ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 19, 2024

ஆண்டவன் எங்குள்ளான்…?

ஆண்டவன் எங்குள்ளான்…?

 

நடக்கின்றது பங்குனி உத்திரக் காவடி ஆட்டம்… ஆட்ட்த்தில் கலந்திட்டேன் நானும் அதிலே காவடி ஆடிட…! செப்பிடுவான் என் சிஷ்யனும் (ஞானகுரு) வந்து.

நீ பிறந்த ஊரிலும் பிறந்த ஊர் என்பது உன் முதல் ஜென்மத்தைச் சொல்கின்றேன்… மிகவும் முக்கியம்…! நீ பிறந்த ஊரிலும் உன்னால் ஸ்தாபகம் செய்த கோவிலிலும் நடக்கின்றதப்பா பங்குனி உத்திரம் பெரும் விமரிசையாக.

ஊரின் பெயரைச் சொல்லிவிட்டால் உன் கவனம் எல்லாம் அதனுள்ளேதான். உன் தியானத்திற்கு விடுகின்றேன்… கண்டிடுவாய்… அந்நிலையில் காவடியையும் கண்டிடுவாய்.

அழகான துறையினிலே உன் அருளால் அமைந்ததப்பா… அத்திருஸ்தலமே…! உனது புகழ் உலகமெங்கும் ஓங்கிடும் நிலையில் இருந்திட்டாய் போன ஜென்மத்திலும்.
1.உன் பெயருக்கும்… உன் உடலின் பெயருக்கும்… போன ஜென்மத்திற்கும் தொடர்பு உள்ளதப்பா.
2.இந்நிலையை எந்த ஜோசியனும் சொன்னானா…?

உலகெங்கும் தெரிந்த கோயில் இந்த ஜென்மத்திலும் உன்னுடன் தொடர்புடைய கோவில்… இப்பொழுது இருக்கும் நிலையில் தொடர்பில்லை.

உன் நினைவில் போகரின் ஸ்தாபகத்தால் வந்த ஸ்தலம் என்ற எண்ணம் தான் நிலை புரிந்ததா…! போகரின் எண்ணம் எல்லாம் உன் நினைவில் வந்திடுவதும் போன ஜென்மத் தொடர்பினால் தான்.

போகர் தான் பெற்ற பயனால் இன்றும் உள்ளார்… என்றும் இருப்பார் முருகனாகவே…! பெரும் முருகர் ஸ்தலமைத்தாய்…! முதல் ஜென்மத்தில் விட்ட சிறு குறையினால் வந்ததப்பா இந்த ஜென்மம்.

விட்ட குறையை இந்த ஜென்ம நிலையில் ஸ்தாபிதம் செய்து விடப்பா...! போகரின் நிலையில் வந்திடவே ஸ்தாபிதம் செய்திடப்பா…! செய்த பலனினால் தான் உன் துடிப்பும் ஆர்வமும் அதிவேகமும் போகரும் பகர்ந்திடுவார் அவசரக்காரன் என்று.

நான் சொன்ன நிலையைப் பார்த்தாயா…! உன் நிலையை எண்ணிப்பார்… உன் துடிப்பும் வேகமும் தான் உன் நிலையை உயர்த்தி விட்டது.

விட்ட குறையை முடித்திடப்பா…!
1.உன் துடிப்பினாலும் துரிதத்தினாலும் எந்நிலையிலும் துரிதமுள்ள நீ…
2.என் வழியில் உன் நிலை அமைதியில் வருகின்றதப்பா (தியான நிலை).
3.அந்நிலையிலேயே தொடரட்டும் ஜெப நிலை. வடிகால் அமைத்து விட்டேன்… பாய்ந்திடட்டும்… பரிபக்குவமாக வளர்ந்திடுவாய்.

பங்குனி உத்திரத்தில் பகர்ந்துரைத்தேன் உத்திரத்தின் தன்மை எல்லாம் ஒரு நிலையில் உள்ள மனிதர்கள் ஒன்று சேர்ந்து மகிழ்ந்திடவே உத்திர நாட்கள் அமைந்ததப்பா.

அன்புடனே அன்னதானம் பகிர்ந்துண்டு ஆண்டவனை நினைத்திடத் தான் “பண்டிகை நாட்கள்” எல்லாம் பாரினில் வந்ததப்பா…!

இன்றுள்ள நிலை எல்லாம் ஒட்டு மொத்தமாகச் சேர்த்து வருடம் முழுவதும் வேண்டும் வேண்டுதலை… தன் நிலை உயர்த்திட எடுக்கின்றார்கள் காவடியை. வெறும் களியாட்டம் நடக்கின்றது.

காவடியில்…. “தெய்வ அருள் வந்திடும்… அந்நாளில் பகர்ந்திடும் சொற்கள்” எல்லாம் பாமரர்களுக்கு நல்ல உணர்வுகளை அளித்திடுவார்கள் அச்சித்தர்கள்.

அருள் வரும் தன்மை எல்லாம் இன்றைய நிலையில் யார் வருகிறார்களப்பா…? (தன் நிலையைக் கேட்பதற்கு ஆவி நிலையை அழைக்கின்றார்கள்).
1.அவர்கள் உடலில் முருகனும் விநாயகரும் வருவதல்ல அருள் நிலையில்.
2.ஆவி உலகத் தன்மை தான் சிலரின் உடலில் வந்து ஆடுகிறது... சில அம்மன் கோவில்களில் வருவதெல்லாம் ஆவி நிலைகள் தான்.

சித்தர்களின் நிலை எல்லாம் சில அபூர்வத் தன்மைகளிலே தான் தோன்றிவிடும்.
1.சித்தர் நிலை வருவதெல்லாம் சீருடனும் சிறப்புடனும் சொல் ஆற்றலுடனும் மிக அவசியமான நிலையில் வந்திடுமப்பா.
2.ஒரு நொடி தான் பகர்ந்திடுவர் பரிபக்குவ நிலையில்…!
3.உலக ஆசைகள் உள்ள சித்தர்கள் தான் வருவார்கள் (அதுவும் என்னைப் போல்).

ஆவியின் தன்மை வைத்துத் தான் அழைக்கின்றார்கள் பெரும் ஜாதகக்காரர்களும் சாமியார்களும் சில வைத்தியர்களும் கூட…! தன் நிலையில் ஆவியின் நிலையை நிறுத்திக் கொண்டு அவ்வாவிகளின் உதவியுடன் செய்கின்றார்கள் இந்நிலையெல்லாம்.

செய்யட்டும் செய்யட்டும்… நன்மைகளை செய்யட்டும்… ஆண்டவர் ரூபத்தில் வந்தாலும் ஆவிகள் செய்தாலும் நன்மைக்கே செய்யட்டும்...!

ஆவியின் தன்மையை வைத்து ஆண்டவனையே இழுக்கின்றார்கள் பெரும் ஆணவக்காரர்கள். குட்டிச்சாத்தானை வைத்துக்கொண்டு குடிகளைக் கெடுக்கிறார்கள்

ஆவியின் பசிக்கு அளிக்கின்றான் பல உணவுகளை. ஆண்டவனின் பெயரால் ஆண்டவனின் பெயரையே சக்கி மாதாவின் ஜோதியையே மாற்றி விட்டார்கள் குட்டிச்சாத்தான்கள்.

உலக நிலையையே மாற்றுகின்றது இந்தக் குட்டிச்சாத்தான்கள். “ஒற்றன் வடிவிலும்” உள்ளான் இக்குட்டிச்சாத்தான். ஆட்சி நடத்துகின்ற பெரும் ஆணவக்காரனிடமும் உள்ளான் இக்குட்டிச்சாத்தான்… செய்யும் வேலையெல்லாம் அந்தக் குட்டிச்சாத்தானால் தான்…! குட்டிச்சாத்தானின் பசிக்கும் தான் தன் கழிவைத் தானே பருகுகின்றான்

உலக நிலையைப் பார்த்தாயா…!

குட்டிச்சாத்தானின் வேலைகளை எல்லாம்… அந்த ஆவிகளை அடக்க ஆண்டவன் இல்லையா…? என்றிடுவாய்.

ஆண்டவர் எங்கப்பா உள்ளார்…? அவனவன் மனமே தான் ஆண்டவன் என்று பகர்ந்திட்டேன்.
1.அவன் மனமே குட்டிச்சாத்தானிடம் சிக்கியுள்ள பொழுது
2.ஆண்டவன் எப்படிக் காப்பாற்றுவான்…?

பெரும் திருடனும் அழைக்கின்றான் ஆண்டவனை… அன்புடன் மழலையும் அழைக்கின்றது ஆண்டவனை…! எந்நிலைக்கும் அவன் ஜோதி நிலைதான்.

அவன் நிலையில் இருந்துதான்… அவன் ஆசி பெற்ற சித்தர்கள் ஆளுகின்றார்கள் மனிதர்களை…!
1.அவரவரின் மனநிலைக்கேற்ப அவர்கள் அழைக்கும் தன்மைக்கு
2.அவரவர் புரிந்திடும் நிலையிலும் சித்தர்கள் அருள்கின்றார்கள்.

முருகா என்று அழைத்திட்டவர்களுக்கு… அவன் அழைக்கும் நிலையில் அன்புடன் அழைப்பவர்களுக்கு அவன் கஷ்டத்தையும் அவன் நிலையையும் உணர்ந்து அருளுகின்றார்கள்… “போகரும் பல சித்தர்களும்…”

அவரவர்களின் இஷ்ட தெய்வத்தை அழைப்பவர்களுக்கும்… அழிவின் நிலையை நாடுகின்றவனுக்கும்… அழைக்கும் தன்மையில் அவ்வழுகிய அணுவின் வழியில் தான் வந்து அவனிடம் அண்டிக் கொள்கின்றது அவன் நிலையில் உள்ள ஆவிகள். ஆனால் இவன் நினைக்கின்றான் ஆண்டவனே இவனுக்குள் அருள் புரிந்தான் என்று.

நல் உணர்வில் நல் நிலையில் நல் நினைவில் உள்ளவர்களுக்கெல்லாம் நல்லோரின் ஆசி பூ மழையாகப் பொழிகின்றது.

தீய நினைவில் உள்ளவரின் நிலையில் எல்லாம் தீய நிலையில் உள்ள ஆவிகள் அண்டிக் கொள்கின்றன. இப்போது புரிகின்றதா ஆண்டவன் எங்குள்ளான்…? என்று.

ஆண்டவன் என்பவன் யாரப்பா…?

இயற்கையில் ஒன்றிட்ட…
1.இயற்கையே தான் ஆண்டவன் காற்றே தான் ஆண்டவன்
2.சூரியனே தான் (வெளிச்சம் ஒளி) ஆண்டவன்.
3.தண்ணீர் தான் ஆண்டவன்
4.ஒளியும் காற்றும் தண்ணீர் இந்த மூன்றும் தான் ஆண்டவன்.
5.இயற்கை அன்னை இயற்கை சக்தி என்பதெல்லாம் இந்த மூன்றும் தான்.

ஆண்டவன் என்பவன் எங்குள்ளான் என்ற நிலை புரிந்ததா…?

இப்பாட நிலையை எந்நிலையிலும் பகர்ந்திடவில்லை நானும். என் சிஷ்யனையும் வாயடக்கி விட்டேன் பல நாட்களாக. உன் நிலைக்குப் புரிய வைத்தேன் சில துளிகள்.

உங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளுங்கள். கலியுகம் மாறுகின்றது கல்கியுகம் வருகிறது என்பதெல்லாம் இக்கால நிலையைக் கொண்டுதான்.

ஆண்டவன் எங்குள்ளான் என்பவனைக் கேள்… ஆற்று வெள்ள வந்திடும் பொழுது அடித்துச் செல்கின்றானே அனைத்தையும்… “அவன் தானப்பா ஆண்டவன்…” ஒவ்வொரு வழியையும் பிரித்துச் சொல்ல வேண்டுமாப்பா…?

ஆண்டவன் எங்குள்ளான்…? என்பதை… “இந்தப் பாடத்தை” எந்த நூலிலும் படித்திருக்கின்றாயா…?