ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 18, 2024

நமக்கு ஜாதகம் இல்லை

ஜாதகம் குறிப்போர்… நட்சத்திரத்தின் நிலைகள் வைத்துப் பூமியின் நிலையை அந்த இயக்கச் சக்தியை மனித உயிரணுவிற்குள் இணைக்கப்பட்டு எழுதி வைத்துள்ளார்கள்… “ஞானிகளுக்குப் பின் வந்தோர்…”

ஆனால் மனிதன் என்பவன் முழுமை பெற்றவன் - முழு முதல் கடவுள்… உருவாக்கும் திறன் பெற்றவன். இருந்தாலும் ஜாதகக் கணிப்புகளை வைத்து இன்று எதைச் சிருஷ்டித்துக் கொள்கின்றார்கள்…? என்று பார்ப்போம்.

ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் (அந்த நேரப்படி)
1.இன்ன நேரத்தில் இன்னென்ன நட்சத்திரங்கள் இன்னென்ன கோள்கள் வந்தது
2.ஆகவே இன்னென்ன கோள்கள் இன்னென்னதற்கு ஆகாது என்பார்கள்.

அதற்குண்டான சாஸ்திரங்களை எழுதி வைத்திருப்பார்கள். அதன் அடிப்படையில் வைத்து ஜாதகங்களை எழுதிக் கொடுப்பார்கள். எந்த மதமானாலும் ஜாதகம் எழுதாதவர்கள் யாரும் இல்லை.

விண்வெளியின் ஆற்றலை (வான இயல்) இயக்கத்தின் நிலைகளை அந்தந்த நாட்டிலே தோன்றிய தத்துவ ஞானிகள் மதத்துடன் இணைத்து இது கடவுளின் அவதாரம்… கடவுளின் செயல்… என்றும் இன்ன நட்சத்திரங்கள் இன்னது தான் ஆகும் என்றும் அவரவர்கள் உணர்வுக்கொப்ப அந்தந்த நாட்டிற்குத் தகுந்த மாதிரி மதங்கள் அமைத்து மதத்திற்குத்தக்க கடவுளை அமைத்துள்ளார்கள்.
1.அதன் அடிப்படை ஆச்சாரப்படி வழி நடத்தும் உணர்வின் தன்மை கொண்டு
2.ஜாதகக் குறிப்புகளை வைத்துக் கொண்டிருப்பார்கள்.

குழந்தை பிறந்து விட்டால் அவர்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படி காலண்டரை பஞ்சாங்கத்தை அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் பார்க்கின்றோம்.

இன்ன நட்சத்திரத்தில் இந்த நிலையில் குழந்தை பிறந்து இருக்கின்றது. இதைக் குறிப்பாக எடுத்துக் கொடுத்தவுடன் அந்தச் சட்டத்தை அவன் வாசிப்பான்.

அவர்கள் எதை எதையெல்லாம் எழுதி வைத்திருக்கின்றார்களோ…
1.இது ஆகாது… இது இப்படி இருக்கின்றது… கஷ்ட காலம் இன்ன நேரத்தில் வரும்…
2.ஏழரை நாட்டான் சனி வருகின்றான் இப்பொழுது பிறந்து விட்டால் உங்கள் குடும்பத்திற்கு ஆகாது என்றும்.
3.அதனால் வியாபாரம் கெடும்… குழந்தை பிறந்த இந்த நேரத்திற்குக் குடும்பத்தில் வரிசையாக சிக்கல்கள் வரும் நோய்கள் வரும் என்று
4.வரிசையாகச் சொல்லிக் கொண்டே போவார்கள்.

அவர் சொல்வதை எல்லாம் “ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்து… எப்படித் திருப்பி இயக்குகின்றோமோ…” அதைப் போன்று நமக்குள் அவர் சொன்னதைப் பதிவு செய்து கொள்கின்றோம்.

பின் அந்தக் குழந்தையை நினைக்கும் பொழுதெல்லாம் எந்த வியாபாரத்திற்கு சென்றாலும் “ஏழரை நாட்டுச் சனி இருக்கின்றானே… ஆகையினால் எப்படி வியாபாரம் செய்வது…?” என்ற எண்ணங்களையே வளர்த்துக் கொண்டு வருவோம்.

இதை எல்லாம் யார் சிருஷ்டித்துக் கொடுத்தது…?

தன் மதத்தை வளர்த்துக் கொள்ள… அதன் கீழ் அரசன் வாழ்ந்திட… மக்களை ஒன்று சேர்க்க… அதன் கீழ் நல்லது கெட்டது என்ற நிலைகள் கொண்டு… அதற்கெல்லாம் தெய்வத்தைக் கொடுத்து… பிழைகள் ஏற்பட்டால் அந்த தெய்வத்திற்கு யாகத்தைச் செய்து விடு…! என்று ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமான முறைகளைப் பின்பற்றுகின்றனர்.

எல்லா மதங்களுமே இப்படித்தான்…!

“ஜாதகக் குறைகள்” ஏற்பட்டு விட்டால் மதத்தின் அடிப்படையில் காட்டிய நிலைகள் கொண்டு இதை நீக்கிட
1.ஆண்டவனுக்கு இதைச் செய்… அல்லது மற்றவர்களை வைத்து இதை ஓதச் செய்.
2.ஆண்டவனிடத்தில் இதற்காக வேண்டி யாகத்தைச் செய்து பரிகாரம் செய்… என்று சொல்வார்கள்.

இப்படி அவர்கள் குறித்து வைத்ததை மதத்துடன் இணைக்கப்பட்டு நமக்குள் பதிவு செய்யப்படும் போது “அது கடவுளாக…” நாம் எண்ணியதை உயிர் படைத்து விடுகிறது… நமக்குள் ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.

உணர்வைப் பதிவு செய்து கொண்ட பின் என்ன நடக்கும்…?
1.குடும்பத்தில் குழந்தை பிறந்ததிலிருந்து வியாபாரம் மந்தமாகும்
2.சகோதரர்களுக்குள் பகைமையாகும்… கொடுக்கல் வாங்கலிலே தடை ஏற்படும்.
3.”எதுவும் உருப்படியாகாது…” என்ற நினைவு எண்ணியவுடனே அலைகளாக மாறி விடுகின்றது.

வெளியிலே எங்கே சென்றாலும் இந்த ஜாதகக் குறிப்பை நினைவுபடுத்தி வைத்துக் கொள்வோம். எண்ணியவுடனே இந்த வாசனை வந்துவிடும்.

யாரிடமாவது வியாபாரம் பேசச் சென்றால் “இவர் என்ன சொல்வாரோ…?” இந்த சந்தேக உணர்வுடன் தான் போவோம். எப்படியும் ஜீவித்து வாழ வேண்டுமே என்று அவரிடம் பேசப்படும் பொழுது நாம் எதையாவது ஒன்று சொன்னால் “அவர் காதிலே கேட்ட பின்” இந்த உணர்வின் இயக்கமாகி அவர் நம்மைப் பார்க்கப்படும் பொழுது நாம் எத்தகைய சந்தேக உணர்வை எண்ணி எடுத்தோமோ அந்த உணர்வின் மணம் முன்னாடி நிற்கும்.

இதை நுகர்ந்த பின் அவருக்குள் என்ன நடக்கிறது…?
1.முதலில் நமக்கு எப்படிக் கலக்கமானதோ
2.அங்கேயும் கலக்கத்தை ஏற்படுத்தி அவருடைய உணர்வுக்குள் கலந்த பின் “பார்ப்போம்…!” என்ற நிலைகள் வந்துவிடும்.

இதற்கு முன்னாடி எல்லாம் சரியாகக் கொடுத்திருப்பார் ஆனால் இப்பொழுது ஏதாவது காரணத்தைச் சொல்லி அப்புறம் பார்ப்போம் என்பார். ஆனால் நாம் என்ன நினைப்போம்…?

1.ஜாதகத்தில் சொன்னது சரியாக இருக்கிறது
2.எல்லாம் அப்படியே நடக்கின்றதே என்று
3.நமக்குள் பதிவு செய்ததையே திரும்ப எண்ணி அதையே நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

காரணம் நாம் எண்ணுவதைத் தான் உயிர் படைக்கின்றது… உணர்வின் செயலை மாற்றுகின்றது.

ஆனால் வியாபாரம் மந்தமாகும் பொழுது வேதனைப்படுகின்றோம் எதிர்காலத்தில் அடுத்து என்ன செய்வது…? என்று சோர்வடைகின்றோம் இதையெல்லாம் கொடுத்தவுடனே அதையும் உயிர் படைத்து விடுகின்றது.

வியாபாரத்தை மந்தமாக்கி… அழகான உடலுக்குள் நோயாக்கி… சுருதியின் திறன் குறைந்து விடும் வீணை வாசிக்கப்படும் பொழுது அதில் இருக்கக்கூடிய நரம்பு கொஞ்சம் தளர்ந்து இருந்தால் கணீரென்று சப்தம் கொடுத்த நரம்பு டொய்ய்ய்ங்ங்… என்று சுருதி மாறிவிடும்.

இது போன்று நமது சொல்லின் தன்மையும் எடுத்துக் கொண்ட உணர்வின் அலைகள் நாதங்கள் சுருதிகள் மாறி… அந்த சுருதிகள் மாறி வெளிப்படும் பொழுது கேட்டு நுகர்வோர் உணர்வுகளிலும் அது இயக்கி… நம்மைத் தாழ்த்திக் கொண்டே தான் இருக்கும்.

இப்படித்தான் ஜாதகக் குறிப்புப் பிரகாரம் சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் மனிதன் முழு முதல் கடவுள் என்கிற போது நாம் எதைச் சிருஷ்டிக்க வேண்டும்…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆக… நம்மை அறியாமலே வேதனையும் துன்பத்தையும் வாழ்க்கையில் நமக்கு நாமே தடை விதித்துக் கொண்டு செல்கின்றோம். இதிலே மதம் இனம் குலம் என்று பிரிக்கப்பட்டு இது என் குலத்திற்கு ஆகாது அல்லது அவர்கள் குலத்திற்கு ஆகாது என்போம்

சம்பந்தங்கள் செய்யும் பொழுது இந்தக் குடும்பத்தாருடன் சம்பந்தம் செய்தால் தான் குலத்துக்கு ஆகும். வேறு குடும்பத்தில் கல்யாணம் செய்தால் என்றெல்லாம்
1.எத்தனையோ வகைகளில் பேதங்களை உருவாக்கி
2.பகைமைகளையே வளர்த்துக் கொண்டு அழித்திடும் உணர்வுகளாகத் தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது.

யாரும் தவறாக எண்ண வேண்டாம்…!

கம்ப்யூட்டரில் பதிவு செய்வது போன்று நம் உடலுக்குள் எது பதிவாகின்றதோ நாம் எண்ணியது மீண்டும் அதை நினைவுபடுத்தப்படும் பொழுது அது தான் நம்மை இயக்கிக் கொண்டுள்ளது.

மனிதன் முழு முதல் கடவுள்… அவனுக்கு ஜாதகம் இல்லை…!