ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 15, 2024

குருநாதர் எனக்கு ஊட்டிய ஆசை

குருநாதர் காட்டிற்குள் அழைத்துச் சென்று யானைகள் வரும் இடமாக என்னைப் போகச் சொல்கின்றார்.
1.யானையின் மணத்தை நுகர்ந்து உனக்குள் வலுவாக்கினால்
2.யானையின் மணம் உனக்குள் வந்த பின்
3.மணத்தால் நுகர்ந்து அறியக்கூடிய அந்த மிருகங்கள் உன்னை ஒன்றும் செய்யாது.
4.நீ பயம் கொண்டு சென்றால் யானைகள் நிச்சயம் அடிக்கும்
5.ஆகையினால் பயத்தின் உணர்வு இல்லாதபடி அதனின் மணத்தினை நுகர்ந்து செல்ல வேண்டும் என்றார்.

உதாரணமாக யானைப்பாகனாக இருந்தாலும் அவனும் யானையைக் கண்டு பயந்தான் என்றால் அந்த யானை அவனைத் திருப்பி அடிக்கும். உணர்வின் தன்மை யானையின் மணத்தின் வலுவைக் காட்டப்படும் பொழுது தான் அது அடங்கும்.

ஆகவே குருநாதர் சொன்ன முறைப்படி காட்டிற்குள் செல்லப்படும் பொழுது யானை அருகே நான் சென்று விட்டேன். யானை தன் காதை விடைத்து விட்டால் அடுத்து மனிதனை அடிக்கத்தான் செய்யும். ஏனென்றால் ஏற்கனவே வேட்டைக்குச் சென்று எனக்குப் பழக்கம் உண்டு.

அப்போது காதை விடைத்தவுடன் எனக்குப் பயம் வருகின்றது குருநாதர் சொன்னபடி யானையின் மணத்தை நுகர்ந்தேன்… இருந்தாலும் அடுத்து… “யானை என்னை அடித்து விடுமே…” என்ற பயத்தைத் தான் நுகருகின்றேன்.

யானையின் உணர்வின் மணம் எனக்குள் வரவேண்டும் அந்த வலுப்பெற வேண்டும் என்று நான் எண்ணவில்லை அது என்னை அடித்து விடும் என்ற மணம் வரப்படும் பொழுது எனக்குள் நடுக்கம் ஆகிறது.

அப்பொழுதுதான் முன் வைத்த காலைப் பின் வைக்காதே என்று குருநாதர் சப்தமிடுகின்றார். நான் கூறிய உணர்வை நினைவில் வை…! என்றார்.

அவன் சொன்னபடி
1.பயம் வரும் பொழுது அந்த யானை உணர்வின் மணத்தை நுகர்வதற்கு அவர் சொன்ன சில முறைகள் உண்டு
2.அதை வைத்து அதனுடைய மணத்தை எடுக்கப்படும் பொழுது யானை என்னை ஒன்றும் செய்யவில்லை.

யானையை விரட்டக்கூடிய பச்சிலையையும் குருநாதர் கையிலே எனக்குக் கொடுத்து இருக்கின்றார். அதை எல்லாம் நான் மறந்து விட்டேன் இந்த உணர்வின் நினைவே எனக்கு வரவில்லை. யானை அடித்து விடும் என்று நினைவு தான் ஓங்கி வந்தது

இதை மாற்றப்படும் பொழுது அவர் சொன்ன உணர்வுகள் நுகரப்பட்டு அந்த மணம் அங்கே ஆகும் பொழுது அது தன்னுடைய வலுவை இழக்கிறது.

1.அதாவது துப்பாக்கியையும் கையில் வைத்துக் கொண்டு
2.புலி வருகிறது புலி வருகிறது என்று நடுங்கிக் கொண்டிருக்கின்ற மாதிரி…
3.அந்த இடத்தில் அவ்வாறு எனக்குக் காட்டுகின்றார்.

சுடும் மார்க்கத்தைக் காட்டியிருந்தாலும்… அதை அடக்கும் தன்மை இருந்தும்… இல்லாதபடி ஆகிவிட்டது. இதை எல்லாம் அனுபவரீதியிலே குருநாதர் கொடுத்தது.

அவர் சொன்ன முறைப்படி நுகர்ந்த பின் யானை என்னை ஒன்றும் செய்யவில்லை ஆனால் அந்த கூட்டத்தோடு வந்து ஒரு குட்டி என்னைத் இடித்துத் தள்ளுகின்றது… தொடுகின்றது… என்னை இழுக்கின்றது.

பெண் யானை என்ன செய்கின்றது…? அப்படியே முறைத்து நிற்கின்றது. என் மனதைக் கொண்டு… உள்ளபூர்வமாக நீ போ சாமி…! என்று இந்த உணர்வலைகளை வெளிப்படுத்தும் போது… அந்தக் குட்டி யானை அதனின் தாய் இழுத்துக் கொண்டு சென்று விட்டது.

இயற்கை உண்மை நிலைகளை அறிவதற்குத் தான் என்னை இப்படிக் காடு மேடலாம் குருநாதர் என்னை அலையச் செய்தார்… சாதாரணமாக அல்ல…!

உங்களிடம் இப்போது பேசுகிறேன் என்றால் அந்தக் குரு வழியினை நான் கடைப்பிடிக்கவில்லை என்றால் இருளுக்குள் தான் நான் சிக்க முடியும். உடலின் ஆசை தான் எனக்குள் வளரும்.

இந்த உடலில் ஆசை ஆனால் காட்டிற்குள் செல்லப்படும் பொழுது பல மிருகங்கள் இருந்தும் மரணம் அடைய வேண்டி வரும்.

இதற்கு அடுத்து என்னைத் திருப்பதிக்குச் செல்லும்படி சொல்கின்றார். நாரதர் மன்றம் என்று ஒன்று உண்டு அதையும் கடந்து தாண்டி செல்லச் சொல்கின்றார்.

பழங்கள் காய்க்கும் மரங்கள் ஏராளமாக அங்கே உண்டு. வருடம்தோறும் ஒவ்வொரு காலத்திற்கு எத்தனையோ கனிகள் அதிலே உருவாகும். கொய்யா… நவாப்பழம் போன்று எத்தனையோ வரும். அத்தனையும் அங்கே உருவாகின்றது.

துறவறம் பூண்டு தவத்திற்காகச் செல்பவர்களுக்கு அது தான் அங்கே உணவு. பழங்களை உண்டு தான் அங்கே தவத்தை மேற்கொண்டார்கள். அந்த இடத்திற்கு என்னைப் போகச் சொல்கின்றார்.

கனிகளை பறித்துச் சாப்பிட்டு அங்கே இருக்கலாம் என்றாலும் அந்தக் கனிகளை உட்கொள்ள அதைத் தேடி கரடி போன்ற மிருகங்கள் வருகின்றது… குரங்குகளும் வருகின்றது…!

அவைகள் அதைப் பறித்துச் சாப்பிடுகின்றன. நான் மரத்தில் ஏறித் தான் சாப்பிட வேண்டும் அல்லது கீழே விழுந்ததை எடுத்துச் சாப்பிட வேண்டும்.

ஒரு கரடிக் கூட்டம் அங்கே வருகின்றது.
1.முதலில் பயம் வந்தது..
2.பின் குருநாதர் சொன்ன முறைப்படி அந்த மணத்தை எடுத்தவுடன்… பேசாமல் முர்ர்…முர்ர்…முர்ர்.. என்று உறுமிக் கொண்டே போய்விட்டது.

எல்லாமே அனுபவ ரீதியில் தான் குருநாதர் கொடுக்கின்றார்.

பகலிலே குரங்குகள் கூட்டம் கூட்டமாக இருக்கின்றது. ஒரு ரவுடிக் குரங்கு எல்லாவற்றையும் துரத்தி அடித்து விரட்டுகின்றது. ஆனால் அங்கே இன்னொரு குரங்கு குட்டி போடுகின்றது.

அதனுடன் சேர்ந்த குரங்குகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து குழந்தை பிறந்த பிற்பாடு முத்தம் கொடுக்கின்றது. ரவுடிக் குரங்கிடமிருந்து பாதுகாப்பாகவும் இருக்கின்றது.

ஆனால் அது ரவுடித்தனம் செய்தாலும் குழந்தைப் பாசத்தால் “குட்டிக்கு அதுவும் முத்தம் கொடுக்க ஆசைப்படுகின்றது…” அதனுடைய பாசத்தால் இச்.. இச்.. என்று குழந்தையை நாம் கொஞ்சவது போன்று கொஞ்சம் கொஞ்சமாகக் குழந்தையை நோக்கி நகர்ந்து வருகின்றது.

அது நகர நகர… மற்ற குரங்குகள் அனைத்தும் உஷாராகின்றது. ஆனால் தாய் குரங்கு வெவ்வேவ்வே… என்று கத்த ஆரம்பிக்கின்றது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி… குட்டியிடம் சென்று தொட்டு முத்தம் கொடுக்கின்றது.

ஏதாவது ஆனால் எல்லாக் குரங்குகளும் அதைத் தாக்குவதற்கு உஷாராக இருக்கின்றது. ஆனால் குட்டிக்கு ஒன்றும் தெரியாது இதை குருநாதர் பார்க்கும்படி செய்கிறார்.

குரங்கு தன் குட்டியை எவ்வாறு பாதுகாக்கின்றது…? அதனுடைய இனங்கள் எல்லாம் எப்படிப் பாதுகாப்பாக இருக்கின்றது…? என்று காட்டுகின்றார்.

அப்பொழுது குடும்பத்தின் பால் என் நினைவுகள் செல்கின்றது மனைவியை விட்டு விட்டு வந்தோம்.. பெண் குழந்தைகளையும் விட்டு விட்டு வந்தோம். ஒரு பிள்ளையை மட்டும் தான் கட்டிக் கொடுத்தது. பாக்கி யாரையும் கட்டிக் கொடுக்கவில்லை. ஒரு கைக்குழந்தையும் இருக்கின்றது.

குரங்கையும் அதன் குட்டியையும் பார்த்தவுடன் என் ஞாபகம் அங்கே செல்கின்றது
1.அந்த ஆசை வரப்படும் போது என்னைப் பாதுக்காக்கும் உணர்வு போய்விடுகின்றது... பயமும் மற்ற நிலைகளும் வருகின்றது.
2.கரடி அடித்து விடுமோ பாம்பு கொத்தி விடுமோ புலி அடித்து விடுமோ இந்த உணர்வெல்லாம் வருகிறது.

ஆனால் அந்த உணர்வை நுகராது இருக்கும் வரை பயமில்லை. என் குழந்தைகளைக் காக்க வேண்டும் என்ற ஞாபகம் வந்த பின் பயம் எல்லாம் வருகின்றது. இந்த உணர்ச்சியை ஊட்டி அனுபரீதியாக எனக்கு அங்கே காட்டுகின்றார்.

1.நான் கொடுத்த சக்தியை நீ எப்படிப் பயன்படுத்துகின்றாய்…?
2.நான் எப்படிப் பயன்படுத்தும்படி சொன்னேன்…? என்று வினாக்களை எழுப்பி எனக்கு உண்மைகளை உணர்த்துகின்றனர்.

அது மட்டுமல்ல. இன்னொரு வேலையும் குருநாதர் செய்கின்றார். சிறிது நகர்ந்து ஒரு இடத்தில் உட்கார்ந்தேன். உட்கார்ந்த இடத்திலே அந்தக் காலத்து அரசர்கள் மண்ணிலே புதைத்து வைத்த காசு அங்கே வெளியே வருகிறது.

அதுவாக வந்ததா…! அல்லது குருநாதர் அப்படி வரும்படி வரவழைத்தாரா…? அது எப்படி…? என்று எனக்குத் தெரியாது. பார்த்தால் தங்கக் காசாக இருக்கின்றது. மொச்சைப் பயர் அளவு தடிமனாகவும் வட்டமாகவும் நீளமாகவும் இருக்கின்றது.

அதை எடுத்தவுடன் ஆசையை ஊட்டுகிறார். இது எதற்காகச் சோதிக்கின்றாரோ… தெரியவில்லை…! எனென்றால் குழந்தையை அந்த நேரத்திலே நினைக்கின்றோம் அல்லவா…!

இதை எடுத்துக் கொண்டு போய்க் குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டு வரலாமா என்ற இந்த எண்ணத்தை ஊட்டுகின்றார்.
1.அப்பொழுது அந்த இடத்தில் எனக்குள் மனப்போராட்டமாகின்றது.
2.குருநாதர் சொன்ன வழியில் ஞானத்தின் வழியில் செல்வதா அல்லது காசைப் பார்த்த பின் இந்த ஆசையின் வழி செல்வதா…?
3/குடும்பத்தில் குழந்தைகளைக் காக்க வேண்டுமே…!

குரங்கு தன் குட்டியைப் பாதுகாத்தது. அது போல் இதை எடுத்து என் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு வரலாமா…? என்று மனப் போராட்டத்தைக் கொடுக்கின்றார்.

இத்தனையும் நான் ஜெயித்து வர வேண்டி இருக்கின்றது. பின் அதற்கப்புறம் நான் அதை எடுத்து அந்தக் காசை எல்லாம் திருப்பதி உண்டியலில் கொண்டு போய்ப் போட்டேன்.

இது நடந்தது 1972 அல்லது 1973ல் இருக்கும். பத்திரிகைகளில் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். ஏனென்றால் குருநாதருடைய பரிசோதனை
1.“அவர் கொடுத்த சக்தியைச் சீராக நான் பயன்படுத்துகின்றேனா…? என்று
2.பல வகைகளிலும் மனப் போராட்டங்கள் வருகின்றது.
3.இத்தனையும் வென்று தான் நான் வர வேண்டி இருக்கிறது.

இதைக் கடந்த பின் மூன்று லட்சம் பேரைச் சந்தித்து ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு துன்பப்படுகின்றான்…? என்ற நிலையையும் காட்டுகின்றார்.

இப்படி எத்தனையோ சிரமப்பட்டு அனுபவங்கள் பெற்ற பின் தான் உங்களுக்கு ஞானத்தின் வழித் தொடராக மெய் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

உங்கள் நினைவினை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பால் செலுத்தி அவர் நமக்குக் கொடுத்த அருளும்… ஞானிகள் பெற்ற உண்மையையும் நாம் அறிந்து இந்த வாழ்க்கையைச் சீர்படுத்தவும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவும்… அதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்தின் சக்திகளைப் பெறத் தகுதி உடையவர்களாகவும் உங்களை நீங்கள் மாற்ற வேண்டும்.

அதற்காக வேண்டும் உங்கள் உயிரைக் கடவுளாக வணங்கி உடலைக் கோவிலாக எண்ணி அவனால் உருவாக்கப்பட்ட இந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் ஈசனுக்கு நற்பணிகளைச் செய்ய வேண்டும் என்று செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

1.அதன் வழியில் நல்ல உணர்வுகளை நுகர்ந்து உங்களை நீங்கள் பாதுகாத்தால்
2.உயிரான ஈசனுடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறக்கூடிய தகுதி நீங்கள் பெறுகின்றீர்கள்.

இந்த ஆசையைத்தான் குருநாதர் எனக்கு ஊட்டினார்…!