ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 15, 2024

சிருஷ்டியின் இரகசியம்

மூலத்தில் கலந்து இலயிக்கும் ஆனந்தப் பெருநிலை… மூலப் பிரகிருதி சகலமும் சகலமாகக் கலந்து முகிழ்தலின் செயல் நிலை… சூரியனின் சக்தியே வெப்ப ஒளிக் கதிர்களாக… சிவலிங்க அணுக்களாக… சமைத்திடும் நிலைகள் “பரவெளியில் வீசிப் படர்ந்து செயல்படும் சக்திகள்...”

அதை எல்லாம் பூமி தன் ஈர்ப்பின் சமைப்பில் பெற்று… வளர்த்து… வளர்ந்து வரும் பரிணாம வளர்ச்சி என்னும் செயல் நிகழ்வுகளை எல்லாம் “பிண்டத்தைக் கொண்டு” அன்றே மாமகரிஷிகள் உணர்ந்தனர்.

முத்தொழில் உணர்ந்திடும் உயர்வு கொண்டு… சரீர முச்செயல்களால் தங்கள் மெய்ஞானத்தைக் கூட்டி அறிந்து… அதன் வளர்ப்பாக ஞான விழிப்பார்வை கொண்டு அண்டத்தை அறிந்து கொண்டிடும் ஞான திருஷ்டியின் வழியாக… தெய்வீக நிலை பெற்றிடும் மனிதனின் உயர்வைக் கோளங்களின் செயல்பாட்டில் சூரியனை முதன்மையாகக் காட்டி… பூமியின் ஈர்ப்பில் காலைப் பொழுது நண்பகற் பொழுது இராக்காலப் பொழுது என்றே இவ்வண்டத்தில் நடைபெற்றிடும் சூட்சும இரகசியங்களை… நல்லெண்ண நற்சுவாசம் கொண்டே தியானத்தின் வழியாகப் பெற்று உயர்ந்திட நற்போதனைகளாகக் காட்டியவற்றுள்… மாமகரிஷிகள் வழிகாட்டி உயர்ந்ததைப் போல் இக்கலியின் வேகத்திலும் உண்மை உணரும் ஞானச் செல்வங்கள் பிறவா நிலை எனும் அதனினும் சிறப்புற்ற பேரானந்தப் பெரு நிலையை எய்திட முடியுமப்பா.

இராம காவியம் காட்டிய ரிஷி உணர்த்தும் வான் தொடர்பில்…. “மகாலட்சுமி உலவிடும் வேளை…” என்று வாய்மொழிச் சொற்கள் போதிக்கப்பட்டதே… சிருஷ்டியின் முதல் இரகசிய காத்தல் தொழில் எனும் சூரிய சமைப்பு நிலைகள் பூமி பெற்றிடும் காலத்தே… உணர்வலைகள் குணங்களாக ஆத்மா என்றிட்ட பதிவு நிலை பெற்றிடும் தெய்வீக உயர்வைக் கூட்டிக் கொண்டிட… இந்த மனித குலம் பெற்றிடவே “போதனைப்படுத்தப்பட்ட உண்மைகள்…”

1.படைப்பின் படைப்பு செயலுருவே பிரம்மனின் ஹேம அணுக்களாக உலவி ஓடிடும் சிவ சதா மண்டலமும்…
2.சூரியன் சமைப்பில் புலனாக வீசிடும் சிவலிங்க அணுக்களாகக் கலந்து…
3.பூமியின் தொடர்பில் மனிதன் தன் உயர் ஞானத்தால் பெற்றிட…
4.அறிவைத் தூண்டுகின்ற சக்தியாகப் பிரணவ ஆகாச வாணி என்னும் ஒலி சக்தியாக (சரஸ்வதியாக)…
5.தியானத்தில் பெற்றிடும் உண்மைகள் அதி வெப்ப சக்தியால் படைப்பின் ஜீவ ஆதாரம் செயல் கொண்டிடும் சமைப்பு வெப்ப அலைகளால் சமைத்திட்ட சமைப்பு…
6.செயலுறும் மாலை தொடங்கிய இரவின் பொழுதையே சிருஷ்டியின் சமைப்பே ருத்திரனாகவும்
7.அதன் உத்வேக ஊட்டம் அளித்திடும் துர்க்கை என்றே பெயர் நாமமிட்டு அழைத்து…
8.விண்ணின் சக்திகளை இம்மண்ணிலே ஜீவிதம் பெற்றிடும் உயிராத்மாக்கள் பெற்றிடவே…
9.உயிரின் குரு சூரியன் என்றே முதன்மைப்படுத்திட்டு…
10.மாமகான்கள் மெய்யறிவை அறியும் ஞானம் சுடர்ந்திடும் விளக்கைத் தூண்டிடும் தூண்டுகோல் என்றே அளித்த வழி வகைகள்…
11.இந்தக் கலியில் மனிதன் கொண்டிட்ட அறிவின் மெத்தனப் போக்கால்… பாகுபாடு கண்ட செயல்களால்…
12.சிருஷ்டியின் இரகசியங்கள் மாமகான்களால் மறைபொருள்படுத்தப்பட்டன.

“அரசு அன்று கொள்ளும்” என்ற சித்தன் சொல் இம்மனிதனால் “அரசு அன்று கொல்லும்” என்று மாற்றிட்ட சொல் வழக்கு போல் “தெய்வம் நின்று கொள்ளும்? என்பதில்
1.எது அறிவைத் தூண்டுகின்றதோ
2.எது நின்று நிலை பெற்ற ஒளிப்பொருளோ அப்பொருளை வணங்குதல் மாத்திரம் அன்று
3.அந்த மெய்ப்பொருளாகத் தன்னை வளர்த்து… ஒளி எனும் ஜோதித்துவ நிலை பெற்றிட…
4.எண்ணம் கொள்ளல் எது பேரருள் ஒளிச்செல்வமோ… அதனைச் சிந்திக்கத் தலைப்படும் எண்ணத்தின் உயர்வால்
5.நற்சுவாச ஒளி நுண்காந்த அலைகள் ஈர்த்திடும் பக்குவத்தால்
6.சிந்தனையில் கொள்ளும் பொருள் எதுவோ… “அதுவாக இவன் ஆதல்…” என்பது
7.”தெய்வ நிலை பெற்றிடும் மனிதன் நிலை நின்று கொள்ளும்…” பாங்கு அதுவே.