தன் மனநிலையில் இருந்து தான் மடிகின்றான்… வாழ்கின்றான்… மனிதன்…!
கல்கியில் வந்த உலகம் சுற்றும் நிலையில் கல்கிக்கே மீண்டும் வருகின்றது. இந்நிலையில் வடிகட்டி வந்தவர்கள் தான் கல்கியில் அவதரிக்கின்றார்கள்.
இந்நிலையில் கல்கியில் அவர்கள் நிலையை வைத்துத்தான் பிறிதொரு உலகம் வந்திடுமப்பா. அந்நிலையில் மண்டலங்களின் தன்மை மாறுபடுகின்றன. இவ்வுலகிற்கும் கல்கியில் வரும் உலகத்திற்கும் மாறுபடுகின்றது. மனிதனின் எண்ணமும் செயலும் மாறுபடுகின்றன.
அந்நிலையில் வாழ்பவர்கள் உயர்ந்த எண்ணத்தில் அந்நிலையை எய்திடத்தான் இப்பாடங்கள் எல்லாம்.
1.இந்நிலையில் உள்ள அற்ப ஆசைகளை மறந்து பெருநிலை ஏய்திடப்பார்.
2.வாழ்ந்து என்ன பயன்…? வாழ்ந்து என்ன பயன்…? என்கின்றார்கள்… வாழ்ந்த பயனை எல்லாம் கல்கியில் கண்டிடலாம்.
பெருநிலையை எய்திடவே பெருநிலையை எய்திடவே என்ற எண்ணம் புரியாத மனிதர்கள் வாழும் வாழ்க்கை இது.
பெருநிலை எய்திடு என்பது இவ்வுலக வாழ்க்கையில் சுற்றி வந்தவர்கள் எல்லோரும் பெருநிலை எய்திk கலகிக்கு வருபவர்களே.
1.எல்லாச் சித்தர்களும் ஞானிகளும் காலம் காலமாகத் தவம் இருந்த தவசிகளும்
2.பெருநிலையை எண்ணித்தான் கல்கிக்கு வருகின்றார்கள்… அவர்களுடன் கலந்துவிடலாம்.
இக்கலியில் இப்பொழுது வாழும் மனிதர்களில் முதல் ஜென்மத்தில் விட்ட குறையை இந்த ஜென்மத்தில் எய்தி விட்டால் அப்பெருநிலையான கல்கியில் நாமும் கலந்திடலாம்… பல கோடித் தேவாதி தேவர்களுடன். பாட நிலை புரிந்ததா...?
விடிய விடியக் கேட்டுவிட்டு விக்கல் நிற்க என்ன மருந்து…? என்று கேட்டால்
1.நினைவின் எண்ணத்தினால் வருவது தான் அவ்விக்கல். அவ்விக்கலுக்கே மருந்து தேடினால் விக்கலுக்கு ஏதப்பா மருந்து…?
2.விக்கலுக்கு மருந்து இல்லை… எண்ணும் எண்ணத்திற்கும் மருந்து இல்லை… விடியும் விடிவிற்கும் மாற்றில்லை.
3.ஈசனின் சக்தியில் உதித்ததப்பா உனக்குள்ளே அவ்வண்ணம்.
4.ஜெபநிலையில் மனநிலையைக் கலந்திடப்பா உன் நிலைக்கே புரிந்துவிடும் உன் நிலை என்ன…? என்று.
இன்றுள்ள மனிதர்களுக்கு ஆயுள் நிலை அதிகரித்துள்ளது என்கிறார்கள் அறிவு நிலையும் ஆயுள் நிலையும் ஆண்டவன் அளித்த பொக்கிஷங்கள். அறிவினால் ஆயுளை வளர்க்கின்றான் இக்கலியில் மனிதன்.
அவன் எண்ணம் அவன் வைத்தியத்தில் வந்தது என்று… இல்லையப்பா எண்ணத்தில் வந்ததப்பா ஆயுள் நிலை. ஜீவ எண்ணத்தில் வந்ததப்பா அவ்வாயுள் நிலை.
மனித உடலில் ஆசை உள்ளவன்… தான் வாழ வேண்டும் என்ற ஆசையுடன் எண்ணுகின்றான் அவ்வீசனை. அவன் எண்ணத்தின் வடிவினிலே அவனுள் இருக்கும் ஈசனே அவனைச் சுற்றுகின்றான். அவ்வெண்ணத்தின் தன்மையினால் அவனின் ஜீவனும் வாழ்கின்றது
1.எண்ணத்தைக் குறுக்கிட்டு… வாழ்ந்து என்ன பயன்…? இருந்து என்ன புண்ணியம் வரும்…? என்று
2.வரும் வியாதியைக் தாங்கிக் கொள்ள முடியாமல் அவ்வெண்ணத்திலே சுருங்கி விடுகின்றான்
3.அவன் உடலில் உள்ள உறுப்புகளும் உணர்வுகளும் இவ்வெண்ணத்தினுள்ளே சுருங்கி விடுகின்றன.
ஆயுள் முடிந்து இறக்கின்றான் என்பது அல்ல. அவனின் “எண்ணம் சுருங்கி… மனம் சுருங்கி… பெரும் பயத்தில் உள்ளவனிடம்… “சோர்வு நிலையில் பிரிந்து செல்வதுதான் ஆவியின் நிலை…”
வாழ்ந்திட வேண்டும் என்று ஆசை உள்ளவன் வாழுகின்றான் பல நாட்கள்.
1.உயிர் பிரிவது எல்லாம் காலன் (எமன்) பிரித்துச் செல்வதல்ல
2.இவனின் எண்ணத்தாலும் சோர்வாலும் சோகையினாலும் வருவதே அவ்வியாதிகள்.
3.அவ்வியாதியில் உள்ளவன் எண்ணும் எண்ணத்திலேயே… “தன் உயிர் பிரிந்து விடும்” என்ற பயத்திலேயே பிரிந்து செல்வது தான் அவ்வாவி.
எந்நிலையில் உள்ளவனும்… “வாழ வேண்டும்” என்று ஆசை இருந்தால் தன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியை ஒருநிலைப்படுத்தி வேண்டுபவனெல்லாம் வாழ்கின்றான். மருந்தும் மாயமும் அல்ல பல நாட்கள் வாழ்வதெல்லாம்.
பிறப்பு இறப்பு என்பதெல்லாம் ஆண்டவன் இட்ட பிச்சை என்கின்றோம். இயற்கை என்கின்றோம். எதுவப்பா பிச்சை எதுவப்பா இயற்கை…?
அணுவின் பாடத்தையும் ஆவியின் பாடத்தையும் எண்ணிப் பார்த்தால் பிறப்பு இறப்பு எல்லா இரகசியங்களும் புரிந்துவிடும். இன்றைய ஜீவாதாரத்தின் பாடங்கள் புரிந்ததா…?
பிறப்பு இறப்பு என்பதைப் புரிந்து கொண்டீர்களா…? தன் மனநிலையில் இருந்து தான் மடிகின்றான்… வாழ்கின்றான் மனிதன்.
ஜெப அருளைத் தந்திடுவாய்
ஜெபமெல்லாம் ஜெபித்திடவே
ஜெப அருளைத் தந்திடுவாய்
ஜெபித்திடுவேன் ஈஸ்வரனை
ஜெபித்திடுவேன் அவன் சக்தியை
ஜெபித்திடுவேன் ஓம் என்ற நாதத்தில்
ஜெபித்திடுவேன் ஜெபித்திடுவேன் ஓம் ஈஸ்வரா
ஜெபித்த நிலையில் நீ வந்து ஜெபமாக்கித் தந்திடுவாய்.