நான் வருவேன்… “எப்போதும் உன்னுடன்…!”
மனமே தான் நீ…! மனத்திற்கும் குரங்கிற்கும் ஒப்பிடுகின்றார்கள்… மனம் ஒரு குரங்கு என்கிறார்கள்…! ஆனால்
1.குரங்கின் நிலை வேறு மனிதன் நிலை வேறு
2.குரங்கின் நிலை ஒரு நிலையிலே தான் உள்ளது.
ஒரு பொருளையோ ஒரு செயலையோ குரங்கின் மனம் எண்ணிவிட்டால் “அதன் நாட்டம் எல்லாம் ஒரு நிலையில் தான் உள்ளது…” குரங்கு மரத்திற்கு மரம் தாவுவதை வைத்து மனநிலையும் குரங்கையும் ஒப்பிட்டார்கள்.
1.மனம் அல்ல குரங்கு… குரங்கல்ல மனம்…
2.குரங்கைப் பற்றி மனிதர்கள் கொண்டிருக்கும் அர்த்தம் வேறு... குரங்கிற்கும் மனிதருக்கும் உள்ள நிலை வேறு.
3.குரங்கின் எண்ணம் மாறாது… குரங்கின் செயலும் மாறாது… தன் எண்ணத்திலேயே தான் அது என்றும் உள்ளது.
மனம் – எண்ணம்… எண்ணம் - மனம் எல்லாம் ஒன்றுதான்.
உன் எண்ணம் எங்குள்ளது…? துரிதமான நிலையில் சொல்வதெல்லாம் உன் எண்ணத்திற்கு “உதயம்” வரத்தான்.
பாடத்தில் தடங்கல் வந்தால் பாடத்தின் தன்மையும் மாறி விடுகின்றது. எண்ணமும் செயலும் மாறி விட்டால் உன் நிலையும் மாறி விடுகின்றது.
நம் பிறப்பிலிருந்து ஒவ்வொருவருக்கும்… “அவருடைய வளரும் சூழ்நிலை… பெற்றோர்களின் பழக்க வழக்கங்கள்… சுற்றத்தாரின் பழக்கங்கள்…” எல்லாமே கலந்து விடுகின்றது.
இந்த நிலையில்
1.உன்னை நீ உணர வேண்டும்
2.உன் நிலையை ஒரு நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும்
3.தன் எண்ணம்… தன் மனம்… தன் செயல்… எல்லாம் ஒரு நிலையில் இருக்க வேண்டும்.
இந்த நிலையைப் புரிந்து கொண்டால் எந்நிலையும் கிட்டிவிடும் என்று பகர்ந்துள்ளேன் பலமுறை. குழப்பமுடன் உள்ளாய் இரு தினத்தில் இந்நிலையில் ஏன் குழப்பம்…? உன்னையே நீ காணும் பொழுது…!
எடுத்ததை முடிப்பாய்…! எண்ணியதைச் செய்வாய்…! செயலெல்லாம் அவன் செயல்…! அவன் செயல் என்று வந்த பிறகு மனநிலையை மாற்றி விடாதே...!
உலக நிலை மாறப் போகிறது உன் நிலையில் வெகு துரிதம் வேண்டும் தியான நிலையில். கருவின் நிலை வளர்வதற்குள் கருகிவிடும் உலகம் முழுவதுமே உருண்டு விடும்.
இந்நிலையில் உன் நிலையில் வெகு துரிதம் வேண்டும். தியான வழியினைப் பயன்படுத்தித் தப்புங்கள். பாவ புண்ணியம் என்ற அணுவின் அணுக்கள் எல்லாம் அணுவுடன் மோதும் நிலையில் உள்ளது.
இவன் வெடிப்பான் அவன் வெடிப்பான் என்று உள்ள பொழுதே இவன் வினை எல்லாம் வெடித்துவிடும் அணுகுண்டாக…! கூடி விட்டான் கூட்டாளியாக… கூட்டத்தினிலே புகுந்து விட்டான். இந்நிலையும் சரி இல்லை… பெரும் அழிவிற்கே இந்நிலை எல்லாம்…!
ஒன்றை ஒன்று ஊடுருபவன…! ஒருவன் நிலையில் நிலையல்ல… தன் நிலையை நிலைநாட்டப் பிறர் நிலையில் ஊடுருவுகின்றான்…. காசு பணம் தேடிடவே கடல் கடலாக அலைகின்றான்.
உன் நிலையை எண்ணிடாமல் அவர் நிலையினை எண்ணுபவன் ஒரு சிலரே… உன் நிலைக்குப் புரிந்திடாது.
இயற்கையின் தாக்கலே பெரும் விஷமாகத் தாக்கிவிடும் (அம்பு எய்து விழும் காட்சி)
1.வருடம் அல்ல நாளல்ல… வருவதெல்லாம் பேரழிவு தான்
2.பூமித் தாயும் தாங்க மாட்டாள்.
அந்த அணுவின் நிலையை. அணுவின் பாடத்திலேயே புரிந்திருக்கும் இவன் விட்ட அணுவெல்லாம் இவனையே தாக்குகின்றது. நல்லெண்ணம் எங்குள்ளது…? தர்ம நியாயம் மறைந்து விட்டது.
செயற்கையுடன் வாழ்பவனுக்கு இயற்கை நிலை எதற்கப்பா…? சீறிடுவாள் இயற்கை அன்னை… இவனின் செயற்கை இவனையே அழித்துவிடும்.
விஞ்ஞானத்தைக் கண்டவன் எல்லாம் மெய்ஞானத்தைக் கண்டானா…?
1.விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்திருந்தால் நல்ல நிலை பெற்றிருக்கலாம்
2.மெய்ஞானத்தையே மறந்திட்டான்.
விஞ்ஞானத்தில் உயிரணுவைச் செய்திடச் சொல் பார்க்கலாம்…!
இயற்கை அன்னை தந்த உயிரணுவை வைத்துத் தான் இவன் விஞ்ஞானம் எல்லாம். விஞ்ஞானம் எல்லாம் அழிவிற்குத் தான்…!
1.இராக்கெட்டின் நிலையிலேயே மறந்திட்டான்
2.பறந்து என்ன பயன் கண்டான்…?
3.தன் நிலையை உணராதவன் செய்திட்டான் இராக்கெட்டை.
தேய்வ ஞானம் மறைந்ததப்பா தெய்வீகமும் மறைந்ததப்பா தேவனையே மறைத்திட்டான் தேவலோகம் சென்று பார்க்கின்றானா…? பார்த்து என்ன பயன் கண்டான்…? பாரில் உள்ளவர்க்குப் பகர்ந்திட்டானா…?
1.அவன் (ஈஸ்வரன்) அருளைப் பெற்றிடப்பா…!
2.அவன் இல்லாமல் யாரும் இல்லை
3.அவனே தான் உலகமப்பா
4.அவனே தான் நீயுமப்பா நானுமப்பா
5.அவனையேதான் நினைத்திட வேண்டுமப்பா
6.கலியின் தன்மையை மாற்றிடப்பா
7.காவியத்தில் வந்திடப்பா
8.கல்கியாக நிலைத்திடப்பா…!
மனிதன் மனதை மாற்றிடுங்கள்…! வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பாதை எதற்கு…? என்னும் நிலை வேண்டாம். புகட்டிடுங்கள் குழந்தைகளின் மனதிற்கு எல்லாம்.
எல்லோருக்கும் தான்… இதைச் செய்யச் சொல்கின்றேன்…!
இன்றைய கால நிலையைப் பற்றிச் சொல்… மனிதனின் நிலையைப் பற்றி புரிந்திடச் சொல். சிறு குழந்தைக்கும் புரியும் நிலையில் பகர்ந்துவிடு.
1.சிறுவர் சிறுமியருக்கெல்லாம் புரியும் தன்மையிலே அவர் நிலைக்கு நீ சென்று சொல்லி
2.அவரின் அன்பை எல்லாம் பெற்றுக் கொண்டு இன் அன்பைத் தந்துவிடு.
3.நான் வருவேன் உன்னுடன்…!
எந்த நிலைக்குச் சென்றாலும் எவ்விடத்திற்குச் சென்றாலும் புகட்டிடுவாய் பாலரின் மனதிற்குள்ளே. பாலரின் மனதை ஈர்க்கப் பகர்ந்துள்ளேன் இந்தப் பாடம் எல்லாம்.