ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 25, 2024

எதிலுமே… பதிவின் நினைவே நமக்குள் (மீண்டும்) வருகின்றது

உபதேசம் கொடுத்துக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு). மீண்டும் அதை ஞாபகப்படுத்தும் நிலையாகத் திரும்பச் சொல்லும் பொழுது
1.”சாமி சொன்னதையே திரும்பச் சொல்கிறார்…” என்ற நினைவு வந்துவிடும்.
2.அப்புறம் பார்க்கலாம் என்று “இதைக் கேட்பதை மறந்து விடுவார்கள்…”

ஒரு செடி கசப்பின் தன்மை கொண்டு உருவான பின் மீண்டும் அந்தக் கசப்பினை நுகர்ந்தால் தான் அந்தச் செடியின் தன்மை வளர முடியும். ரோஜாப் பூ தன்னுடைய நறுமணத்தை மறந்து விட்டோம் என்று மீண்டும் மீண்டும் அதை நுகர்ந்தறிந்தால் தான் ரோஜாப்பூ நறுமணம் அங்கே வரும்.

1.ஒரு மாடோ ஆடோ எந்த உணர்வைத் தனக்குள் உணவாக எடுத்துக் கொண்டதோ
2.அதை மீண்டும் நினைவு கொண்டு உட்கொண்டால் தன் இனமாக… உடலாகி… நோயற்றதாக வாழும்.

ஆனால் அந்தத் தாவர இனைத்தைப் புசித்த மாடு மாற்றுத் தாவரத்தை அது சாப்பிடுமே என்றால் இந்த உணர்வுக்கு எதிர்நிலையாகி மாட்டிற்கு நோய் வந்துவிடும்.

ஆகவே நுகர்ந்து பார்த்துத் “தன் இனம் அல்ல” என்றால் அதை உட்கொள்ளாது விலகிச் செல்கின்றது. இதைப் போன்று தான்
1.நாமும் தீமை என்ற நிலைகளைக் கேட்டறிந்தால் அந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் வராதபடி அதிலிருந்து விடுபட வேண்டும்
2.அவ்வாறு விடுபட வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தனக்குள் புகுத்துதல் வேண்டும்
3அவ்வாறு புகுத்தி விட்டால் அது தீமை அடக்கிடும் சக்தியாக நமக்குள் மாறும்.

இதை நாம் எளிதில் கண்டுணர்வதற்குத் தான் அந்த மகரிஷிகள் தெளிவான நிலைகளில் மனிதனின் வாழ்க்கையில் வரும் தீமைகளை எவ்வாறு எளிதில் அகற்ற முடியும் என்று தெளிந்த மனம் கொண்டு வாழ்வதற்குச் சாஸ்திரங்களைக் கொடுத்துள்ளார்கள்.

அதாவது…
1.சூட்சமத்தில் மறைந்திருக்கும் உண்மைகளை நாம் அறிய முடியவில்லை
2.அதை அறிவதற்காக வேண்டி உருவமாக்கி… அதைக் கதைகளாக்கிக் காவியமாகப் படைத்துள்ளார்கள் மெய் ஞானிகள்.

எண்ணத்தால் நமக்குள் அதைப் பதிவு செய்து… அந்த எண்ணத்தின் துணை கொண்டு ஞானிகள் காட்டிய உண்மை வழிப்படி காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் அருள் உணர்வுகளைத் தனக்குள் எடுத்து அடிக்கடி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

1.எதுவுமே பதிவு செய்யாதபடி நினைவுக்கு வராது
2.பதிவு இல்லை என்றால் நினைவு ஏது…?

ஒருவர் என்னைத் திட்டினார் என்று பதிவு செய்து கொண்டால் தான் அது மீண்டும் நினைவுக்கு வரும். திட்டியது பதிவாகவில்லை என்றால் அந்த நினைவு வராது.

உதாரணமாக… இரயிலில் பயணம் செய்யும் பொழுது ஒருவர் நம்முடன் நல்லவராகப் பேசிக் கொண்டு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அப்படிப் பயணம் செய்யும்பொழுது அவர் உள் உணர்வுகளில் எதிர்பாராதபடி திடீரென்று பயத்தினால் துடிக்கின்றார்… பார்க்கின்றோம்… பதிவாக்குகின்றோம்.

“ஐயோ நல்ல மனிதன்…! இவ்வளவு நேரம் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தாரே… இப்பொழுது திடீரென்று அவர் துடித்து விட்டாரே…!” என்று அடுத்தாற்போல் போல் நாம் இதைத்தான் சொல்வோம்.

1.ஆகவே அவரைப் பற்றிய அந்தப் பதிவு இல்லை என்றால் நினைவு மீண்டும் வராது
2.அதே போல் பள்ளியில் பாடங்களைப் படிக்கும் போது அதிலே பதிவு இல்லை என்றால் படித்தது மீண்டும் நினைவிற்கு வராது.

ஆகவே எதிலுமே பதிவின் நினைவே நமக்குள் வருகின்றது. அதற்காக வேண்டித் தான் அருள் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப உங்களுக்குள் பதிவு செய்து அதை நீங்கள் நினைவு கொள்ளும்படிச் செய்கின்றேன்.

அவ்வாறு நினைவு கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்தால்
1.தீமையை நீக்கக்கூடிய சக்தியை நீங்கள் பெறலாம்
2.உயிரோடு ஒன்றலாம்… அழியா ஒளிச் சரீரம் பெறலாம்
3.மகரிஷிகள் வாழும் எல்லைக்குச் செல்லலாம்.