தைப்பூசம் என்றால் முருகனுக்கு நன்னாள். அதாவது நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு எதையெல்லாம் நமக்குள் சேர்க்கப்பட வேண்டும் என்று உணர்த்தும் நாள் அது.
முருகன் ஆலயத்திற்குச் செல்லும் பொழுது “காவடிகளை” எடுத்து ஆடுகின்றோம் காவடியில் “மயில் தோகைகளை” வைத்துள்ளார்கள்… முருகனுக்கு உகந்தது அந்த மயில் என்று வைத்திருக்கின்றோம்.
அதனின் உட்பொருள் என்ன…?
1.மயில் தன்னுடைய வாழ்க்கையில் விஷ ஜந்துகளை உணவாக உட்கொண்டாலும் அது மகிழ்ச்சியாகத் தோகை விரித்து ஆடுகின்றது
2.அதே சமயம் அந்த நஞ்சினையும் உள் அடக்குகின்றது.
இதைப் போன்று தான் ஆறாவது அறிவு கொண்ட நாமும் நஞ்சினை அடக்கும் சக்தி பெற்றவர்கள்.
கருணைக்கிழங்கு இருக்கிறது என்றால் அதை வேக வைத்து அதில் உள்ள நஞ்சினை நீக்குகின்றோம் தொக்கி உள்ள நஞ்சினை நீக்கப் புளி காரம் உப்பு இவைகளை வைத்து அடக்குகின்றோம்.
அதாவது
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு முதலில் கருணைக்கிழங்கில் நஞ்சு இருக்கிறது என்றும் அறிந்து கொள்கின்றோம்
2.அதை நீரிலே இட்டு வேக வைத்துக் கொதிகலனாக்குகிறோம்
3.அந்த நீரின் சத்து விஷமான கிழங்குக்குள் ஊடுருவி அதனுடன் இரண்டறக் கலந்து இருக்கும் விஷத்தன்மைகள் ஆவியாக மாற்றுகின்றது.
4.புளியை இணைத்தபின் தொக்கி உள்ள விஷத்தன்மையை அடக்குகின்றது.
5.மிளகாய் சீரகம் உப்பு மற்ற பொருள்களை இணைக்கப்படும் பொழுது சுவை மிக்கதாக உருவாகின்றது.
அதைத்தான் ச ர ஹ ண ப வா… குகா… என்று சரணம் அடையச் செய்யும் சக்தியாக மனித உடலான குகைக்குள் இருக்கின்றது. நாம் சுவையாக உணவை உட்கொண்டாலும் அதில் மறைந்திருக்கும் நஞ்சின் தன்மையை மலமாக மாற்றிவிட்டு நல்ல உணர்வினை உடலாக மாற்றுகின்றது.
இது தான் சரஹணபவா குகா கந்தா கடம்பா கார்த்திகேயா. உடலில் இருந்து வரக்கூடிய ஆறாவது அறிவை இப்படித் தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.
இந்த உடலான குகைக்குள் நின்று வருவதை அணைத்து தீமையான நிலைகளை நீக்கிவிட்டு சரணமடையச் செய்யக்கூடிய சக்தியாக
இந்த உடலான குகைக்குள் நின்று… கந்தா வருவதனைத்தையும்… கடம்பா உருவாக்கி… கார்த்திகேயா…! நாம் அந்தக் கருணைக்கிழங்கு குழம்பைச் சுவையாக வைத்து எப்படி மகிழ்ச்சியாக உட்கொள்கின்றோமோ அதைப்போன்று தீமையான உணர்வுகளை மலமாக மாற்றிவிட்டு நல்ல உணர்வுகளை உடலாக மாற்றுகின்றது.
இவ்வாறு நல்ல உடலாக மாற்றிய இந்த உணர்வின் சக்தியைத்தான் கார்த்திகேயா தெரிந்திடும் நிலை.
கருணைக்கிழங்கில் இருக்கும் நஞ்சினை அறிந்து… அந்த நஞ்சினை நீக்க அதை வேக வைத்து மற்ற நிலைகளை இணைத்துச் சுவையாக்குவது போன்று.. வாழ்க்கையிலும் அந்த நிலையைச் செயல்படுத்த வேண்டும்.
1.அது தான் முருகு மாற்றி அமைக்கும் சக்தி
2.முருகா அழகு படுத்தும் மகிழச் செய்யும் நிலையாக “மகிழ்வாகனா…” என்று
3.மயிலை வாகனமாக வைத்து அதன் கீழ் பாம்பினை வைத்துக் காட்டி உள்ளார்கள்.
இதை நினைவுபடுத்தும் நாளாகத் தைப்பூசம் அன்று காவடி எடுத்து “மயில் தோகைகளை அதில் வைத்து” ஆனந்தக் கூத்தாடி நாம் மகிழ்கின்றோம். அந்த மயில் எவ்வாறு நஞ்சினை நீக்கியதோ இதைப் போன்று
1.நமது வாழ்க்கையில் எத்தனை தீமைகள் வந்தாலும்… எத்தனை பேருடன் நாம் பழகினாலும்
2.சந்தர்ப்ப பேதத்தால் அறியாது வரக்கூடிய அந்த நஞ்சின் தன்மைகளை நீக்க
3.ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ் நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்ப்பித்து
4.அந்த நஞ்சினை அடக்கி மகிழச் செய்யக்கூடிய சக்தியாக நாம் உருவாக்க முடியும்.
அப்படி உருவாக்கும் சக்தியை நினைவுபடுத்தி… எல்லோரும் அதைப் பெறக்கூடிய நன்னாள்தான் தைப்பூசம். அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாள் தைப்பூசம். நம்முடைய முன்னோர்கள் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை விண் செலுத்தும் நாள் தைப்பூசம்.