ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 26, 2024

மகரிஷிகள் காட்டிய உண்மைகளை உணர்ந்து கொண்டால் போதும்…!

பல கோடிச் சரீரங்களில் உயிர் கடவுளாக நின்று எண்ணியதை எல்லாம் உருவாக்கிக் கொண்டே உள்ளது. அதாவது

1.பரமாத்மாவாக மாறுவதைத் ஆன்மாவாக மாற்றித் தனக்குள் ஜீவான்மாவாக மாற்றுகிறது
2.அதுவே உள் நின்று கடவுளாக ஒவ்வொரு உணர்வுகளையும் உறுப்புகளையும் நமக்குள் உருவாக்குகிறது

இவ்வாறு உருவுக்கு உறுதுணையாக நம் உயிரின் செயலாக்கங்கள் எவ்வாறு இருக்கிறது…? என்ற நிலையைத் தெளிவாக எடுத்துரைத்தான் அன்று வியாசகன்

ஆதியில் அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையைப் பகுத்தறிந்து உணர்வின் செயலால் சாதாரண தன் இன மக்களுக்கு இது கிடைக்க வேண்டும் என்று இந்த 4000 ஆண்டுகளுக்குள் மிகத் தெளிவான நிலைகள் வியாசகன் கொடுத்தான்.

ஆனால் இதையெல்லாம் சாங்கிய சாஸ்திரமாக மாற்றப்பட்டு… மனிதனின் முழுமையின் உண்மை நிலைகளை அறியாதபடி…
1.மனிதனான பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலை தடுமாறி
2.கடவுளுக்கு நைவேத்தியம் செய்தால் நம்மைக் காப்பாற்றுவான் என்றும்
3.அவனுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்தால் அவன் மகிழ்ந்து எனக்கு உதவி செய்வான் என்றும்
4.இத்தகைய எண்ணங்களைத் தான் நமக்குள் உருவாக்கி விட்டார்களே தவிர
5.மனிதன் மகரிஷிகள் உணர்வைத் தனக்குள் எடுத்தால் தீமையான உணர்வுகளில் இருந்து மீள முடியும்
6.அந்த மகரிஷிகள் சென்ற இடத்தை நாம் அடைய முடியும் என்று உணர்த்தவில்லை.

அந்த மகரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வுகள்…
1.அவர்கள் சொன்னது அனைத்தையும் உங்களுக்குத் தினசரி பதிவாக்கி தெளிவாக்கி
2.அதன் உணர்வை நினைவாக்கி உங்களைக் காப்பதும்
3.உங்கள் மூதாதையர்களை விண் செலுத்திக் காப்பதும்
4.இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையை உணர்த்தி வருகின்றேன் (ஞானகுரு).

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அனுபவத்தின் வாயிலாக இந்த உணர்வின் இயக்கங்களை எம்மை அறியச் செய்து எல்லோருக்கும் உணர்வைப் பதிவு செய்யும்படி சொன்னார்.

அந்த அருள் வழிப்படி ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தான் அறிந்து இந்த வாழ்க்கையில் தீமைகளை அகற்றித் தீமையற்ற உணர்வைத் தன்னில் விளைய வைக்க முடியும்.

வான்மீகி படித்தவன் அல்ல வியாசகரும் படித்தவர் அல்ல. அதைப் போன்று தான் கிராமத்தில் வாழக்கூடிய படிப்பறிவில்லாத மக்களாக இருந்தாலும்
1.எம்முடைய உபதேச உணர்வுகளைப் பதிவு செய்து கொண்டால் போதும்
2.இந்த நினைவு உங்களைக் காத்திடும் எண்ணமாக வரும்.

எத்தகைய தீமையாக இருந்தாலும்… உங்களைக் காத்து மற்றவர்களைக் காத்தாலும்… அந்தத் தீமைகள் உங்களைச் சாடாது “உங்களைக் காக்கும் வலுவான எண்ணங்களை நீங்கள் பெற முடியும்…” என்பதற்கே இதை உபதேசிக்கின்றேன்.

“எத்தகைய தீமையை உருவாக்குபவரை” நீங்கள் உற்றுப் பார்த்தாலும் அதன் உணர்வை நுகர நேர்ந்தாலும் அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அந்த தீமையின் உணர்வுகள் உங்களுக்குள் இணைந்து விடாது.

அதே சமயம் அந்த மகரிஷியின் உணர்வால் உங்களைக் காத்திட முடியும். தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் எவ்வாறு அந்தத் திரவகம் அதில் சேர்ந்த செம்பையும் பித்தளையும் ஆவியாக நீக்குகின்றதோ… இதைப் போன்று
1.உபதேசம் கேட்கும் அனைவருக்கும் இந்த உணர்வின் ஆற்றல் மிக்க நிலைகள் எம்மால் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டு
2.எப்போது எந்த நிமிடத்தில் பிறருக்கு உதவி செய்கின்றீர்களோ
3.அவர்களின் வேதனைக் குரலைக் கேட்டு அவர்களுக்குப் பரிவான நிலைகள் கொண்டு உதவி செய்தாலும்
4.ஈஸ்வரா என்று உங்கள் உயிரை வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
5.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று பல முறை சொல்லி விட்டால்
6.திரவகம் போன்று இருக்கும் இந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் தீமையைக் கேட்டறிந்தத் தூய்மைப்படுத்தும்.

அதைத் துடைத்து விட்டு… தீமையில் வாடுபவர் அந்த மகரிஷிகளின் சக்தி பெற வேண்டும் அவர் நோய் நீங்க வேண்டும் அவர் எதிர்காலம் மகிழ்ந்திருக்க வேண்டும் என்ற இந்த உணர்வுகளை உங்களுக்குள் படைத்திடல் வேண்டும் (இது முக்கியம்).

இந்த உணர்வின் செயலாக வெளிப்படுத்துவதை இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
1.எவர் கேட்டுணர்ந்தாலும் அவர் உடலிலும் புகுந்து
2.அந்தத் தீமையை அகற்றிடும் சக்தியாக விளையும்.

விநாயகர் தத்துவத்தில் இத்தகைய நிலையைத் தான் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
1.தன் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும்…?
2.தன் வாழ்க்கையில் வரும் நன்மைகளை எவ்வாறு காக்க வேண்டும்…?
3.பிறருடைய தீமைகளிலிருந்து நாம் எப்படி விடுபட வேண்டும்…?
4.தீமையில் வாடுவோருக்கு நாம் எவ்வாறு உதவி செய்ய வேண்டும்…?
5.தீமையான நிலைகள் தன்னைப் பற்றிடாது எவ்வாறு வாழ்ந்திட வேண்டும்…? என்ற இந்த நிலையை
6.சாதாரண பாமர மக்களும் அறிந்துணர்ந்து கொள்வதற்குத் தான் விநாயகர் தத்துவம் தெளிவாகக் காட்டப்பட்டது ஞானிகளால்…!