கருணைஸ்வரூபா:-
“கருணைஸ்வரூபா” என்றால் நாம் எதையெல்லாம் எண்ணி எடுக்கின்றோமோ “அந்த உணர்வின் ரூபமாக என்னை மாற்றுபவன் உயிர் குரு…” நாம் எண்ணியதையெல்லாம் ஈசனாக இருந்து உருவாக்குவது உயிர்.
உணர்வின் தன்மை எதை உருவாக்குகின்றோமோ… உருவான இந்த மனித உடலுக்கும் உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களுக்கும் “உயிரே குரு…”
என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா:-
என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா என்றால்
1.நீ உயிராக இருந்து ஒளியை எப்படி உருவாக்குகின்றாயோ உணர்வின் அறிவாக எப்படித் தெரிவிக்கின்றாயோ அதைப்போல
2.எனது உணர்வுகளும் இந்த உடலில் இருக்கும் அனைத்தும் மாறி
3.உன்னுடன் அரவணைத்து அதுவாகவே என்னை மாற்று…!
4.ஒளியாக மாற்றும் அந்த அருளை எனக்குள் உருவாக்குவாய் என்றுதான் பொருள்.
ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா:-
ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா என்றால் “விஷத்தின் தாக்குதலால் தான்” துடிப்பாகி வெப்பமானது நம் உயிர். விஷம் என்ற நிலை ஆனாலும் அதன் நிலை வருகின்றது.
வெப்பத்தின் உணர்வு கொண்டு அனைத்தையும் உருவாக்கும் சக்தி பெற்றாய். அருள் ஒளியை அறிந்திடும் ஆறாவது அறிவாக ஆனாய். உணர்வின் தன்மை தெளிவாக்கும் உணர்வை எனக்குள் உருவாக்கினாய்.
1.இது எல்லாம் அவனே தான் நாம் அல்ல.
2.அவனே தான் நாம்… அவன் உணர்வின் தன்மை அவனோடு இணையப்படும் பொழுது அவனாக நாம் மாறுதல் வேண்டும்
3.அவன் நானாகி நான் அவனாக வேண்டும்.
இப்பொழுது நானாகி அவனாகும் நிலை வேறு…! ஆனால்
1.அவனாகி அவன் நானாகுதல் வேண்டும்.
2.அவன் நானாகி… நான் அவனாகுதல் வேண்டும் என்பதுதான் இதனின் பொருள்.
என் இசையில் நீ இசைப்பாய் என் நினைவில் நீ வருவாய்:-
நமது உயிர் அரங்கநாதனாக இருக்கின்றது. நாம் நுகரும் உணர்வுகள் உயிரிலே பட்ட பின் அந்தந்த உணர்வின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது. ஆக எந்த குணத்தை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் இசையாக அவன் இயக்குகின்றான்.
1.உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ இருளை அகற்றுகின்றதோ
2.அந்த உணர்வின் இசை எனக்கு வேண்டும்.
நான் சொல்வதைக் கேட்ட பின் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி வர வேண்டும் தெளிவான மனம் அவன் பெற வேண்டும்… தெளிவாக வாழ்ந்திடும் வாழ்க்கை வர வேண்டும்… எனக்குள் தெளிவான உணர்வுகள் வர வேண்டும். எனக்குள் இருக்கும் அணுக்கள் அனைத்தும் அந்தத் தெளிந்த நிலைகள் பெற வேண்டும்.
ஒளியாக இருக்கும் அந்த உணர்வின் தன்மை வரும் போது… என் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும்
1.அந்த ஒளியின் சிகரமாக இருளை அகற்றிடும் நிலையாக
2.அருள் வழி வாழ்ந்திடும் நிலையாக எனக்குள் வளர வேண்டும் என்பதுதான் பொருள்.
உன் அருளைப் பெற்றிடவே என் நினைவைத் தந்துவிட்டேன்:-
உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ அதைப்போல என் நினைவுகள் அனைத்தும் ஒளியாகும் உணர்வாக வருவதற்கு என் நினைவுகள் எல்லாவற்றையும் “உன்னிடமே ஒப்படைத்து விடுகின்றேன்…”
நீ எப்படித் தெளிவாக அறிவாக இந்த உலகை அறிவிக்கின்றாயோ அதைப்போல உலக அறிவை அறிந்திடும் அந்த சக்தி எல்லாம் உன்னுடன் ஒன்றி அதன் வழி தெளிந்து வாழ வேண்டும்.
ஓம் ஈஸ்வரா… ஓம் ஈஸ்வரா:-
நாம் எண்ணி ஏங்கியதையெல்லாம் ஓ…ம் ஈஸ்வரா…! என்று பிரணவமாக்கி அதை ஜீவ அணுவாக உயிர் மாற்றிக் கொண்டே உள்ளது. உயிரைப் போலவே அணுவாக உருவாக்குகின்றது.
அதைத்தான் “ஓம் ஈஸ்வரா” என்று அடிக்கடி சொல்வது.
நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில் எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய்:-
நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில் என்றால் இந்த உயிர் இந்த உடலான உலகில் இல்லை என்றால் நான் இருக்க முடியுமா…?
புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் தீமைகளில் இருந்து விடுபட வேண்டும் விடுபட வேண்டும் என்ற உணர்வின் தன்மையை எடுத்து எடுத்துத் தான் இந்த உடலை உருவாக்கினாய்.
1.நீயே தான் என்னை உருவாக்கினாய்
2.நீ எல்லாவற்றையும் அறிந்திடும் உடலை உருவாக்கினாய்
3.நீ இல்லை என்றால் நான் இல்லை.
பல கோடிச் சரீரங்களில் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று உணர்வைப் பெற்ற… தீமையிலிருந்து விடுபடும் உடலைப் பெற்ற நாம்… இந்த உயிரான ஈசனுடன் ஒன்றுதல் வேண்டும்.
உயிரிலே பட்ட பின் தான் “தீமை என்று அறிகின்றோம்…” தீமையை அறிந்து கொண்ட பின் அதன் அறிவாக
1.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையை நீக்கிடும் வலிமையான உணர்வு எனக்கு முன் வந்து
2.தீமையை நீக்கிடும் அந்த அருள் சக்தி நான் பெற வேண்டும்.
அவனால் உருவாக்கப்பட்ட அறிவின் தெளிவு பெற்ற பின்… அந்த அறிவின் தெளிவு கொண்டு உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் அந்தத் திறன் நான் பெற வேண்டும்.
பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் பரிபக்குவ நிலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா:-
எண்ணையைக் காய வைத்து நாம் வடையைச் சுடுகின்றோம். பக்குவ நிலை இல்லாதபடி வடையை டப்… என்று போட்டால் கொதிக்கும் எண்ணெய் நம் மீது பட்டுச் சுட்டுவிடும்.
அதே சமயத்தில் பாத்திரத்தில் பொங்கி வரும் பொழுது பக்குவ நிலை கொண்டு துணியை வைத்து அதை இறக்கினால் சுடாது.
நமது வாழ்க்கையில் எந்த நன்மையைச் செய்தாலும் பிறருடைய தீமைகளை உணர்ந்த பின்பு தான் உதவி செய்கின்றோம். இருந்தாலும்
1.அந்தத் தீமை தனக்குள் வராதபடி பரிபக்குவமாக
2.நம்மைக் காத்திடும் உணர்வினை நாம் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
சாதாரண வாழ்க்கையில் நாம் எண்ணிய உணர்வின் தன்மைகளை உயிர் உருவாக்கி… அதன் வழி நமக்குள் குருவாகி அதன் வழியே தான் நம்மை வழி நடத்தும்.
அப்பொழுது பரிபக்குவம் எப்படிப் பெறுவது…?
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று தீமை தனக்குள் புகாதபடி தடுத்து
2.அதன் உணர்வின் தன்மை நமக்குள் உருவாக்கிப் பழகுதல் வேண்டும்.
3.தீமை என்று கண்டாலே அதை நீக்கிடல் வேண்டும்.
கையில் அழுக்குப்பட்டால் அடுத்து கையைக் கழுவி விட்டுத் தான் சாப்பிடுகின்றோம். உடலில் அழுக்குப் பட்டால் குளித்து விடுகின்றோம்.
இதைப் போன்று பிறிதொருவருடைய உணர்வுகள் நம் ஆன்மாவிலே பட்டு அழுக்காகும் பொழுது… அந்த அழுக்கை நீக்க அருள் உணர்வை உடலுக்குள் செலுத்தி இருளை நீக்கிப் பழகுதல் வேண்டும்.
சிந்தனையற்ற நிலைகள் வராதபடி தடுக்க துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உள் புகுத்தி நம்மை அறியாது வரும் இருளை நீக்கித் தெளிந்த மனம் கொண்டு வாழ முடியும்.
அதுதான் பக்குவ நிலை…!
பிறர் கஷ்டப்படுவதைப் பார்த்து அவருக்கு நாம் உதவி செய்கின்றோம். அந்தப் பக்குவம் இல்லை என்றால் அவருடைய கஷ்டம் நமக்குள் வந்துவிடும். அப்போது
1“நான் எல்லோருக்கும் உதவி செய்தேனே எல்லாம் செய்தேனே”
2.ஆனால் எனக்கு இப்படி நடக்கிறதே…! என்று இத்தகைய பாட்டைத் தான் நாம் பாடுகின்றோம்.
அதனால் தான் பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் பரிபக்குவ நிலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று வேண்டுதல் வேண்டும்.
என் ஆசை என்னுள்ளே வளர்ந்து விடாமல் என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா:-
என் ஆசை என்னுள்ளே வளர்ந்து விடாமல் என்றால் நான் என் பிள்ளைக்கு இதைக் கொடுத்தேன்.. ஆனால் அவன் இந்த மாதிரி செய்கின்றானே…! அவன் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்துத் தான் கொடுத்தேன்… இப்படி இருக்கின்றான் என்று இந்த உடலின் ஆசை தான் வருகின்றது.
ஒருவருக்குக் கடன் கொடுத்தேன்… அவர் கடனைத் திரும்ப கொடுக்கவில்லையே…! என்ற இதைப் போன்ற பற்று தான் வருகின்றது. இந்த உடலை வளர்க்கும் ஆசைதான் வருகின்றது.
1.இதைப் போன்ற ஆசை எனக்குள் வளராதபடி
2.என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு ஈஸ்வரா.
உயிர் எப்படி ஒளியாக இருந்து இருளை நீக்குகின்றதோ தெளிவாக்குகின்றதோ ஆறாவது அறிவை உருவாக்கியதோ இதைப் போல என்றும் இருள் சூழா நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு “அவனுடனே நாம் ஐக்கியமாகுதல் வேண்டும்…”
இராமாயணத்தில் சீதா… இராமா…! அந்த உணர்ச்சிகள் எண்ணங்களாக இயக்கினாலும் பல துன்பங்கள் அது பட்டாலும்… தான் எண்ணிய உணர்வுகள் உயிருடன் இணைந்து விஷ்ணுவுடன் ஐக்கியமாகின்றது. யார்…? சீதா…!
உடலென்ற உணர்வின் சத்து தனக்குள் எடுத்துக் கொண்ட பின் அந்த சீதா என்ற சுவை மண்ணைப் பிளந்து மண்ணுடன் மண்ணாகி விடுகிறது.
1.சீதா என்ற உணர்வின் உணர்ச்சிகள் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமானது.
2.மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்ற உணர்வு தோன்றி உயிருடன் ஒன்றி ஒளியாக வாழும் தன்மை தான் “சீதா..”
ஆகவே சுவைக்கொப்ப எண்ணங்களும் உணர்ச்சிகளும் எப்படி இயக்குகிறது…? என்ற நிலையை இராமாயணக் காவியத்தில் தெளிவாகக் கூறுகின்றனர்.
இந்த மனித வாழ்க்கையில் உயிருடன் என்றுமே ஒன்றி வாழும் நிலை வர வேண்டும்.
1.இந்த உடல் அனைத்தும் ஒளியின் சரீரமாக என்றும் நிலையான சரீரமாக உன்னுடனே ஒளியின் உணர்வாக நான் இருக்க வேண்டும்
2.இன்னொரு உடல் எனக்கு வேண்டாம் ஈஸ்வரா…!