ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 3, 2024

“துருவ நட்சத்திரத்தின் ஒளி கொண்டு” நம்மைக் காத்திடும் சக்தியாக அதை வளர்க்க வேண்டும்

நாம் எந்தெந்த உணர்வின் ஒலியைப் (மொழி) பெருக்குகின்றோமோ அதற்குத்தக்கவாறு நம்முடைய நினைவாற்றலும் பல சக்திகளும் நமக்குள் உருமாறுகின்றது.

ஆகவே…
1.எந்த வகையிலும் எத்தகைய நிலை வந்தாலும்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை விடாது அதை எடுக்கப் பழகிக் கொண்டால்
3.இந்த வாழ்க்கையில் நமக்கு அது பேருதவியாக இருக்கும்.

ஏனென்றால் ஒருவர் அவர் பேசுவதை எங்கிருந்து எண்ணினாலும் அந்த உணர்வுகள் அலைகளாக நமக்குள் வருகின்றது… கவரப்படுகிறது.

அது போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்ததனால்… அதை நீங்கள் மனதில் எண்ணி… உங்கள் வாழ்க்கையில் எப்போது சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ கோபமோ பயமோ மற்ற எந்த உணர்வை நுகர நேர்ந்தாலும்
1.அப்படி நுகர்ந்த அந்த சக்தி உங்களுக்குள் பெருகுவதற்கு முன்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இதை உடலுக்குள் செலுத்தித் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3.நாளை நடப்பதெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும்… நல் செயலாக இருக்க வேண்டும் என்று அந்த உணர்வுகளை மாற்றி அமைத்தல் வேண்டும்.
4.ஒவ்வொரு நாளும் இதைக் கடைப்பிடித்தால் வாழ்க்கையே தியானம் ஆகின்றது.

வராகன் தன் உணவுக்காகச் சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்வது போன்று… தீமையான உணர்வுகள் உள் செல்லாதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தனித்துப் பிரித்து நமக்குள் சேர்ப்பிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஒரு காரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று செல்லும் போதோ உணவு உட்கொள்ளும் பொழுதோ இரவு படுக்கைக்குச் செல்லும் பொழுதோ மற்றவர்களுடன் கலந்து பேசும் பொழுதோ அல்லது பேசிய பின்போ
1.ஒரு நொடி துருவ நட்சத்திரத்தினை நினைவுக்குக் கொண்டு வந்து
2.அதைக் கலந்து மாற்றிக் கொண்டே வந்தால் நமது உணர்வுகள் பூராமே தூய்மைப்படுத்தும் சக்தியாக வளர்கின்றது.

வராகன் சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்து நல்லதை எடுத்தது போன்று… வெளியிலிருந்து வரக்கூடிய மற்ற தீமைகளைப் பிளந்து விட்டுத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடத்திலும் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் வலுவை நமக்குள் நுகர்ந்து கொண்டே இருந்தால் கசடான உணர்வுகளைப் பிளந்து விட்டு நம் உயிர் ஒளியின் தன்மையாக மாறும்…. பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டதிற்கு நாம் செல்ல இது உதவும்.

அன்று மெய் ஞானிகள் எப்படி இயற்கையின் இயக்கங்களைக் கண்டறிந்தார்களோ… அந்த இயற்கை வழியிலேயே தான் செயல்படுத்த வேண்டும். அதைத்தான் தியானம் என்று சொல்வது.

வரும் தீமைகளை அகற்றி அருள் ஒளி என்ற உணர்வைப் பெருக்கிப் பேரருளைப் பெற்று பேரொளியாக மாற முடியும். பேரருள் என்றால் இருளைப் போக்கும் சக்தி.
1.ஒவ்வொரு நொடியிலும் இப்படி எண்ணிப் பழகி விட்டால்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தி தன்னாலே தன்னிச்சையாக வந்து சேரும்.

இதில் ஒன்றும் சிரமமில்லை.

கோபமோ சலிப்போ வரும் போது நம்மை அறியாமலே அதன் வழிக்கு இழுத்துச் செல்லும். அதே போன்று துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழகிக் கொண்டால் தீமைகளை எளிதில் மாற்றிவிடலாம்.

ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து வாழ்க்கையில் வரும் தீமைகள் புகாது தடுத்து இந்த வாழ்க்கையை அருள் வாழ்க்கையாக வாழ முடியும்.

1.உங்களுக்கு மன பலம் கிடைக்கின்றது.
2.உடல் பிடிப்பு வராது… செல்வத்தின் பிடிப்பும் அதிகமாக வராது.
3.அந்தப் பிடிப்பு வராது என்றாலும்… செல்வம் நம்மைத் தேடிக் கொண்டு வரும்… மகிழ்ச்சி வரும்…!
4.ஒளியான உணர்வைக் கொண்டு நம்மை காக்கும் சக்தியாக வளரும்

ஆனால் உடலை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் “எனக்கு இப்படி ஆகிவிட்டதே…” என்று வேதனைகளைச் சுவாசித்தால் அந்த வேதனை வந்த பின் மகிழ்ச்சி பெறும் உடலாக்க் கூட நாம் காண முடியாது.

அடிக்கடி “துருவ நட்சத்திரத்தின் ஒளி கொண்டு” நம்மைக் காத்திடும் சக்தியாக நாம் கொண்டு செல்ல வேண்டும்… பேரொளியாக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

குரு அருள் உறுதுணையால் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவீர்கள். உங்கள் பேச்சு மூச்சும் புனிதம் பெறும்… இந்த உலகையும் நீங்கள் காக்க முடியும்.

ஏனென்றால்
1.சிறுகச் சிறுக அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அதைப் பல லட்சம் பேர் குவிக்கப்படும் பொழுது
2.துருவத்தை நோக்கி ஒன்று சேர்த்து அந்தப் பகுதியில் ஓட்டையாகப் பிளந்திருந்ததை நாம் அடைக்க முடியும
3.விஷத் தன்மைகள் பூமிக்குள் புகாது தடுக்கவும் முடியும்

எப்படி நம் ஆன்மாவில் தீமைகள் புகுவதைத் தடுத்து ஒரு பாதுகாப்புக் கவசம் உருவாக்குவது போன்று நம் எண்ணத்தைக் கொண்டு இந்த பூமிக்குப் பாதுகாப்பாக இருக்கும் “ஓசோன் திரை கிழிந்ததையும்” நாம் அடைக்கவும் முடியும்.

ஏனென்றால் அணு குண்டுகளும் கதிரியக்கங்களும் பல விஷமான உணர்வுகளும் பரவியதால் ஓசோன் திரை கிழிந்தது அதே சமயத்தில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நம் எண்ணத்தை அந்தத் திசை நோக்கிச் செலுத்தினோம் என்றால் அது நாளடைவில் நல்லதாகும்.

1.குருநாதர் இட்ட கட்டளைப்படி நம் அனைவரது எண்ணங்களையும் ஒருங்கிணைத்து
2.அந்தத் துருவத்தை எண்ணி குறித்த காலத்தில் அது அடைபட வேண்டும் என்று செயல்படுத்த முடியும்.