மனதை அடக்க… முதல் படி நாவின் சுவையை அடக்குவதுதான்…!
விரதம் என்ற எண்ணம் உனக்கு வேண்டாம்… நீ விரதமிருந்து என்னையும் உபவாசம் இருக்க வைத்து விட்டாயப்பா.
மற்றெல்லா ஜீவராசிகளுக்கும் மனித உடலுக்கும் பெரும் மாற்றங்கள்… வித்தியாசம் உண்டப்பா.
1.மனித உடலை… மனித மனதை அடக்கிடலாம்…! மனிதனின் ஆசையையும் அடக்கிடலாம்
2.மிருகத்தன்மைக்கு அந்த நிலை இல்லையப்பா..!
மற்ற ஜீவராசிகளுக்கு அதனுடைய ஆகாரத்தை எந்நிலையிலும்… அதைப் புசித்திடத் தான் அதன் மனம் உள்ளது… ஒரு போதும் தன் பசியை அவைகளால் அடக்க முடியாதப்பா…!
மிருகங்கள் பறவைகள் ஊரும் ஜெந்துக்கள் மரம் செடி கொடி எல்லாவற்றுக்கும் “ஒரே குறி” தன் ஆகாரத்தை எண்ணித்தான் எண்ணமுண்டப்பா. எல்லா ஜீவராசிகளுக்கும் அவ்வெண்ணத்தில் தான்… மனித எண்ணமும் மற்ற ஜீவராசிகளின் எண்ணமும் மாறுபடுகின்றது.
1.மனித எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி ஓங்கச் செய்ய முடியும்
2.மற்ற ஜீவராசிகளின் எண்ணத்தில் அந்நிலை இல்லையப்பா.
ஜனனம் எடுப்பதுவே மனித உடலில் உள்ள ஆசைகள் முடியாமல் (நிறைவேறாது) வருவதால் தான். மற்ற ஜீவராசிகளின் நிலை என்ன…? என்று முதல் பாடத்திலேயே சொல்லி விட்டேன்.
காட்சி:- ஆகாரம் சாப்பிடுதல்…! உன் பூஜையில் ஆகாரம் வைக்காவிட்டாலும் நான் புசிக்கும் ஆகாரத்தைப் பார்த்தாய் அல்லவா… எப்படிப் புசித்தேன்…! என்ற எண்ணம் உனக்குள்ளே.
தேவர்களின் நிலை எல்லாம் இப்படித்தான். தேவனுக்குப் பிறகு பிறந்தவன் தான் மனிதன். மனிதனும் தேவனாகலாம்.
1.மனித மனத்தை அடக்க…
2.முதல் படி நாவின் சுவையை அடக்குவதுதான்.
பிறந்தேன் வளர்ந்தேன் புசிப்பதில் என்ன தவறு…? எனக்கு வேண்டியதை நான் புசிக்கிறேன்… இருக்கும் வரை அனுபவிக்கலாம்… எதற்கு இந்த உணவுக் கட்டுப்பாடு…? என்ற எண்ணம் தான் மனிதனுக்குள்ளே.
இருக்கும் வரை தான் பசிக்க வேண்டும் என்பதல்ல. உடலை விட்டு ஆன்மா பிரிந்தாலும் ஆகாரத்தைப் புசித்து விடலாம். ஆகாரம் உட்கொள்ளாமல் ஆண்டவனாலும் இருக்க முடியாதப்பா.
உன் ஆகாரம் எங்கிருந்தப்பா வருகின்றது…?
அது ஈசன் அருளால் வந்ததுதானப்பா…! மழையும் ஒளியும் கலந்தது தானப்பா அது. ஆகாரத்தை ஒளியிலிருந்தும் பெறலாம்… காற்றிலிருந்தும் தண்ணீரில் இருந்தும் பெறலாம்…!
ஒளியும் காற்றும் தண்ணீரும் இல்லாவிட்டால் “எவையும் ஒரு நொடி கூட உயிர் வாழ முடியாது...!” ஆகாரம் இல்லாவிட்டால் இந்த உடல் அழிந்துவிடும்.
ஆனால் ஆகாரம் புசித்திடாமல் வாழ்ந்திடலாம் பல காலங்கள்…! எப்படி…?
1.மனநிலையை ஒருநிலைப்படுத்தித் தியான நிலையில் அமர்ந்தவனுக்கு
2.அவ் ஈசனே அருள்வான் காற்றிலும் ஒளியிலும் உள்ள ஆகாரத்தைக் கொடுத்து.
காற்றிலே கலந்துள்ளதப்பா தண்ணீரும்… நீ நினைக்கின்றாய் அது வெறும் காற்று என்று…!
1.காற்றுடன் தண்ணீரும் கலந்தே இருக்கின்றதப்பா
2.காற்றுடன் ஈரப்பசை இல்லாவிட்டால் ஈர்ப்பு சக்தியே இல்லையப்பா.
ஜெப நிலையில் உள்ளவனுக்குக் காற்றுடனே கலந்து வருமப்பா அந்த ஆகாரங்கள். காற்றுடன் கலந்துள்ள பல கோடி அணுக்களில் பிரித்து எடுத்திடுவானப்பா தனக்கு வேண்டிய ஆகாரத்தை “ஜெப நிலை உள்ளவன்…”
அமுது என்பதையும் எடுத்து விடலாம் அமுது இசையும் எடுத்திடலாம்… அந்தக் காற்றிலிருந்து.
நாவின் சுவையை அடக்கிடப்பா என்பதல்ல என் கருத்து.
ஏற்றுக் கொள்ளும் மனம் உள்ளவருக்குப் பகர்கின்றேன். பசி தாகம் எல்லாம் பரந்தாமனை எண்ணிவிட்டால் பறந்துவிடும் என்போர் முதியோர். அந்நிலை புரிந்ததாப்பா…?
நாவின் சுவையை அடக்கி விட்டால் எண்ணத்தின் தன்மையும் அடக்கிடலாம். உடல் பசி என்பதெல்லாம் அந்த எண்ணப் பசி தான்…
1.எண்ணப் பசியை அடக்கிட… நாவின் பசியை அடக்கிடு.
2.நாவின் பசியை அடக்கிட… எண்ணத்தை ஒருநிலைப்படுத்திடு.
3.எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி விட்டால் எல்லாப் பசியையும் அடக்கி விடலாம்.
4.எண்ணப் பசியில் “எண்ணமெல்லாம் ஈசனின் எண்ணமாகத்தான்” இருந்திட வேண்டுமப்பா.
ஆகவே விரதம் என்பதெல்லாம் ஜெப நிலைக்கு வந்தவனுக்கு வேண்டாமப்பா…!
விருந்தோம்பலையும் உண்டிடலாம் வடிகஞ்சியையும் குடித்திடலாம்…! சொல்வது புரிந்ததா…? ஜெப நிலையிலிருந்து ஜெப அருளைப் பெற்றவனுக்குத் தான் இந்நிலையப்பா.
அன்ன ஆகாரமெல்லாம் ஆண்டவனே அளித்திடுவான். காற்றுடன் எடுத்துவிடலாம் வேண்டிய ஆகாரத்தை… புரிந்து கொண்டாயா…?
பூரிக்கிழங்கைப் புசித்த எண்ணம் வந்துவிட்டால் புளித்த ஏப்பம் வந்துவிடும். புசிக்கவில்லை என்ற எண்ணம் இருந்திட்டால் பசி பசி என்ற எண்ணம் தான் எண்ணமெல்லாம் சுற்றுமப்பா…!
காட்சி:- காபியை ஆற்றுதல். இப்போது உண்ட எண்ணம் (வாசனை) வருகிறதா…? காற்றிலிருந்தே சகலத்தையும் பெற்றிடலாம்.
ஜீவ ஜெந்துகளின் நிலை எல்லாம் இக்காற்றுடன் உள்ளதப்பா. காற்றில் உள்ள அணுக்கள் தான் கால வெள்ளத்தைச் சுற்றுகிறது.
காற்றில் உள்ள அணுவைத் தான் சுவாச நிலையில் எடுக்கின்றாய். நல் அணுவை எடுத்திட்டால் சுவாச நிலைகள் மாறாதப்பா. “சுவாச நிலை சுவாச நிலை” என்பதெல்லாம் என்ன…? என்று புரிந்து விட்டாய் அல்லவா.
மனித எண்ணத்தில் வாழ்க்கையில் நடப்பவற்றை
1.நல்லுணர்வில் ஊன்றிப் பார்த்து
2.உன் நிலையை மாற்றிடாமல் நல் உணர்வை எடுத்திட வேண்டும்.
ஒருவர் செய்யும் தீங்கை நாம் பார்த்துக் கொண்டே எப்படிச் சும்மா இருப்பது…? என்ற எண்ணம் வந்திடுமப்பா. அவனைப் பார்த்துக் கொள்வான் “ஆண்டவன்” என்ற எண்ணம் வந்து விட்டால் உன் சுவாச நிலை மாறாதப்பா…!
அவனை எப்படி விடுவது…? அவனை ஒரு கை பார்க்கின்றேன்.
1.ஆண்டவா…! பார்த்தாயா… அவன் இப்படியெல்லாம் செய்கின்றான் அவனை அழித்துவிடு…!
2.அவனுக்கு என்ன இடைஞ்சல் செய்யலாம்…? என்று என்று எண்ணுவதல்ல ஆண்டவனே பார்த்துக்கொள்வான் என்பது.
அவன் செய்த நிலையை மனதிலே நிலை நிறுத்தி
1.எவ்வழியிலும் நம் மனநிலையை மாற்றிடாமல்
2.அவன் செயலை எப்படி அடக்கிடலாம் என்ற எண்ணம் உதயம் வேண்டும்.
எண்ணும் பொழுது அவ்வாண்டவன் எண்ணத்தில் நிலை நிறுத்தி மனநிலையை ஒருநிலைப்படுத்திக் கோபதாபங்களை மனதினிலே ஊன்றிடாமல் பரிபக்குவ நிலையில் மனதினில் நிலை நிறுத்திக் களைந்திட வேண்டுமப்பா – அந்நிலையை.
சொல்லும் பாடம் புரிந்ததா…?
துவேஷத்தன்மை உள்ளவன் எல்லாம் துவேஷிக்கட்டும்… நமக்கென்ன…? என்ற எண்ணம் உள்ளவனுக்கும்… துவேஷக்காரனின் எண்ணத்திற்கும் ஒரு நிலைதானப்பா…!
துவேஷிப்பவனை நல்நிலையில் புரிய வைத்து நல்வழிக்கு நடத்திட வேண்டுமப்பா…! பிறப்பிலே பிறப்பதல்ல இக்குணங்கள்.. “வளரும் வளர்ப்பிலும்… முன் ஜென்மப் பயனிலும்” வருவதப்பா இந்நிலைகள் எல்லாம்.
இந்நிலையில் இருந்து மீள்பவனுக்கு ஒரே நிலை “சுவாச நிலைதானப்பா…!”