ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 14, 2024

உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக (மணியாக) மாற்ற குருநாதர் எனக்குக் கொடுத்த பயிற்சி

ஒரு சமயம் எதிரி என்ற நிலை உருவாக்கப்படும் பொழுது ஒரு மரத்தைக் காட்டுகின்றார் குருநாதர். ஒரு சொல்லைச் சொல்லும்படி சொன்னவுடன் அந்த மரம் தூக்கி வீசப்பட்டுப் பறந்து போய் விழுகிறது.

யாராவது எதிரிகள் வந்தால்… இப்படி எண்ணினால் அவனைத் தூக்கி எறிந்து விடலாம்… வெற்றி பெறலாம்… நம்மை யாரும் எதிர்க்க முடியாது…! என்ற உணர்வுகள் எனக்கு வருகின்றது.

ஒருவன் சிறிது தவறு செய்தாலும் இதே உணர்வை நீ பாய்ச்சப்படும் போது அந்த வலிமை தான் வரும். “உனக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களை… அது அடித்துச் சென்றுவிடும்…!” என்றார் குருநாதர்.

காற்று வேகமாக வீசினால் என்ன செய்யும்…?
1.தனியாகக் கெட்டதை மட்டும் தூக்கிச் செல்லுமா…?
2.சேர்த்து நல்லதையும் தான் தூக்கிச் செல்லும்.
3.அந்த நல்லதையும் குப்பையுடன் சேர்த்துக் கலக்கத்தான் செய்யும்.

இதைப் போன்ற நிலைகளைக் காட்டி நீ எடுத்துக் கொண்ட உணர்வுகள் உன் உடலுக்குள் என்ன செய்யும்…? என்பதை அங்கே தெளிவாக்குகின்றார்.

குருநாதர் எனக்குச் சக்தி கொடுத்த பின்… ஆஹா…! என்னை யாரும் எதிர்க்க முடியாது என்ற நினைவு வருகிறது. பல முறை அதைச் சோதித்துப் பார்க்கும்படி சொன்னார். இன்னும் சோதித்துப் பார்…! என்றார்

பல முறை செய்த பின் அந்த வேக உணர்வு தான் தோன்றுகின்றது

1.அந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது தீமைகளை உருவாக்கும் உணர்வுதான் உனக்குள் வரும்.
2.அப்போது இந்தத் தீமைகளை யார் அடக்குவது…? யார் நீக்குவது…? என்று நிலைகளை வினா எழுப்புகின்றார்.

உன் ஆறாவது அறிவைக் கொண்டு…
1.தீமையை நீக்கும் உணர்வை எடுத்து அதனுடைய செயலாக்கங்களை மாற்று…!
2.அப்பொழுது தான் அது அடங்கும் என்றார்.

அடுத்து இன்னொரு வேலையும் குருநாதர் செய்தார்.

ஒரு இரும்புக் கரண்டியை வாங்கி வரச் சொன்னார்… ஈயக்கட்டியையும் வாங்கி வரச் சொன்னார். மலைக் காட்டிற்குள் அழைத்துச் சென்றார். அவருக்குத் தெரிந்த பல பச்சிலைகளையும் குப்பைகளையும் எல்லாம் “இதிலே கொஞ்சம்… அதிலே கொஞ்சம்…” என்று எடுத்து வரச் சொன்னார். அங்கங்கே உள்ள தூசிகளையும் போடச் சொன்னோர்.

ஒட்டு மொத்தமாகக் கரண்டியில் போட்டு அதைத் தீயை வைத்து எரிடா..! என்றார்.
1.எரிந்த உணர்வுகள் அதில் வரும் வெப்பத்துடன் கலக்கின்றது.
2.அது கலந்த பின் என்ன செய்கிறது…? ஈயம் “பள… பள…” என்று மின்னுகிறது.

எப்படிடா இருக்கிறது…? என்று கேட்டார். சாமி…! தக…தக… என்று இருக்கின்றது…! என்று சொன்னேன்.

மீண்டும் எப்படிடா இருக்கின்றது என்றார்…? தக…தக… என்று இருக்கிறது என்று சொன்னேன்.

விட்டார்… ஓங்கிப் “பளார்…” என்று ஒரு அடி கொடுத்தார். எப்படி இருக்கிறது…? சொல்லுடா…! என்றார்.

மீண்டும் தக…தக… என்றேன். என்னடா தக…தக…?

அப்புறம் “தங்கம் போல இருக்கின்றது சாமி” என்று சொன்னேன்.

தூ…! என்று சொல்லி அது எல்லாவற்றையும் மூடுடா என்றார். சூடு எல்லாம் ஆறிய பண்பு பார்த்தால் நல்ல “சொக்கத் தங்கமாக” இருக்கிறது.

இதைக் கொண்டு போய்க் கடையில் விற்கச் சென்றால்.. “நீ பைத்தியக்காரிடம் சுற்றிக் கொண்டிருந்தது எதற்காக…? என்று இப்பொழுது தான் தெரிந்தது…! தங்கம் செய்யும் வித்தையைக் கற்றுக் கொண்டாய். தங்கம் எவ்வளவு வேண்டுமானால் கொண்டு வா… உனக்குக் காசு தருகிறேன்…! என்றார்.

இன்னொருவர் என்ன சொல்கின்றார்…! நீங்கள் செய்து கொடுத்தால் உங்களுக்கு மாட மாளிகை கட்டித் தருகிறேன். நீங்கள் விற்க வேண்டாம்…! என்று இப்படிச் சொல்லிக் கொண்டு என் பின்னாடி சுற்றி திரிந்தவர்கள் ஏராளம்.

விற்றுவிட்டு வந்த பின் குருநாதர் என்ன செய்தார்…? காசை எல்லாருக்கும் ஒவ்வொரு ரூபாயாகக் கொடுத்து விட்டார்.

முதலில் அவர் தங்கம் செய்யச் சொல்லும் போது எல்லாவற்றையும் நான் பார்த்தேன் அல்லவா. அவர் இல்லாத பொழுது நான் தனியாகத் தங்கம் செய்து பார்க்க வேண்டும் என்று முயற்சி செய்தேன்

அதே மாதிரித் தங்கம் வந்துவிட்டது.

ஆசை வந்துவிட்டது அல்லவா…! இரண்டாவது இதை விற்று விட்டு வரலாம் என்று கடையிலே சென்று கொடுத்தேன். எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டு வா என்றார்கள்.

குருநாதர் அங்கிருந்து வந்தார். உனக்கு இப்பொழுது எப்படி இந்த ஆசை வருகின்றது…?
1.உன் மனதைத் தங்கமாக்குவதற்கும் அதே சமயத்தில் பாதரசத்தில் மணியைச் செய்யும்படி சொன்னேன்.
2.எல்லா உணர்வுகளையும் சேர்த்து உயிர் எப்படி ஒளியானதோ அது போன்று உணர்வின் தன்மை ஒளியாக்கச் சொன்னேன்
3.தங்கத்தை போன்று மனம் ஆகி மங்காத நிலையாக உருவாகி உணர்வின் தன்மை தெளிவாக்கி
4.அந்தத் தெளிவின் தன்மை உயிர் ஆக்கப்படும் பொழுது இது பாதரசங்களாக மாறும்.

இதன் உணர்வை எல்லாம் சேர்த்து… இங்கே ஈயத்திற்குள் எப்படித் தங்கமாக மாறியதோ… இதைப் போன்று தான் தாவர இனங்களைச் சாரணையாக்கி உணர்வின் தன்மை ஒளி ஆனது. மனித உடலை உருவாக்கக் காரணமானது என்று அறிந்தவன் போகன்.

உணர்வின் தன்மை சிலையாக உருவாக்கி அதிலே சாரணை ஏற்றி மணத்தை வெளிப்படுத்தும் போது…
1.வரும் மக்கள் தீமைகளிலிருந்து விடுபடுவதற்கு அந்த முருகன் சிலையைப் பார்த்து நுகரும் போது
2.நல்ல நிலைகள் உருவாகி… மகிழ்ச்சி என்ற உணர்வு வரும்.
3.அதன் நினைவாக இதை எடுத்து “தன் மனதைத் தெளிவாக்க” இப்படி ஒரு உபாயத்தைச் செய்தான் போகன் அன்று…!

ஆனால் நீ என்ன செய்கின்றாய்…? உன் ஆசை தங்கம் செய்து அதை விற்றுக் காசை சம்பாதிக்கலாம் என்று வந்துவிட்டாய். இந்த ஆசை வந்தால் நீ அடுத்து எதை எடுப்பாய்…? உன் உடலுக்கு உதவும். எல்லோரும் வரவேற்பார்கள் ஏகபோகத்தில் செயல்படுத்துவார்கள். நீ எங்கேடா போகிறாய்…? என்று கேட்டார்.

தங்கம் மங்காது என்று சொன்னீர்கள் தங்கத்தை நோக்கிச் செல்கிறேன் என்றேன்.

1.உன் ஆசை என்ன செய்கின்றது…? தங்கம் செய்து செய்து விற்கத்தான் செல்கிறது…?
2.அப்போது உன் மனது தங்கம் ஆகுமா…? ஆகாது…!
3.தங்கத்தின் மீது ஆசை அதிகமாகும்…!
4.விற்று வளர்ந்துப் பல தவறுகளைச் செய்யும்படிச் செய்யும்
5.கடைசியில் இந்த மனித உடலை அது அழிக்கத்தான் உதவும்.

இரண்டாவது தரம் தங்கம் செய்தவுடன் இதைத்தான் எனக்கு உபதேசித்தார். தங்கம் எப்படிச் செய்ய வேண்டும் என்பதைக் காட்டவும் செய்தார். அதனால் வரும் பின் விளைவுகள் என்ன…? என்பதையும் காட்டினார்.

ஆகையினால் அவர் சொன்ன முறைப்படி நீங்கள் எல்லாம் உயர்ந்த நிலை பெற வேண்டும்… அந்த உயர்ந்த மனம் பெற வேண்டும்…! என்ற எண்ணத்தில் நான் செயல்படுத்தும் போது… நீங்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி எனக்கு உயர்ந்த சத்தாகிறது.

எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று நீங்களும் அதே போன்று எண்ணினால் உங்களுக்கும் அது உயர்ந்த சத்தாகும்.
1.நான் ஒருவன் மட்டும் செய்து பெருமையைக் காட்டினால் நல்லது நடக்குமா…?
2.அருளைப் பெருக்கினால் தான் இருள் விலகும்… அந்த உயர்ந்த நிலையை நாம் பெற முடியும்.

உன்னுடைய ஆசைகள் அதனதன் வழியில் செல்லப்படும் பொழுது அதனுடைய பின் விளைவுகள் என்ன ஆகின்றது…? கடைசியில் நிராசையாக எப்படி மாறுகிறது...?
1.அந்த நேரங்களில் எல்லாம் உன் மனதை எப்படிப் பண்படுத்த வேண்டும்…? என்று
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இப்படித்தான் அனுபவமாக எனக்குக் கொடுத்தார் குருநாதர்.