ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 1, 2024

“அடுத்தவர்களை… அயோக்கியர்கள் என்றும் தீயவர்கள் என்றும்” எண்ணும் பழக்கத்தை நாம் மாற்ற வேண்டும்

“அடுத்தவர்களை… அயோக்கியர்கள் என்றும் தீயவர்கள் என்றும்” எண்ணும் பழக்கத்தை நாம் மாற்ற வேண்டும்

 

காந்திஜி சகோதர உணர்வு கொண்டு மக்களைப் பற்றி எண்ணினார்
1.உன் எண்ணமே உனக்குக் கடவுளாக இருக்கிறது என்றும்
2.ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு உயர்வாக எண்ண வேண்டும் என்று தற்காலத்தில் தோன்றிய அந்த ஞானி சொன்னார்.

அவரைச் சந்தித்தவர்களும் உண்டு.

செல்வமான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் ஆண்டி போலத் தான் வாழ்ந்தார். சொத்து சுகத்திற்கு அவர் ஆசைப்படவில்லை… கால் நடையாகவே நடந்து சென்றார்,

தனக்குள் தெளிந்த மனங்கள் பெற வேண்டும்… எல்லோரும் சகோதர உணர்வுடன் வாழ வேண்டும் வளர்ந்திட வேண்டும்… ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்… மன பேதம், இன பேதம் மொழி பேதம் இன்றி வாழ வேண்டும் என்று சொன்னார்.

ஆனால் கடைசியில் அவருக்குக் கிடைத்த பரிசு “இந்த உடலை விட்டு நீ போய்விடு…!” என்று சுட்டுக் கொன்றார்கள். மதத்தின் நிலை இனத்தின் நிலை கொண்டு அவருடைய நிலைகளைத் தூக்கி எறிந்து விட்டார்கள்.

உடலில் குண்டு பாய்ந்த போதும் அவர் இந்த உடல் பற்றில்லாதபடி “ராமா… ராமா… ராமா…!” என்றார். நாம் எதை எண்ணுகின்றோமோ அதுதான் சீதா ராமா.
1.எல்லோரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற உணர்வினைத் தனக்குள் அந்தச் சுவையை எண்ணினார்
2.குண்டின் தாக்குதல் ஆன போதிலும் அதை எண்ணாதபடி ராமா… ராமா… என்றார்.

நாம் அடிபட்டால் ஐய்யய்யோ என்று தான் சொல்வோம். ஆனால் அவர் எதைக் குறிக்கோளாக வைத்தாரோ தாக்கப்பட்ட பின்னும் ராமா… என்ற சொல்லே வந்தது. அந்தச் சொல்லுடன் தான் அந்த ஆன்மா வெளி வருகின்றது.

அந்த ராமன் யார்…? மகிழ்ச்சியின் நிலைகள். அதாவது
1.எல்லோரும் மகிழ்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தினை அவருக்குள் வளர்த்தார்
2.அதுதான் சீதா ராமா… அந்த எண்ணம் கொண்டே அவர் செயல்பட்டார்.

ராமன் அம்பை எய்தான் என்றால் கணைகளைத் திருப்பி வாங்கிக் கொள்வான். மகரிஷிகள் காட்டிய உணர்வின் தன்மை கொண்டு அரசியல் வாழ்க்கையிலும்
1.தெய்வீகப் பேரன்பு கொண்டு மக்கள் அனைவரது உயிரையும் கடவுளாக மதித்து
2.மத பேதமில்லாது இன பேதம் இல்லாது சகோதர உணர்வுடன் வாழ வேண்டும் என்ற உணர்வுடனே வாழ்ந்தார் காந்திஜி.

ஆனால் அவர் சொன்னபடி… “எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்” என்ற நிலைகளைச் சொல்வோரும் கடைப்பிடிப்போரும் இன்று இல்லை.

காந்தியினுடைய பெயரைச் சொல்லி
1.தன்னுடைய கௌரவத்தைக் காத்துக் கொள்ளவும்
2.தன் வாழ்க்கையில் புகழுக்காக ஏங்க முடிகின்றதே தவிர
3.காந்திஜி செய்த உயர்ந்த நிலையை ஒரு துளி அளவு கூட யாருக்கும் செய்யும் எண்ணமில்.

காந்திஜி போன்று வினோபாஜி சில நிலைகளைச் செய்தார்… மக்களுக்கு நிலங்களை பங்கிடச் செய்தார்… எல்லோருக்கும் கொடுக்கச் செய்தார்…!

அதன் அடிப்படையில் அதற்குப் பின்… வினோபாஜியின் சீடர்கள் காந்திஜியின் சீடர்கள்…
1.நாங்கள் தர்மத்தைச் செய்கிறோம் என்ற பெயரில் வந்தவர்கள்
2.”அடுத்தவர்களை எல்லாம் அயோக்கியர்கள்” என்றே சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

காந்தியின் தத்துவத்தைப் படித்தோர் அனைவரும் நியாயத்தை தனக்குள் வைத்துக் கொண்டு
1.உலகில் உள்ள “மற்ற அனைவரும் தீயவர்கள்” என்று தான் சொல்வார்கள்
2.ஆனால் காந்திஜி சொன்னது “எவரும் தீயவர்கள் அல்ல…!” சந்தர்ப்பம் தான் தீயவர்களாக ஆக்குகின்றது.
3.அந்தத் தீமையிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்று அவர்களுக்காக நீ தியானி
4.யார் எந்தத் தவறு செய்தாலும் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று ஆண்டவனாக நீ கருதி ஆண்டவனிடம் வேண்டு.

ஆண்டவன் யாரென்று காந்திஜி சொல்லவில்லை என்றாலும் எந்த மதத்தின் அடிப்படையில் ஆண்டவன் என்றோ கடவுள் என்றோ இறைவன் என்றோ நீ வேண்டுகின்றாயோ…
1.ஒருவன் தவறு செய்கிறான் என்றால் அவனை அதிலிருந்து மீட்க வேண்டும்
2.ஆண்டவா…! அவருக்குள் நல்ல உணர்வுகள் வளர வேண்டும் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் நன்றாக வாழ வேண்டும்
3.அவர்கள் அனைவருக்கும் ஆண்டவனின் அருள் கிடைக்க வேண்டும்… மகிழ்ந்திருக்க வேண்டும் என்று தான் எல்லோரையும் எண்ணும்படி சொன்னார்.

ஆக ஆண்டவனுக்குச் செய்யும் சேவை இது தான்.

ஏனென்றால் நமக்குள் ஆண்டு கொண்டிருக்கும் இந்த உயிருக்குள் இந்த உணர்வின் தன்மை ஒருக்கிணைந்து
1.நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் கெட்ட குணங்கள் அனைத்தும்
2.ஒன்று சேர்ந்து அருள் வழியில் இயக்குகின்றது.

அது தான் ராம ராஜ்யம் என்பது…!