கி விட்டால் விஷத் தன்மை கொண்ட உணர்வுகள் படர்ந்து தன்னை அறியாமலே சோக நிலையினை அடையச் செய்து இந்த உணர்வுகள் அந்தக் குடும்பத்திற்குள் இது கலக்கமாகி பல தீமையின் உணர்வுகளாக விளையும்.

1.விவசாயத்தில் பயிரினங்களை வளர்த்தாலும் அல்லது தொழில் செய்தாலும் அதே விஷத்தன்மைகள் படர்ந்து
2.அது நஷ்டமடையும் நிலையாகத் தான் செயல்படும் பயிரினங்களும் கருகிவிடும்.
3.குடும்பங்களிலும் பகைமைகள் உருவாகிவிடும்… பழி தீர்க்கும் உணர்வுகள் பரவிவிடும்.
4.அவர் தன் உடலை அழித்துக் கொண்டது போல ஒவ்வொரு செயலையும் அழித்திடும் நிலையாக அந்தக் குடும்பத்தில் வரும்.
5.குடும்பம் மிகவும் நசிந்து சாப அலைகளாக மாறி ஒருவரை ஒருவர் பாவ வினைகளில் சிக்க நேரும்.

இது போன்ற நிலை எல்லாம் மாற்றி அமைப்பதற்குத் தான் தத்துவ ஞானிகள் அதிகாலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை… துருவப் பகுதி வழியாக வருவதைக் கவரும்படி செய்து அதை பெறக்கூடிய தகுதி ஏற்படுத்தினார்கள்.

அதற்குத்தான் விநாயகரை நீர் நிலை இருக்கும் பக்கம் வைத்தார்கள் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ அந்த அருள் உணர்வின் தன்மை நம் மீது பட்டு விடுகின்றது.

உதாரணமாக… நாம் நல்ல குணங்கள் கொண்டிருந்தாலும் ஒரு நெருப்பு பாய்ந்து வந்தால் நல்லது செய்கிறேன் என்றால் நெருப்பு நம்மை விட்டு விலகிச் செல்கின்றதா…?

அல்லது ஒரு திரவகம் தவறிக் கீழே விழுந்த பின்… நான் நன்மை செய்தேன் என்று எண்ணிக் கொண்டிருந்தால் அது நம்மைப் பாதிக்காமல் இருக்கின்றதா…? நெருப்பாக இருந்தாலும் திரவகமாக இருந்தாலும் உடலில் பட்ட இடத்தினைச் சுட்டுப் பொசுக்கி விடும்.

ஆக
1.பகைமையற்ற நிலைகள் நாம் வாழ்ந்தாலும் பல நன்மைகள் செய்திருந்தாலும்
2.சந்தர்ப்பம் இது போன்ற அசம்பாவிதங்கள் அருகிலே நாம் இருக்கப்படும் பொழுது அந்தத் தீமைகள் வந்து விடுகின்றது.

இதெல்லாம் வந்துவிட்டால்… நான் நன்மை செய்தேனே என்னை ஆண்டவன் சோதிக்கின்றானே…! என்றால் அந்த உணர்வினை நம் உயிர் தான் (நம்மை) ஆண்டு கொண்டிருக்கின்றது.

வேதனையை நமக்குள் உருவாக்கிக் கொண்டால் உயிர் வேதனை அணுக்களை உடலுக்குள் உருவாக்கி அதைத்தான் இந்த உயிர் ஆளும். வேதனை அணுக்களைத்தான் வளர்க்கச் செய்யும் அந்த உணர்ச்சிகளை தான் ஊட்டும்.

காரணம் நாம் எண்ணுவதைத்தான் உயிர் உருவாக்குகின்றது உருவாக்கி உடலுக்குள் இருப்பதை ஆண்டு கொண்டும் இருக்கின்றது.

இதை நாம் தெரிந்து கொண்டோம்.
1.நாம் எதை நமக்குள் உருவாக்க வேண்டும்…?
2.எதை நமக்குள் ஆளக்கூடிய சக்தியாக உருவாக்க வேண்டும்…? என்பதை நாம் சற்று சிந்தித்தல் வேண்டும்.

அவ்வப்போது வாழ்க்கையில் வரும் தீமைகளை உடனுக்குடன் அகற்றிடும் சக்தியாக
1.அந்த அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் உருவாக்கி
2.அந்த அருள் ஞானிகள் உணர்வே நம்மை ஆளும் சக்தியாக நாம் அமைத்துக் கொள்ளுதல் வேண்டும்.