ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 7, 2024

சப்தரிஷிகளின் ஞான வித்துக்களைத் தான் உங்களுக்குள் ஊன்றுகின்றோம்

“சப்தரிஷிகள்” தனது வாழ்க்கையில் தன்னை அறிந்து இருளை அகற்றிப் பேரருள் பெற்று பேரொளி என ஆன அவர் உடலில் விளைய வைத்த உணர்வுகள் வெளி வந்த அனைத்தும் இங்கே பரமாத்மாவாக நமக்கு முன் பரவி இருக்கின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அருளிய அந்த அருள் வழியில் நானும் (ஞானகுரு) அதைக் கண்டுணர்ந்து… அந்த அருள் உணர்வை எனக்குள் வளர்த்து சொல்லாக இப்பொழுது வெளிப்படுத்துகின்றேன்.

சொல்லாக அப்படி வெளிப்படுத்தும் போது இந்தப் பூமியில் பரமாத்மாவாகப் படர்கின்றது.
1.சொல்லாகச் சொல்லும் போது யாரெல்லாம் இதைக் கவர வேண்டும் என்ற உணர்வுடன் நுகர்ந்தறிகின்றனரோ
2.கவர்ந்த உணர்வுகள்… அந்த உணர்வுகள் அனைத்தும் ஞான வித்தாகப் பதிவாகின்றது.

வித்துக்களைப் பண்படுத்தி நிலத்திலே ஊன்றிச் சீராக எப்படி வளர்க்கின்றோமோ… இதைப் போன்று மகரிஷிகளின் வித்துக்களை உணர்வுகளைப் பெறக்கூடிய சத்தாக உங்களுக்குள் “ஞான வித்தாகப் பதிவு செய்கின்றேன்…”

1.”எந்த அளவிற்கு” நீங்கள் அதைப் பெற வேண்டுமென்று கவர்கின்றீர்களோ “அந்த அளவிற்கு” ஆழமாக உங்களுக்குள் பதிவாகின்றது
2.பதிவான நிலையை நினைவுக்கு கொண்டு வந்து மீண்டும் அந்த அருள் உணர்வை நீங்கள் கவர்ந்தால்
3.அருள் ஞானிகள் பெற்ற உணர்வினை உங்களுக்குள் வளர்க்க முடியும்.

வளர்த்த உணர்வின் துணை கொண்டு… அந்தச் சப்தரிஷிகள் எப்படி இருளை அகற்றிப் பொருள் கண்டுணர்ந்து வாழ்ந்து… பிறவியில்லா நிலையை அடைந்தனரோ… அந்த அருள் உணர்வை நீங்களும் பெற முடியும்.

எமது குருநாதர் எப்படிப் பல உண்மையின் உணர்வுகளை அறிந்தாரோ அதை எல்லாம் எமக்குள் பாய்ச்சி…
1.அந்த அருள் வழி வெளிப்படும்படி செய்து
2.அனைவருக்குள்ளும் ஞான வித்தாகப் பதிவு செய்து
3.அவர்களுக்குள் அறியாது சேரும் தீமைகளிலிருந்து விடுபடும் மார்க்கத்தைக் காட்டும்படி சொன்னார்.

அவர்கள் அவ்வாறு வளர்த்திடும் அந்தப் பேரருளை இந்தப் பூமியில் பரமாத்மாவாக பரவச் செய்ய வேண்டும். இங்கே வாழும் மக்கள் அனைவரும் வாழ்க்கையில் அவர்கள் சந்தர்ப்பத்தில் ஏற்படும் இருளை அகற்றி அவர்கள் அருள் வழி வாழ்ந்திட வேண்டும்.

இந்த உயிர் எத்தனை கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக எப்படி வந்ததோ
1.உயிரைப் போன்றே உணர்வுகள் அனைத்தும் ஒளியாகி
2.ஒளியின் சரீரம் பெறக்கூடிய உணர்வைப் பெறச் செய்வதே
3.நமது குருநாதர் காட்டிய அருள் வழி நெறி தியானம்.

உங்களில் இப்போது பதிவு செய்ததை… அந்தச் சக்திகளைப் பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கினால் “அதுவே தியானம் ஆகிறது…”