ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 6, 2024

தீமைகளை நீக்க வேண்டும் என்றால் “அதற்குண்டான முயற்சி” அவசியம் தேவை

ஒரு காரியத்தை மனமுவந்து செய்ய விரும்பினோம் என்றால் அதை எளிதில் செயல்படுத்த முடியும்.
1.ஒருவரைக் கட்டாயப்படுத்தி “நீங்கள் இதைச் செய்யுங்கள்…” என்று சொன்னால் அங்கே அந்த மனம் குறையும்.
2.இவர் என்ன சொல்வது…? நான் என்ன செய்வது…? என்று வந்துவிடும்.
3.சொல்லும் பொழுது அழுத்தமாகி அதிர்வாகி அந்த நிலை ஆகிறது.

ஆனால்… மனதை ஒன்று சேர்த்துச் செய்ய வேண்டும் என்று எண்ணும் பொழுது அந்த இயக்கம் வலிமை பெறுகின்றது.

ஒரு காரியத்திற்கு நண்பர்களாகச் செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். “அவர் செய்கின்றார்… நாமும் செய்வோம்…” என்று எண்ணம் கொண்டு செயல்படுத்தத் தொடங்கினால் அங்கே மகிழ்ச்சி வருகின்றது.

நீங்கள் இருங்கள் நான் செய்கிறேன் என்று சொல்வார். அது அல்லாதபடி நான் இதைச் செய்கிறேன் நீ இதைச் செய் என்கிற பொழுது “நீ என்ன சொல்வது…?” என்ற அந்த உணர்வு வந்து விடுகிறது.
1.இருங்கள்… நான் செய்கிறேன் என்று சொல்லப்படும் பொழுது
2.இல்லை… நானும் செய்கிறேன்…! என்று சொல்ல வருகின்றது
3.அப்பொழுது ஒன்றுபட்டு இயங்கும் நிலை வருகின்றது.
4.தியானம் இருப்போர் நம் எண்ணங்களை இவ்வாறு சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் கணவன் மனைவி இந்த உணர்வு கொண்டு ஒன்றி வரப்படும் பொழுது இந்த உணர்வின் நினைவாற்றல் பெருகப் பெருக… குடும்பப் பற்றும் வரும். கணவனும் மனைவியும் ஒன்று சேர்த்து வாழும் தன்மை வரும்

அவ்வாறு வந்துவிட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் தொழில் வளமும் மற்ற அனைத்துமே சீராக வரும். அனைவரையும் மகிழ்ந்து வாழ செய்யும் சக்தியாக… நம்மையும் மகிழ்ச்சி பெறச் செய்யும் சக்தியாக… நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக வரும்.

1.இத்தகைய நல்ல உணர்வலைகள் வீட்டிற்குள் பரவப் பரவ நம் வீட்டின் தரைகளிலும் சுவர்களிலும் புவிஈர்ப்பிலே பதிந்து
2.நாம் பேசிய அந்தப் பேச்சு மூச்சும் அவ்வாறு பரவும் போது “நம்முடைய உணர்வே நமக்குப் பாதுகாப்பாக (ஓசான் திரையாக) மாறும்…”

நாம் வெளியில்… ரோட்டிலோ அல்லது வாகனங்களிலோ செல்லும் போது அசம்பாவிதங்களைப் பார்க்கின்றோம்... அல்லது பத்திரிக்கை டிவி வாயிலாக அதைப் பார்க்கும் போது அந்த விஷத்தின் தன்மை அதிகமாகக் கவர்ந்து விடுகிறோம்.

“அதே உணர்வுடன்” வீட்டிற்குள் வரும் பொழுது அத்தகைய அசுத்தமான உணர்வுகள் நம் வீட்டில் பதிவாகி விடுகின்றது.

அதே சமயத்தில் ஒரு அசுர உணர்வு கொண்டவர் பேசுவதைப் பார்ப்பதையும் கேட்பதையும் நுகர்ந்து… அந்த அறிவின் தன்மை வந்தால் நம் உடலுக்குள் வரப்படும் பொழுது இதே போன்ற மூச்சலைகளாக வீட்டிற்குள் பதிவாகி விடுகிறது.

அப்படிப் பதிவாகி விட்டால்…
1.வீட்டிற்குள் நாம் நுழைந்தாலே நம் நல்ல உணர்வைத் திசை மாற்றிவிடும் “நம்மை அறியாமலே…”
2.நாமல்ல…! சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் அவரவர்கள் சந்திக்கும் நிலைகளுக்கொப்பத் தான் இதனுடைய நிலைகள் வருகின்றது.

இதை எல்லாம் மாற்றிட… ஒவ்வொரு நாளும் கூட்டுத் தியானம் இருந்து கணவனும் மனைவியும் ஒன்று சேர்த்து வாழ்ந்திடும்… ஒன்றான இயக்கத்தை உருவாக்கி விட்டால்… நம்மைச் சொர்க்கலோகத்திற்கு அழைத்துச் செல்லும்.

இல்லை என்றால் நுகர்ந்த உணர்வின் இயக்கமாக… பற்றென்ற நிலை வரப்படும் போது… நம்மை அறியாமலே விஷத்தின் தன்மையாக்க் கவர்ந்து… கணவன் மனைவிக்குள் வேற்றுமை உருவாகி… நம் நல்ல உணர்வுகளை… ஒன்று சேர்த்து இயக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

மன வேற்றுமை கொண்டு அடுத்து செயல்பட்டால் தொழிலும் சீராக வராது. நஷ்டமாகும் போது மீண்டும் அதிகமான சோர்வும் வேதனையும் தான் வரும்.

இதே உணர்வுகளைக் குழந்தைகள் மேல் பாய்ச்சப்படும் பொழுது இந்த குழந்தைகளும் நம்மை விட்டுப் பிரிந்து செல்லும் நிலை வரும்…. ஒன்று சேர்த்து வாழும் நிலை இல்லாது போய்விடுகிறது.

இதைப் போன்ற நிலைகள் இருந்தெல்லாம் நாம் விடுபடுவதற்குத் தான் உபதேச வாயிலாக உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டு வருவது.
1.அதன் வழியில் அருள் உணர்வுகளைப் பெருக்கிக் கொண்டு வாருங்கள்…
2.அதற்குண்டான முயற்சிகளை எடுங்கள்… முயற்சி எடுத்தால் தான் தீமைகளிலிருந்து மீள முடியும்.

ஒரு கட்டிடமே கட்ட வேண்டும் என்றால் மேடு பள்ளங்களைச் சமப்படுத்தித் தான் கட்டுகின்றோம். ஒரு இயந்திரத்தை இயக்க வேண்டும் என்றாலும் சமமான நிலைகள் கொண்டுதான் அதை இயக்க முடியும்.

இதே போன்று ஒரு குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்றால் “நமது முயற்சி” கணவன் மனைவி ஒன்று சேர்த்து வாழ வேண்டும் என்ற நிலையில் இருவரும் ஒன்றி… அப்படி வளரச் செய்யும் பருவத்தைக் கொண்டு வர வேண்டும்.
1.அப்படிக் கொண்டு வந்தால் தான் குடும்பத்தில் வரும் சிக்கல்களை நீக்க முடியும்…
2.எதிர்நோக்கி வரும் சில தீமைகளையும் அகற்ற முடியும்
3.எத்தகைய நிலைகள் இருந்தாலும் அதை வெல்லும் சக்தியாக இருவருக்குள்ளும் வருகிறது.

பெண்களின் உணர்வுகளும் கணவனுடைய உணர்வுகளும் ஒன்றி வாழ்ந்தால் “எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…”

இப்படிப்பட்ட ஒன்றுபட்ட உணர்வு வரும்பொழுது தீமை என்ற உணர்வு குடும்பத்திற்குள் வந்து இருவரையும் பிரிக்கும் நிலையோ நோயாக மாறும் நிலையோ வராது.

ஆனால் என் மனைவி இப்படி இருக்கிறதே அல்லது என் கணவர் இப்படி இருக்கின்றாரே…! என்று எண்ணினால் வேதனையான உணர்வுகள் நமக்குள் ஊடுருவி அதீதமான தீமைகளாக விளைந்து அதுவே நோயாகிவிடும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து எல்லாம் ஒவ்வொருவரும் விடுபட வேண்டும். அருள் வழியில் பற்றை எப்படி வளர்க்க வேண்டும்…? என்று இருவருமே ஒன்று சேர்த்து
1.கணவன் ஒளி பெற்று உயர வேண்டும்
2.மனைவி அந்த அருள் ஒளி பெற்று உயர வேண்டும்
3.எங்கள் இரு மனமும் இருளை அகற்றிடும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை எண்ணிப் பழக வேண்டும்.

இவ்வாறு “எவரொருவர்” குடும்பத்தில் செயல்படுத்துகின்றனரோ அவர்களுடைய வாழ்க்கையில் எல்லா உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் சாந்தமும் மகிழ்ச்சியும் வரும். குழந்தைகள் ஞானக் குழந்தைகளாக வளருவார்கள்.

நம்முடைய சொல் அனைவரையும் காக்கக்கூடிய சக்தியாக வரும். எந்தச் செயல்கள் செய்தாலும் அது எல்லாம் வளர்ச்சியின் பாதையிலே செல்லும் சீராக வரும். விவசாயம் செய்தாலும் பயிர்கள் நல்ல மகசூல் தரும்.

இதையெல்லாம் நாம்
1.குடும்பத்தில் கணவன் மனைவி ஒன்று சேர்ந்து நிரூபித்து காட்ட வேண்டும்
2.குரு கொடுத்த அருளின் துணை கொண்டு எல்லாவற்றையும் செயல் வடிவுக்கு கொண்டு வர வேண்டும்.