அன்றாடம் நம் வீட்டை எவ்வாறு தூய்மைப்படுத்துகின்றோமோ அது போன்று நம் ஆன்மாவையும் அடிக்கடி தூய்மைப்படுத்த வேண்டும்.
1.வீட்டைத் திறக்காது சில காலம் பூட்டி வைத்து விட்டால் நெடி ஏறிவிடும்
2.அடுத்து அங்கே உள்ளே செல்ல வேண்டும் என்றால் “நுழையும் பொழுதே சங்கடமாக இருக்கும்…”
அதே போன்று நாம் தினசரி குளிக்காமல் இருந்தால் உடலில் அசுத்தங்கள் ஏறிவிடும்… மேலெல்லாம் அரிப்பாகிவிடும். நம்முடைய உடைகளையும் அவ்வப்போது தூய்மைப்படுத்தவில்லை என்றால் அழுக்கு ஏறி… துணியே இத்துப் போகும்.
அதைப் போன்று தான் நம் ஆன்மாவையும் அடிக்கடி அந்த அருள் ஞானிகள் உணர்வைக் கொண்டு அதைத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
1.எந்த அளவிற்கு நாம் தூய்மைப்படுத்துகின்றோமோ இவை அனைத்தும் நமக்குள் “பேரருளாக மாறும்…”
2.எதையுமே நல் சொல்லாகும் நல் செயலாகவும் நாம் செயல்படுத்தும் அந்த அருளாக மாறும்.
3.நமது வாழ்க்கை பிறருடைய தீமைகளை அகற்ற உதவும்.
4.நம் சொல்லின் உணர்வுகள் பிறருக்கு நன்மை செய்யும் உணர்ச்சிகளை ஊட்டும்
பிறருடைய நிலைகளை மகிழச் செய்யும் பொழுது தான் “பேரொளி…” ஆக… அந்த உணர்வின் தன்மை நமக்குள் வளர்ந்து பேரொளி என்ற நிலை அடைகின்றது. ஒவ்வொருவரும் இதனை மனதில் வைத்து இல்லற வாழ்க்கையில் அருள் வழி வாழுங்கள்.
ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவியும் ஒன்று சேர்ந்து வாழும் நிலைக்கு வரவேண்டும். அதற்குண்டான வழிகளை… உபாயங்களைக் கூட்டுங்கள்.
கணவன் மனைவி ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் அந்த ஊருக்கு மட்டுமல்ல… தெருவுக்கு மட்டுமல்ல… வீட்டுக்கு மட்டுமல்ல… எல்லோருக்கும் நன்மை பயக்கும் சக்தியாக வருகிறது.
இது போன்று
1.ஒரு பத்துக் குடும்பங்கள் ஒன்றுபட்டு வாழும் நிலை வந்தால் அந்தத் தெருவே பரிசுத்தமாகும்..
2.அங்கிருக்கக்கூடிய மக்களும் தெளிவடைவார்கள்.
3.ஒருவருக்கொருவர் அறியாது சேரும் பகைமை உணர்வை மாற்றிடும் சக்தி பெற முடியும்.
அந்த வீடோ தெருவோ ஊரோ சொர்க்கலோகமாக மாறும். மற்றவர்கள் அங்கே வந்தாலும் அவர்களுக்கும் அங்கே ஒரு மகிழ்ச்சி ஊட்டும் சக்தியாக வரும். ஆகவே… தெளிந்த மனதுடன் வாழ்ந்திடும் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் குடும்பங்களில் முதலில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் “இரண்டு பேரும் ஒன்று சேர்த்து வாழ வேண்டும்…” என்று முயற்சிகளைக் கொண்டு வாருங்கள்.
மனித வாழ்க்கையில் எத்தனையோ அன்பும் பண்பும் கொண்டு வளர்ந்த நாம்… பிறருடைய கஷ்டங்களைக் கேட்டறிந்து அதைப் பதிவாக்கி இருப்பதனால் பிறருடைய ஆன்மா… அதாவது உடலை விட்டு சென்ற பின் அது நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.
1.வந்த பின் அதனின் உணர்வை நம்மை அறியாமலே இயக்குகின்றது
2.நல்லதைப் பேசும் உணர்வுகளை அது மாற்றி விடுகின்றது.
ஆகவே எல்லோரும் ஒன்றுபட்ட உணர்வு கொண்டு கூட்டுத் தியானம் இருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவாக எடுத்து “மன உறுதி” வரும்படி செய்ய வேண்டும்.
பின்… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அந்த ஆன்மா பெற வேண்டும்… அந்த உடலில் இருந்து அவருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
யாருடைய உடலிலாவது இப்படி வித்தியாசமான மன நிலை இருந்தால் கூட்டுத் தியானங்கள் அமைத்து அவரை எண்ணி ஒரு பாலை வைத்துத் தியானம் இருக்கச் செய்ய வேண்டும்.
தியானித்து முடிந்த பின் அவருக்கு அதைக் கொடுத்து… பாலைப் போன்ற தெளிந்த மனம் பெற வேண்டும் அந்த உடலில் இருக்கக்கூடிய ஆன்மா தெளிந்த மனம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை வளர்த்து அங்கே பாய்ச்சிப் பாருங்கள்.
இவ்வாறு செய்தால்
1.நமக்குள் எத்தகைய நிலை இருந்தாலும் அருள் வழியில் வலிமை பெற்ற அணுக்களாக மாற்ற முடியும்
2.உங்களை நீங்கள் நம்புங்கள்.
உங்கள் உயிர் ஈஸ்வரலோகமாக இருக்கின்றது… எண்ணியது எதுவோ அதன் உணர்வினைக் கருவாக உருவாக்கி வளர்க்கும் சக்தியாகச் செயல்படுகின்றது. மீண்டும் எண்ணும் பொழுது அதன் உணர்வையே வளர்க்கிறது
ஆகவே இந்த இல்லற வாழ்க்கையில் அருள் வாழ்க்கை வாழ்ந்து நாம் அனைவரும் பிறவியில்லா நிலை அடைவோம்.