பரமேஸ்வரர் மாமகரிஷியின் வாசஸ்தலமாக விளங்கும் கோகர்ணக் கடற்கரையை ஒட்டி மீனவர் குப்பம் தென்படுகின்றது. கடல் ஓடும் மீன்பிடி நாவாய்கள் கூடுதலாக வைத்திருப்பவன் எவனோ அவனே அந்த இனத் தலைவனாக அந்த இனத்தையே ஆளும் தகுதியை பெறுவான்.
வாய்ச் சொல்லின் கட்டளைக்கு ஏற்பக் கட்டுப்பட்டு ஒழுகும் வைராக்கிய இன மக்களின் பிறப்பில் வந்தவன்தான் நாவாய்கள் உடைய “செம்பான்…”
அந்த இனத்தின் முக்கிய குல வழக்கம் கடல் ஓடும் மரக்கலங்களை மறித்து கொள்ளை ஆடிப்பது தான். இருந்தாலும்… கொள்ளையடிக்க விருப்பம் காட்டும் அந்த மக்களில் தெய்வீக நம்பிக்கை கொண்டே வாழ்ந்தவன் செம்பான்.
இனத்தாரின் வற்புறுத்தல்களை ஏற்றுக்கொண்டு கொள்ளையிடச் சென்றாலும்… மீன் பிடித்தே வாழ்க்கை நடத்தும் லட்சியமாக ஒதுங்கி வாழ்ந்த செம்பானை ஆட்கொள்ளப்பட்ட சக்தி தான் என்ன…?
கொள்ளை இடச் சென்ற சமயத்தில்… ஆயுதம் கொண்டு போர் புரியும் காலத்தே… உடைமைகளைக் காத்திடல் வேண்டும் என்றே போர் புரிந்திடும் இரு குழுக்களின் தன்மைகளை விடுத்து ஒதுங்கி இருந்தான் செம்பான்.
அப்போது தெறித்து வந்த ஒரு ஆயுதம் செம்பான் உடலில் தைத்து சரீரம் மரண காயப்பட்டது. சிறிய படகொன்றில் தப்பிச் சென்றிட முனைந்த பொழுது சூறாவளி ஏற்பட்ட்து.
அங்குள்ள அனைவருமே கடல் கொந்தளிப்பில் மாய்ந்துவிட அந்தச் சூறாவளியில் சிக்கி உயிருக்காக போராடும் அச்செம்பானின் உடலில் செயல்பட வந்திட்ட ரிஷியை நீ அறிவாயப்பா…!
அலை கடலின் சூறாவளியில் சிக்குண்ட செம்பான்… உடல் துன்பமுற ஜீவன் பிரிந்து விடும் அந்தக் காலகட்டத்தில்… இவன் புசித்திட விழைந்த மீன் இனத்தால் அலை கடலில் கரையில் ஒதுக்கப்பட்டான்.
அப்போது
1.அந்தச் சரீரத்தை “சூட்சும முனிவனால்” இயக்கப்பெறும் பேறு பெற்று எழுந்து
2.உயிரின் ஆதி மூலமாகத் தன்னுள்ளே உபதேசம் பெற்று
3.தான் வேறல்ல தன்னுள் இயங்கும் அந்த மாமகான் வேறல்ல என்கின்ற நிலையின் கருத்தொருமித்த கூட்டாகி…
4.தன்னை இயக்க வந்த சக்தியையே உபாசிக்கும் பரமாத்மாவாக உபதேசம் ஏற்ற செம்பான் (ஜீவாத்மா)
5.தான் ஏற்றுக் கொண்ட பக்குவத்தால் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்று சேரக்கூடிய சந்தர்ப்பமாக அது அமைந்த்து.
கடமையைச் செய்தலின் பிரதிபலன் எதிர் நோக்கா மனத்தின் பக்குவம்… ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலந்திடும் லயத்தின் மெய்யொலி மெய் ஞானமாக… கீதையின் ரசமாக வடித்துத் தந்தவர் யார்…? என்ற உண்மையை… இன்று உம்மை இயக்கிடும் சூட்சமத்தால் தெரிந்து கொள்.
கிருஷ்ணாவதாரக் காலம் நிகழப் பெற்ற சம்பவங்களின் கோர்வையில்… பக்தி ரசம் சொட்டும் லீலைகளாகக் காட்டிடும் கோபியர்கள் என்றிட்ட ஆனந்த லயமாகும் மனத்தின் செயல் காட்டி… அசுர குணத்தன்மைகளை மாய்த்திட்ட உயிர் சக்தி… ஆத்ம பலம் காட்டும் அர்ஜுன உபதேச கீதையில் உணர்த்த வந்திட்டது எது…?
கலியில் உழன்றிடும் மனிதனின் மன நிலை அதி பேராசை உணர்வுகளும்… வினைப் பயன் கூட்டும் விந்தைகளும்… மகாபாரதக் கதை முழுக்க வியாசரின் அனுபவங்கள் பேசுகின்றனவப்பா.
1.சரீரம் கொண்டு வாழும் உலகியல் நிலையில் மனத்தின் கண் எழும் மாபெரும் போராட்டமும்
2.பஞ்சேந்திரியங்கள் அடங்கும் நிலையும்… துர்க்குண சம்காரம் நிகழ்த்தப் பெறும் நிலையில்
3.கலியின் செயல் சூட்சுமம் காட்டிடும் பண்பு நெறி விலக்கிடும் அதர்ம காரியங்கள் நிகழப் பெற்று உயிராத்மா வதைபடும் நிலை உணர்ந்தால்
4.சாதுர்ய அறிவின் ஆற்றலாகத் தன்னைக் காத்துக் கொள்ளும் முழுமையை விளக்குவதில்
5.மகாபாரத வியாசர் பெற்றிட்ட அனுபவங்கள் விரிவாக அறிய வேண்டிய ஒன்று.