ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 14, 2018

எங்களுக்காக ஆண்டவன் படைத்த உயிரினங்களை (குரங்கின் மூளை கரப்பான் பூச்சி) நாங்கள் சாப்பிடுகிறோம் - அதில் தவறு இல்லை என்பார்கள்...!


மலேசியா போன்ற சில நாடுகளில் போதைப் பொருள்களை உபயோகித்தாலும் இன்னும் அதிகப் போதை வேண்டும் என்பதற்காக நல்ல பாம்பை வைத்து நாக்கை நீட்டச் சொல்லி அந்த நாக்கிலே கொத்தச் செய்து இதைப் போன்ற விஷத்தை விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய மனிதர்களும் உண்டு.

குரங்கினை நாம் இங்கே கடவுளாக வணங்கும் நிலை இருக்கிறது. ஆனால் மேலை நாடுகளிலே உயிருடன் இருக்கும் குரங்குகளை அப்படியே அதன் மேல் இருக்கக்கூடிய மூட்டைத் (TOP) தட்டி விடுகின்றார்கள்.

உள்ளே இருக்கக்கூடிய மூளையைக் குழப்பி அதில் சிறு பொடியைப் போட்டு நாம் எப்படி ஸ்ட்ரா மூலம் சர்பத் சாப்பிடுகின்றமோ அதேபோல குரங்கின் மூளையை உறிஞ்சிச் சாப்பிடுகின்ற நாடுகளும் உண்டு.

ஆக மனிதனாகப் பிறந்தும் மிருக நிலை போல உணவாக உட்கொண்டிருக்கும் இப்படிப்பட்ட நிலைகளும் உண்டு.

நாம் கரப்பான் பூச்சி என்று சொல்கின்றோம். ஜப்பான் போன்ற நாடுகளில் விஞ்ஞான அறிவு பெருகி வந்தாலும் அந்தக் கரப்பான் பூச்சிகளைப் பிடித்து அதை எண்ணெயிலே வறுத்து ரசித்துச் சாப்பிடுவோரும் உண்டு.

ஆனால் இதையெல்லாம் உணவாக உட்கொள்ளும் தன்மை பெற்றவர்கள் எங்கே செல்வார்கள்…?

நாங்கள் வணங்கும் ஆண்டவன் நாங்கள் உணவாக உட்கொள்வதற்காகவே இதை எல்லாம் படைத்தான் என்று சொல்வார்கள். இன்று எல்லா மதத்திலும் உயிர்களைப் பலி கொடுத்து அதை ஆண்டவனுக்காக என்று படைக்கும் பழக்கம் உண்டு.

உனக்காகப் பலி கொடுத்து விட்டு உன் பெயரைச் சொல்லி நான் அந்த உயிரினங்களை எல்லாம் புசிக்கிறேன் என்று சாப்பிட்டாலும்  சாப்பிட்ட உணர்வு என்ன செய்யும்...?

மிருக இனங்கள் மற்ற உயிரினங்கள் அனைத்துமே விஷத்தின் தன்மைகளைத் தன் உடலாக ஏற்றுக் கொண்டது. நாம் அதை உட்கொள்ளும் பொழுது அந்த விஷத்தின் தன்மை நமக்குள் ஊடுருவிவிடும்.

அந்த மிருகங்களும் உயிரினங்களும் அது தன்னை அறியாமலே கொடூரமான செயல்களைச் (மனிதனைப் போன்ற சிந்தனை இல்லாது) செய்து பிறிதொன்றைத் தாக்கி விஷத்தை உட்கொள்கின்றது.

இதைப் போன்ற உணர்வின் சத்து நம் உடலுக்குள் சேரும் போது நமக்குள்ளும் அந்த உணர்ச்சியைத் தூண்டும்.
1.நம்மைக் கேட்காமலேயே காற்றிலிருந்து அத்தகைய மிருகங்களின் உணர்வை நுகர்ந்து
2.அது மனித (நம்) உடலுக்குள் வளர்ச்சியாகி விஷத் தன்மையான செயலாக உருவாக்கி
3.அதையே ரசித்து மற்றவைகளை உணவாக உட்கொள்ளும் நிலை வரும்.

இரக்கமற்ற நிலைகள் கொண்டு கடவுளின் அடிப்படையிலோ  அல்லது மதத்தின் அடிப்படையிலோ நாம் வளர்த்தாலும் விஷத் தன்மையை உணவாக உட்கொண்டவர்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் அந்த உணர்வினை வளர்த்து வெளியிலே செல்லும் போது விஷப் பூச்சிகளாகத் தான் போக முடியும்.

அதாவது இன்று மனிதன். நாளை விஷமான பூச்சி. ஏனென்றால் விஷப் பூச்சிகள் தன் விஷத்தால் மற்றதைக் கொத்தித் தன் உணவாக எடுத்துத்தான் அந்த மகிழ்ச்சியை அடைகின்றது.

பிறிதொருவர் வேதனைப்படுவதைக் கண்டு நாம் ரசித்துச் சுவாசிப்போமேயென்றால் நம் உடல் விஷத்தின் தன்மை அடைந்து நல் உணர்வுகள் அனைத்தும் மறந்துவிடும்.

1.ஏனென்றால் அந்த விஷத்தின் ஈர்ப்பு (வேதனைப்படுவதைப் பார்த்து ரசித்தது) ஆற்றல் அதிகமாக இருக்கும் நிலையில்
2.நமக்குள் விளைய வைத்த அந்த உணர்வின் தன்மை
3.மணமாக மாறி நம் உயிருடன் ஒன்றி இருக்கும்.

உடலை விட்டுப் பிரியும் நிலையில் உயிராத்மாவில் சேர்த்துக் கொண்ட மணத்தின் நிலைகள் கொண்டு பூமியிலே நாம் மிதப்போம். மிதந்தாலும் இதை ஒத்த ஒரு விஷ ஜெந்தினுடைய உயிர் உடல் பெற்று விஷத்தை ஓங்கி வளர்க்கப்படும் போது அதனின் ஈர்ப்பிற்குள் சென்று விடுவோம்.

அந்த உடலின் சத்தை நாம் கவர்ந்து கருவாகி முட்டையாகி முட்டைக்குள் அதனின் சத்தை எடுத்து இந்த உயிர் அதனின் உடலாகப்  பாம்பாக உருவாக்கிவிடும் நமது உயிர்.

1.ஆகவே நாம் எத்தகைய நிலையைச் செய்தாலும் பிறரிடமிருந்து மறைக்கலாம்.
2.ஆனால் நமக்குள் இருக்கும் உயிரிடம் எதையும் மறைக்க முடியாது.
3.ஏனென்றால் நாம் எதை எண்ணி எடுக்கின்றோமோ
4.அது நம் சுவாசத்தின் வழியாக உடலுக்குள் சென்று அந்த உணர்வுகள் விளைந்து
5.சுவாசித்த உணர்வின் மணமாக நம் உயிராத்மாவில் சேர்க்கப்படும் பொழுது
6.அதற்குத் தக்க அடுத்த உடலாக அவன் உருவாக்கி விடுகின்றான்.
7.இதிலிருந்து யாருமே தப்ப முடியாது...!