ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 21, 2024

தியான நிலையும் சுவாச நிலையும்

தியான நிலையும் சுவாச நிலையும்

 

இதை உன் எண்ணத்தில் ஊன்றிடப்பா…!
1.எண்ணும் எண்ணத்தை ஜெபத்துடன் கலந்திட்டு ஓங்கார ரூபத்தில்
2.“ஓம் ஈஸ்வரா…” என்ற நாமத்தை உன்னுள்ளே இழுத்திடப்பா அவ்வீஸ்வரனை.
3.”ஓம் ஈஸ்வரா…” என்னும் நாமத்தை வெளியிடப்பா…
4.மறுபடியும் இழுத்திடப்பா உன்னுள்ளே…!
5.ஓம் ஈஸ்வரா நம… ஓம் ஈஸ்வரா நம…! உன்னுள்ளே சுற்றும் தன்மையில் வந்திட வேண்டுமப்பா.

இப்பொழுது நீ இருக்கும் ஜெப நிலையில் ஓம் ஈஸ்வரா என்னும் நாமத்தை இழுக்கும் பொழுது தடைப்படுகின்றது… நாமம் வெளியிடும் பொழுதும் தடையுடன் வெளி வருகின்றது.

ஓம் ஈஸ்வரா… என்ற நாமம் உன் உடலுக்குள்ளேயும் உன் உயிரிலும் உன் அங்கங்களிலும் உன் அங்கத்தின் அங்கமான எல்லா அணுக்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும் தன்மையில் “உன் ஜெப நிலை வரவேண்டுமப்பா…”

ஜெபம் செய்பவர் எல்லாமே சித்தனாக யோகியாகவும் இருக்க வேண்டும் என்பதல்ல. எல்லோரின் எல்லா அருளையும் பெற்றிடலாம் ஈஸ்வரன் என்ற நாமத்தை இழுத்திட்டால்.

ஈசனின் நாமத்தைப் பகிர்ந்திட்டாலே உன் சுவாச நிலையின் தன்மைகள் மாறிவிடுமப்பா.

தியானத்தில் அமர்ந்தால்… உன் நிலை எல்லாம் பெரும் கலக்கத்துடனும் குழப்பத்துடனும் குறையுடனும் பெரும் ஆவேசத்துடனும் ஏனப்பா அழுகின்றாய்…?

நற்சுவாச நிலை எடுத்திடப்பா… அழுகும் நாற்றம் அண்டிடாது… பூவின் மணமும் வந்திடுமப்பா உன் சுவாச நிலைக்கு…!

தியானத்திற்கு உன் கையால் வாங்கிடப்பா தினமும் புஷ்பத்தை… அளித்திடப்பா அவ்வீஸ்வரனின் நாமத்தைச் சொல்லி அர்ச்சனையாக. பிற நிலை எல்லாம் மாற்றிடப்பா.
1.ஜோதி நிலையானவன் (ஈசன்) வந்து
2.ஜெகஜ்ஜோதியாக உன் வாழ்க்கையில் அருள் புரிவான்.

அவசர நிலை உனக்கு… அதற்குள்ளே விழித்திட்டாய். ஏன்…? நான் பகர்ந்த தியான நிலையிலேயே இருந்திடப்பா.

துவேஷ எண்ணத்தை விட்டிடப்பா. உன் வழியில் உன்னைத் துவேஷிப்பவர்கள் துவேஷிக்கும் சொல்லெல்லாம் திரும்பிவிடும் “அவர்கள் நிலைக்கே…”

விதை விதைப்பவன் விதை அறுப்பான் வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்ற சொல்லைக் கேட்டிருப்பாய். துவேஷ நிலை இனி உனக்கு வேண்டாம்.

பேரானந்தப் பெருநிலை எய்திடவே இத்தியான நிலை. பெரு நிலை என்பது மாட மாளிகை கட்டி… பெரும் சொத்துக்களுடன் வாழும் வாழ்க்கை அல்ல.

1.பெரும் பேறு என்பது அவ்வாத்ம ஜோதியுடன் நீ ஐக்கியமாவது தான்
2.பகர்ந்த வழியில் சென்றிடுவாய்… வந்திடுவேன் நானும் உனக்குள்ளே…!