ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 13, 2024

விஸ்வாமித்திரனும் வான்மீகியும்

“வான் நோக்கிய நோக்கில்” உயர் ஞான வேதம் உள் நிறைந்து நிலைக்களன் ஆக்கிட… உயர் காந்த ஒளி அணுக்கள் நூறிள் ஒருவருக்குப் பாய்ந்திடும் செயல்… உயர்வெண்ண நினைவோட்ட சிந்தனையின் வசத்தால் ஆங்கு கிட்டியது “மெய்ஞான மகிழ்விப்பு…”

பறவையை வீழ்த்திய பின்…
1.“வான்மீகியின் கண்டத்தில் இருந்து எழுந்திட்ட ஒலி நாதம்” திரும்பத் திரும்பக் கீதமாக மனதின் கண் எழ
2.மௌடீக மாயை அகல… மோகத்தை வேரறுக்கும் “மனத்தின் திண்மை” செயலுற்றது.

மெய்ப்பொருளைத் தேடி பரத கண்டம் முழுக்க யாத்திரையாக உலவிப் பற்பல அனுபவ நிலைகளைப் பெற்று…
1.அகத்தின் பொருள் நாடிடும் நிலையாக நாரத மாமகரிஷியின் தொடர்பில்
2.அகத்தினுள் அகண்ட அண்டத்தை அறிதல் என்பதாக மேலாம் நிலை விளக்க
3.கீழாம் அறிவு செயல்படா நிலை பெற “ஆச்சா மரம் வீழ்த்தும் மராமரம்” நாரதரால் உபாசிக்கப்பட்டது.

இரு வித அமில குணங்கள் செயற் கொண்டிடும் மராமரத்தில் வான்மீகி கண்டு கொண்டது மாசற்ற மனம் கொள்ளும் தியானமாக உளநலன் கண்டது மராமரா.

உடலை வறுத்திடும் உணர்வுகள் உள்ளத்தின் உணர்ச்சியாம் மோக நிலைகளை வேருடன் வீழ்த்த… மனிதன் கொண்டிடும் எண்ண உயர்வால் தெய்வீக நிலை கண்டிடும் மராமரா என்றே அதைக் கண்டதும் உண்டு.

புறப் புயலாக எழுந்த கௌசிகனின் கோபம் களைய… அந்த வேந்தனுக்கு உபதேசம் தந்திட வான்மீகி கடைப்பிடித்த உபாயம்… நாட்டரசனை உலகாளும் அரசனாக்கி…
1.உலகையே நேசித்த விசுவாமித்திரன் சமுதாய நலன் பேண
2.இராம காவியத்தை இந்தப் பூமி எங்கும் பரப்பிட்ட செயலுக்கு வித்திட்டதே “வான்மீகி மாமகரிஷி தான்…”

ஜீவன்களுக்கு ஏற்படும் மரணத்தை வென்றிடத் துடித்து எழுந்த “கௌசிகனின் தவ சக்தியைக் காத்திடவே…” மாட்டுக்காரனாகக் கோலூன்றி… வரும் வழியில் காத்திருந்த வான்மீகியாரின் எண்ணம் ஈடேறிற்று.

ஓர் கிணற்றருகே சிறு தோட்டம். அந்தத் தோட்டத்தின் செடி கொடிகள் வேருடன் பிடுங்கப்பட்டு
1.வேர் மேல் இருக்க கிளைகள் பூமியில் புதைந்திருக்க
2.சகல செடி கொடிகளையும் இதே தன்மையாக அமைவுப்படுத்தி
3.ஓட்டை மண் கலையத்தில் நீர் இறைத்து
4.அந்த மாட்டுக்காரன் நீர் குடத்தைச் சுமந்து கொண்டு செடிகளுக்கு நீர் பாய்ச்சிட ஓடுவான்.

அங்கு நீர் மிஞ்சுமா…? மிஞ்சாது…!

வெறும் கலயத்தை வேர்ப்பாகம் மேலிருக்கும் செடிகளின் மீது கவிழ்ப்பான். “நீர் இல்லையே…” என்று மீண்டும் ஓடுவான். மீண்டும் நீரை இறைப்பான்.

வியர்க்க விறுவிறுக்க மீண்டும் ஓடுவான். காலிக் கலயத்தைக் கவிழ்ப்பான். நீர் இல்லையே என்று ஏங்குவான். களைத்துப் போய் மர நிழலில் படுப்பான். விருட்டென எழுந்தே மீண்டும் நீர் சுமக்க ஓடுவான்.

இதுவே செயலாகப் பல முறை நிகழ சூரியன் உச்சிப் பொழுதை காட்டிற்று.

வழிப்பயணத்தில் நடந்து வந்த களைப்பும் தாகமும் மேலிட நீர் தேடி அலைந்த கௌசிகன் இந்த அரிய காட்சியைக் கண்டு தாகவிடாயும் மறந்து இது என்ன விபரீதச் செயல்…? இவன் மாட்டுக்காரனா… அல்லது தோட்டக்காரனா…? இது என்ன புதிர்…! என்று எண்ணிக் கோபம் முற்றும் நீங்கப் பெற்று “இதில் ஏதோ பொருள் உண்டு…” என்று எண்ணி அப்பனே இது என்ன செய்கை…? என்று வினவினான்.

பதில் ஏதும் கூறாமல் கார்மேகக் கண்ணனாக எதையும் காதிலே வாங்கிக் கொள்ளாமல்… பொழுது சாயும் வரை இப்படியே நடைபெற்றது.

கௌசிகனும் விடவில்லை வான்மீகியும் பதில் உரைத்திடவில்லை. நடந்து நடந்து கால் ஓய்ந்தது. கௌசிகனுக்கோ கேள்வி கேட்டுக் கேட்டுக் குரல் ஓய்ந்தது.

இருவரும் அந்த மரத்தடியில் அமர்ந்து ஒருவரை மற்றொருவர் பார்த்துச் சிரிக்க… சிரிப்பின் ஒலி உச்சத்தை அடைய நீர் மொள்ளும் ஓட்டைக்கலயம் கை தவறி விழுந்து உடைந்தது.

மீண்டும் கௌசிகன் வினா தொடுக்க… “பிச்சி கொண்ட அறிவு இப்படித்தான் செயலுறும்… இது என்ன கூத்து…?” என்று தலைகீழாக நடப்பட்ட செடி கொடிகளைக் காட்டி கேட்கின்றான்.

வான்மீகியோ
1.விரைவாகப் பலன் பெற்றிடவே
2.இயற்கையின் கதியை மாற்றி அமைத்தேன் என்றார்.

இது நடைபெறக்கூடிய காரியமா…? என்றான் கௌசிகன்.

இயற்கையின் கதியை மாற்றி அமைக்க நீ முயலலாம்… ஏன்…? அது என்னால் சாத்தியப்படாது…! என்று எதிர் வினா தொடுக்கின்றார்.

கௌசிகன் வாயை அடைக்கச் செய்து மீண்டும் விளக்குகின்றார் வான்மீகி.
1.மரணத்தை வெல்கின்ற மார்க்கமாகத் தன் சக்தியைக் குறைவு நிலைப்படுத்திக் கொண்டாய் அன்று நீ…!
2.ஆனால் உன் சக்தியை வலுக்கூட்டும் செயலாக… “ஜீவர்களுக்கு உரையாகப் புகட்டி… முறையாக வெல்லுதல் நன்று…”

இயற்கையுடன் ஒன்றியே சக்தியை வளர்ப்பாயாக..!.
1.வளர்ந்து பெறுகின்றவன் தன்னை வளர்ப்பதோடு மட்டுமின்றி
2.இயற்கையின் சக்திக்கே சக்தி அளித்துச் சப்த நாதத்தில் கலந்து இயங்கும் வாழ்வாங்கு வாழ்வான்.
3.நீ இயற்கையின் சத்துரு அன்று…! இயற்கையின் மித்திரன் (நண்பன்)
4.வானில் இயங்கும் ஒளி நிலையை உன் முயற்சியால் தான் பெற முடியும்…! என உபதேசித்தார்.

நாட்டரசனும் காட்டரசனும் சமத்துவ மனோபாவனையாக்க் கலந்தது “ஒன்றின் முழக்கம்… மற்றொன்றின் எதிர் முழக்கம்…”

உணர்வுகளின் தீமை நிலை தாடகை. அது உள்ளத்தில் மூண்டெழுலும் ஞான நெருப்பை அணைத்திடும் மாய நீரூற்று. ஆஅக… தீமையின் குணத்திற்குப் பேதம் ஏது…?

1.வென்றிட்டவன் அடைவதோ தாய்மையின் பேறு
2.காமத்தை ஆட்சி புரியும் ஞான அரசாட்சி.
3.அதுவே ஞான விழிப்பின் பின் “சுடரும் நிர்விகல்ப… மோன தவ… சாயுஜ்ய… பெரு நிலை மாட்சி…”