ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 21, 2024

ஒவ்வொரு மகரிஷியும் “பல லட்சம் நல்ல உணர்வுகளை” வலுக்கொண்டதாக உருவாக்கியவர்கள்

இன்றைய காற்று மண்டலத்தில் பரவியிருக்கும் நஞ்சானது ஞானிகள் உணர்வுகளை அடைத்துக் கொண்டு… யாரும் அதை நுகர விடாது தடுத்துக் கொண்டிருக்கின்றது.

நம் ஆன்மாவில் நஞ்சான உணர்வுகள் வரும் போது
1.ஞானிகள் உணர்வை நாம் பெற வேண்டும் என்றால்
2.இதைக் கடந்து உணர்வுகள் வெளிச் செல்வதில்லை.
3.நஞ்சு அதிகரிக்கப்படும் பொழுது ஞானிகள் நிலைகளை அங்கே அடைய முடிவதில்லை
4.அந்த நஞ்சின் உணர்வுக்குள்ளேயே மீண்டும் சிக்கப்பட்டு ஞானிகள் உணர்வைப் பெறும் தகுதியை இழக்கச் செய்து விடுகிறது.

நமக்குள் இருக்கும் ஒவ்வொரு மனிதனின் நல்ல உணர்வுகளில் நஞ்சு கலந்த பின் தீமையே வருகின்றது… நல்லதை அழித்திடும் உணர்வுகளாகப் பரவுகின்றது.

உதாரணமாக… நஞ்சின் தன்மை ஒரு குடம் பாலுக்குள் விட்டு விட்டால் அந்தப் பாலைக் குடிப்போர் அனைவரும் நஞ்சின் தன்மையே அடைந்து விடுகின்றனர்.

ஆனால் அந்த ஒரு குடம் பாலில் பல ஆயிரம் குடம் நல்ல பாலை விடப்படும் பொழுது நஞ்சின் தன்மை சிறுத்து அந்தப் பாலிற்கே வீரிய சக்தி கொடுக்கின்றது.

இன்றைய உலகில் வாழும் மக்கள் வேதனை என்ற உணர்வை அடிக்கடி எடுத்து அதை விளைய வைத்துக் கொண்டால் அந்த மூச்சுலைகள் வெளிப்படுவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது. அதனால் இந்தக் காற்று மண்டலமே விஷத்தின் தன்மையாக மாற்றி விடுகின்றது.

அதிலே வாழும் நமக்குள்ளும் அந்த உணர்வின் சத்து நம் ஆன்மாவில் வலுவாகி நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி… உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையும்… சிந்தனயற்றதாக உருவாக்கும் நிலையும்… இங்கே உருவாக்கி விடுகின்றது.

இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் மீள வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

உலகில் யார் யாரிடம் எல்லாம் நாம் பழகினோமோ...
1.அவர்கள் அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று
2.அவர் பட்ட வேதனை உணர்வு நமக்குள் வளராது தடைப்படுத்த வேண்டும்.

நாம் சந்தித்த அனைவருக்கும் இந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று நாம் எண்ணுவது போல் அனைவரும் அதே ஏகோபித்த நிலை வரப்படும் பொழுது
1.அது சிறு புள்ளியாக கோலத்தில் அடக்குவது போன்று அடக்கி
2.உயர்ந்த பாதையின் தன்மை ஒன்றாக இணைத்து அதை உள்ளடக்கி விடுகின்றது.

ஏகோபித்த நிலைகள் கொண்டு நாம் வெளிப்படுத்தும் மூச்சலைகள் அந்த மகரிஷிகள் உணர்வுகள் ஏகமாகப் படரப்படும் பொழுது தீமைகள் மறையப்படுகின்றது.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்ப்பித்து
1.அதை எல்லோருக்கும் கிடைக்க செய்ய வேண்டும் என்ற உணர்வைக் கலந்து
2.நம் எண்ணத்தால் அலைகளாகப் பரப்பச் செய்யப்படும் பொழுது நமக்குள் இருக்கும் தீமைகளை அகற்றும் சக்தியாகிறது.

ஏனென்றால் ஒவ்வொரு மகரிஷியும் “பல லட்சம் நல்ல உணர்வுகளை” வலுக்கொண்டதாக உருவாக்கியவர்கள்.

நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் உணர்வை ஏகோபித்த நிலையில் எண்ணி அதை மூச்சலைகளாகப் பரப்பப்படும் பொழுது… பல ஆயிரம் குடம் பால்களை நாம் ஊற்றுவது போன்று…
1.மகரிஷிகளின் உணர்வலைகள் காற்றுக்குள் கலந்து அலைகளாகப் படர்ந்து
2.இந்தப் பூ மண்டலமே அது தூய்மைப்படுத்தும் சக்தியாக வலுக்கொண்டதாக மாறுகின்றது.
3.அந்தத் தூய்மையின் வீரிய உணர்வுகள் இந்த நஞ்சுகளை மாற்றுகின்றது.

ஆக… ஒரு குடம் பாலில் நஞ்சினை பட்டாலும் அதிலே ஆயிரம் குடம் நல்ல பாலை ஊற்றப்படும் பொழுது நஞ்சற்ற நிலையாக ஆவது போன்று நாம் இடும் மூச்சலைகள் இந்தக் காற்று மண்டலத்தை நஞ்சற்ற நிலையாக மாற்றி… நல்ல உணர்வுகளை நுகரும் சக்தியாக வருகின்றது.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்து
1.நமக்குள் இருக்கும் எல்லா உணர்வுகள் - அது ஒன்றுடன் ஒன்று ஒன்றச் செய்து இணையச் செய்து
2.ஒவ்வொரு உறுப்புகளிலும் அருள் உணர்வுகளை இணையச் செய்து மகிழ்ச்சியூட்டும் நிலையாகப் பெருக்க வேண்டும்.

இது போன்று எல்லா மனிதர்களுடைய உணர்வுகளையும் கலந்து மகிழ்ச்சியூட்டும் நிலையாக நாம் செயல்படுத்தும் போது இந்தப் பூ மண்டலம் சுத்தமாகின்றது… நம் உடலுக்குள் இருக்கும் உறுப்புகளான இந்த மண்டலமும் தெளிவாகின்றது.

உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்ற… மகரிஷிகளுடன் நம் நினைவாற்றலை இணைக்கின்றது. அங்கே சீராக நாம் இணைக்கப்படும் பொழுது நமக்குள் தடையாக வரும் நிலைகளைப் பிளந்து… ஒருக்கிணைந்து இயக்கி… தெளிந்திடும் அறிவின் தன்மையை நமக்குள் வருகின்றது.

கோலங்களிடப்படும் பொழுது
1.அதற்குள் புள்ளிகள் அமைந்து அது வெளியே வர முடியாது தடைப்படுத்தப்படுவது போன்று
2.நமக்குள் இருக்கும் தீமைகள் அது ஒன்றுக்குள் அடங்கி… தீமை இயக்க முடியாதபடி அடங்கி விடுகின்றது.

தெளிந்த மனதும் பகைமைகள் வளர்ந்திடாது ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழும் உணர்வினை இது வளர்த்துவிடும்.
1.தனக்குள் ஒளியின் சுடராக வளர்த்திட்ட அருள் ஞானிகள் உணர்வினைக் கவர்ந்து
2.அதை நமக்குள் இணைத்து உருவாக்கும் நந்நாள் தான் “தைப்பூசம்…”