ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 28, 2024

யோகா…!

விவேகானந்தர் வக்கீலுக்குப் படித்திருந்தாலும் நமது ஞானிகள் உணர்த்திய தத்துவங்களை எடுத்துரைத்து
1.எந்த மனிதனுக்கு நீ பூரண சேவை செய்கின்றாயோ அதுவே உனக்குள் கடவுளாக நின்று அதுவே உனக்கு நன்மை செய்கின்றது.
2.உன் ரூபத்தில் அவர்களுக்குள் கடவுளாக நின்று அது செயலாக்குகின்றது.
3.நீ கடவுளை எங்கே தேடுகின்றாய்…? உன்னுள்ளே கடவுள் உண்டு என்று உணர்த்தினார்.

ஆனால் ஆரம்பத்தில் கடவுளைத் தேடி விவேகானந்தர் அலையும் நிலையில் இராமகிருஷ்ண பரமஹம்சரைக் கண்டு கடவுள் எங்கே இருக்கின்றார்…? நான் பார்க்க வேண்டும்…! என்று கேட்கின்றார்.

ஆனால் அந்தச் சமயத்தில் இராமகிருஷ்ண பரமஹம்சர் முள் படுக்கையின் மீது படுத்திருக்கின்றார். விவேகானந்தர் அதை உற்றுப் பார்த்து “இங்கே முள் அல்லவா இருக்கின்றது அதிலே படுத்திருக்கின்றீர்களே…!” என்று கேட்கிறார்.

1.நீ முள் என்று பார்க்கின்றாய்… அதனால் உனக்கு வேதனை (வேதனையின் உணர்வை உனக்குள் நின்று உனர்த்துவது கடவுள்) தெரிகின்றது.
2.நான் முள் என்று நினைக்கவில்லை… எனக்கு வேதனை இல்லை…! என்று சுருக்கமாகச் சொல்லிப் பாடத்தை முடிக்கின்றார்.

விவேகானந்தர் நம் நாட்டின் தத்துவங்களை… பக்தியின் நல்ல ஒழுக்கங்களை அமெரிக்காவிற்குச் சென்ற போது சுட்டிக் காட்டினார். உலக நிலைகளில் இந்தியாவின் நிலைகளைப் பரப்பவும் செய்தார்.

மனிதனுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும்…? ஏனென்றால் அதுவே கடவுள் ஆகிறது.
1.நீ எண்ணும் எண்ணமே உனக்குள் கடவுள் ஆகிறது
2.அதனின் உணர்வின் செயலாக கடவுள் செய்கின்றது
3.கடவுளுக்குச் செய்யும் சேவையாக இது ஆகிறது என்ற இந்தத் தத்துவத்தை அவர் கொடுத்தார்.

இதை எல்லாம் குருநாதர் என்னிடம் (ஞானகுரு) சொன்னார். நான் புத்தகங்களைப் படிக்கவில்லை.

இந்தியா முழுவதும் யாத்திரை செய்த விவேகானந்தர் இமயமலைச் சாரலில் செல்லும் சமயம்… மந்திரவாதியிடம் சிக்கிக்கொண்ட ஒரு சீடன் “இங்கே மகான் வருகின்றார்…” என்று தேடி ஓடி வந்து விவேகானந்தர் காலிலே பாத நமஸ்காரம் செய்கின்றான். உங்களுடைய அருள் தேவை என்று கேட்கின்றார்… அவரின் சொற்பொழிவுகளையும் கேட்கின்றான்.

ஆனால் சீடனின் குருவான அந்த மந்திரவாதியியோ “நான் கடவுளையே கைவல்யம் செய்துள்ளேன் என்று சொல்லும் சக்தி பெற்றவன் அவனிடம் சிக்கியவன் தான் விவேகானந்தரின் சொற்பொழிவுகளைக் கேட்கின்றான் அவரிடம் ஆசீர்வாதம் கேட்க வருகின்றான்.

இதற்கு முன்னாடி எத்தனையோ நடந்த நிகழ்ச்சிகள் வேறு…! கடைசியிலே நடந்த நிகழ்ச்சிகளை ௳ட்டும் நீங்கள் தெரிந்து கொண்டால் போதும்.
1.இதையெல்லாம் புத்தகத்தைப் படித்துவிட்டு நான் சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்
2.புத்தகத்தை படிக்கக்கூடிய சரியான நிலை எனக்கில்லை.
3.ஒரு பத்திரிகையைப் படிக்க வேண்டும் என்றாலும் நண்பர்கள் தேவை.
4.என்னுடைய படிப்பறிவு அவ்வளவுதான்…!

தான் விவேகானந்தரின் ஆசி பெற்றதைத் தன்னுடைய மந்திரவாதியிடம் அந்தச் சீடன் சொல்கின்றான்

ஆனால் அந்த மந்திரவாதியோ… நாளை அவன் பேசப்படும் பொழுது இரத்த இரத்தமாகக் கக்கப் போகின்றான்… அவருடைய பாதத்தை நீ நமஸ்காரம் செய்து வருகிறாயே…! என்று அவனை அச்சுறுத்துகின்றான்.

மந்திரவாதி தனக்குள் இருக்கும் ஆவியின் நிலைகள் கொண்டு ஏவல் செய்து விவேகானந்தர் மறுநாள் பேசப்படும் பொழுது… இரத்த இரத்தமாகக் கக்க வைக்கின்றான்.

அதைக் கடந்து சென்ற பின் விவேகானந்தர் குருவை எண்ணிப் பார்க்கின்றார். இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னது…
1.நீ எதை எண்ணுகின்றாயோ அதுவே உனக்குள் கடவுளாக இருக்கின்றது.

2.அந்த உணர்வின் செயலாக்கமே உன்னுடைய செயலாக்கமாக வருகின்றது
3.முள் படுக்கையில் நான் படுத்திருக்கும் பொழுது “நீ கடவுளைக் காண வேண்டும் என்று வந்தால்
4.அப்போது நீ எண்ணிய உணர்வின் தன்மையை உன் உயிர் தான் அதை (அந்த வேதனையை) எவ்வாறு இயக்குகின்றது.
5.அந்த உணர்வின் செயலாக செயல் எவ்வாறு இருக்கின்றது என்று காட்டுகின்றார்

அதைக் கண்டு கொண்ட பின்பு தான் “நான் கடவுளைக் கண்டு கொண்டேன் எனக்குள்ளேயே…!” என்று அவர் உணர்ந்து ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அந்த உணர்வின் எண்ணங்களை எவ்வாறு இயக்க வேண்டும் என்று கால்நடையாக இந்தியா முழுவதும் பறைசாற்றினார்… பாத யாத்திரையாகச் சென்று.

ஆனால் வட இந்தியாவில் மந்திர ஒலிகள் அதிகம்… தென்னாட்டில் இங்கே சுழன்று வந்தார். இங்கிருக்கும் அறிவுகளைக் கண்டார்… மக்களுக்குத் தெளிவான நிலைகளை வழி காட்டினார்.

ஆனால் யாரும் அதை ஏற்றுக் கொள்ளதில்லை புத்தகங்களைப் படிக்கின்றோம்… அறிவின் ஞானத்தைப் போதிக்கின்றோம். தன் நிலையில் அவர் போதிப்பதைக் கடைப்பிடிப்பதில்லை.

காரணம்… நாட்டில் நடக்கும் நடப்புகளில் நல்ல ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாலும் அரசியல் பேதம் மத பேதம் இன பேதம் மொழி பேதம் என்று சாடும் பொழுது… இதை அதிகமாகச் சுவாசித்த பின்… தன் எண்ணங்களில் அதைக் கவரப்படும் போது உண்மையின் நிலையைத் தன்னுள் செயல்படும் நிலைகளை இழந்தே நிற்கின்றோம். அதை மாற்றும் நிலைகள் அற்றே போய்விட்டது.

குருவை எண்ணுகின்றார்…
1.எண்ணியதுதான் கடவுள் என்று நீ உணர்த்தினாய்… அதன்படி உயர்ந்த நிலைகளை எண்ணினேன்
2.ஆனால் இந்த ஏவல் என்ற நிலைகள் “என்னைச் சாடுகின்றதே…” என்று விவேகானந்தர் வேதனைப்படுகின்றார்.

நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லையே உயர்ந்த எண்ணத்தைத் தானே எண்ணினேன் என்று சாதாரண மனிதன் பலருக்கு உபதாரம் செய்துவிட்டு அதன் நிலைகள் என்னைக் கடவுள் சோதிக்கின்றான் சோதிக்கின்றான் சோதிக்கின்றான் என்று வேதனையைச் சுவாசிப்பது போன்று இவரும் அவ்வாறே சுவாசிக்கின்றார்... நான் எந்தப் பிழையும் செய்யவில்லையே என்று…!

குரு அருளால் மந்திரவாதி ஏவல் பண்ணுகின்றான் என்று உணர்ந்து கொள்கின்றார். அதைப் புரியும் ஆற்றல் வந்துவிட்டது.

எனது உயிர் எனக்குள் இருந்து படைக்கின்றது என்று நீ சொன்னாயே. நான் நன்மைகளைத் தானே செய்கின்றேன். ஆனாலும் அவனுடைய தீமையின் நிலைகள் எனக்குள் வருகின்றதே… ஏவல் செய்கின்றானே…! என்று அவர் சிந்திக்கின்றார்.

மனிதனுக்குள் எடுத்துக் கொண்ட இந்த மந்திரத்தின் ஒலிகள் அவன் ஏவல் செய்யும் பொழுது “எந்தத் தீமையும் செய்யும் என்று” இதைப் பிற்காலங்களில் உணர்த்துகின்றார் தீமைகள் இருந்து மீள வேண்டும் என்று.

இதையெல்லாம் என் குருநாதர் சொன்னதை உங்களுக்கு அப்படியே சொல்கின்றேன்

பரமஹம்சர் காட்டிய நிலையில் கடவுளைக் காண என்று உண்மை நிலையில் தன்னை நாடி வந்தவருக்கு அந்த உணர்வின் தன்மை ஊட்டி தனக்குச் சரியான சீடனாக விவேகானந்தரை எடுத்து… இந்த உணர்வின் வேட்கைகளை உலகிற்குப் பரப்பச் செய்தார்.

ஆனாலும் அந்தத் தத்துவ ஞானி இத்தனை இன்னல்கள் பட்டார்.

அங்கே நகர்ந்து செல்லப்படும் பொழுதுதான் அடுத்தடுத்து அடுத்தடுத்து இந்தத் தீமைகள் வரப்படும் பொழுது “வெறுத்திடும் நிலைகள்” அவருக்குள் வருகின்றது.

1.இந்த உலகின் நிலைகள் நடப்பதை நான் என்னவென்று சொல்வேன்…! என்று தன் மூச்சின் உணர்வின் தன்மையை ஏங்கி…
2.தவறு செய்வோர் நிலைகளை இவருக்குள் அடக்கி அடக்கி அதனால் “தனக்குள் கொதிக்கும் நிலையே” அவருக்குள் வருகின்றது.

நான் தவறு செய்யாது இருந்து… மந்திரவாதியின் சீடன் இங்கே வந்து ஆசீர்வாதம் வாங்கிச் சென்ற பின் நடந்த நிகழ்ச்சியால்… இவருக்குள் கொதிப்புகள் எழுந்து
1.தீமைகளைச் செய்கின்றானே…! இந்தப் பாழடைந்த உலகத்தை நான் என்னவென்று சொல்வேன்…?
2.இனி நான் எதை எதிர்த்துப் போராடுவது என்ற நிலையில்
3.குறுகிய நேரத்தில் “இந்த உடலை விட்டு அகன்றால் போதும்…” என்ற அந்த உணர்வின் நிலையே அவருக்குள் வருகின்றது.

நன்மைக்காகச் செயல்படுத்திய நிலையில் கடைசியில் இந்த உடலை விட்டுப் போனால் போதும்… சேவை என்ற நிலை இருப்பினும் எல்லோரும் இந்த உண்மைகளை உணரட்டும்…
1.அருள் உணர்வுகள் என் உடலில் நிலைத்திருக்கட்டும்…
2.தீமைகளில் நான் சிக்காது இந்த உடலை விட்டு இந்த ஆன்மா பிரிந்தால் போதும் என்று கதறுகின்றார்.

இந்த உணர்வுகள் வேட்கை அதிகமாகும் போது தான் தன்னை அணுகி உள்ள சிஷ்யர்களிடம் “எனக்குக் கொதிக்கின்றது… வீசுங்கள்…” என்று தன் ஆன்மாவை அங்கே பிரிக்கின்றார்.

இவரைக் குண்டலினி யோகம் கற்றவர் என்று சொல்கின்றார்கள். எந்தக் குண்டலினியை அவர் செய்தார்…?

அவர் பள்ளியிலே படிக்கும் காலத்தில் குண்டலினி யோகம் இருந்தால் அதைப் பெற வேண்டும் என்று படிக்கும் பொழுது தான் யோகத்தை மரத்தடியில் செய்து கற்றுக் கொண்டார்.

ஆனால் பிற்காலத்தில் இராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்திக்கப்படும் பொழுது
1.யோகம் என்பது அது அல்ல…
2.நீ எதை நினைக்கின்றாயோ இந்த உணர்வு தான் உனக்குள் யோகமாக அமைந்து
3.உணர்வின் செயலாக்கங்களாகச் செயலாற்றுகின்றது என்று பரமஹம்சர் சொன்னார்.

உணர்வினை நுகரும் நிலைகள் கொண்டு “உயிரின் இயக்கத்தால் உணர்வின் நிலை உனக்குள் எவ்வாறு வருகின்றது…?” என்ற இந்த யோகத்தைத் தான் இராமகிருஷ்ண பரமஹம்சர் கற்பித்தார். இவர்கள் சொல்லும் குண்டலினியை அவர் செயல்படுத்தவில்லை.