ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 12, 2024

உங்கள் நல்ல அறிவைக் காக்கச் செய்யும் எம்முடைய அருள் உபதேசம்

உங்கள் நல்ல அறிவைக் காக்கச் செய்யும் எம்முடைய அருள் உபதேசம்

 

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலேயும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்ற நினைவை நீங்கள் அடிக்கடி உடலுக்குள் செலுத்தினால் போதும்.
1.நீங்கள் அப்படி எண்ணும் பொழுதெல்லாம் அதை பெறச் செய்வதற்கும்
2.உங்கள் உடலுக்குள் ஊடுருவிச் சென்று அது சக்தி வாய்ந்ததாக மாறும்படியும் செய்கின்றோம்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தி உள்ளே சென்ற பின் உங்கள் நல்ல அறிவை மறைத்துக் கொண்டிருக்கும்… நஞ்சான இருள்களை நீக்கிவிடும்.

அதற்குத் தான் இதை இப்பொழுது யாம் உபதேசிப்பது. ஏனென்றால் இந்த உபதேசத்தின் உணர்வுகள் உங்கள் நல்ல அறிவைக் காக்கப் பயன்படும்.

பிறர் வேதனைப்படுவதை உற்றுப் பார்த்த பின் மீண்டும் மீண்டும் அந்த உணர்வுகள் எப்படித் தோன்றுகின்றதோ… தூண்டுகின்றதோ… நினைவு வருகின்றதோ… அதைப் போன்று தான்
1.உங்களுக்கு இதைத் திரும்பத் திரும்பச் சொல்வது
2.அப்படிச் சொன்னால்தான் அந்த உணர்ச்சிகள் தூண்டும்… உங்களுக்கு புரிய வரும்.

சந்தர்ப்பத்தில் வேதனையைப் பார்த்த பின் இருண்டு விடுகின்றது உங்களுடைய செயலாக்கங்கள் மாறுகின்றது. இது வளர்ந்து விட்டால் அந்த நல்ல அறிவின் செயல் முழுமையாக இழந்து விடுகின்றது.

அதை மாற்றுவதற்குத்தான்… மகரிஷிகளின் அருள் சக்தியையும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியைம் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியையும் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களை நுகரும்படி செய்து… உங்கள் கண்ணின் கருவிழிக்குள் பதிவு செய்து… இந்த உணர்வின் ஆற்றலை உங்கள் நல்லறிவினை… எதனையுமே அறிந்து தெளிவாக்கிடும் அந்த ஞானத்தின் நிலையைக் காத்திட இதை உபதேசிப்பது.

1.உங்களை அறியாமலேதான் இதைப் பதிவு செய்கின்றேன்
2.மீண்டும் நீங்கள் நினைவு கொண்டால் உங்களை அறியாமலே பல அற்புதங்கள் நடக்கும்
3.தீமைகளை நீக்கிடும் ஆற்றலும் நீங்கள் பெறுகின்றீர்கள்.

அதைப் பெறச் செய்வதற்குத் தான் எனது குருநாதர் காட்டிய வழியில் அருள் ஞானியின் உணர்வை நுகர்ந்து அதே உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து உங்களை அறியாது நல்லறிவை மறைத்துக் கொண்டிருக்கும் சிறு சிறு திரைகளை நீக்கும்படி செய்கிறோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நல்ல அறிவுக்குள் இணைக்கச் செய்யும் பொழுது ஒவ்வொரு நொடியிலும் உங்கள் நல்ல அறிவைத் தெளிவாக்கிக் கொண்டு வர முடியும்.

அப்படி நீங்கள் தெளிவாக்கிக் கொண்டு வந்து உங்கள் வாழ்க்கையில் அது முழுமை பெற்றால் சந்திரன் எப்படிப் பூரண பௌர்ணமியாகப் பிரகாசிக்கின்றதோ அதே போல உங்கள் உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் “ஒளியின் சிகரமாக மாறுகின்றது…”

இந்த உடலை விட்டு எப்பொழுது சென்றாலும் உங்கள் உயிரான்மா பிறவி இல்லாப் பெரு நிலைகள் அடையும்.

இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே வரும் தீமைகளை அடக்கி… நம் எண்ணத்தால் தீமையற்ற செயல்கள் வராதபடி செயலாக்காதபடி நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.