ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 22, 2018

நம் மனதில் என்றுமே அமைதி வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?

மக்கள் அனைவரும் நன்மையைக் கருதி ஏங்கினாலும் மதங்கள் அனைத்தும் நன்மையைப் பற்றிச் சொல்லி இருந்தாலும் தன் மதத்தை மட்டும் காக்கும் நிலையாகவும் தன் இனத்தை மட்டும் காக்கும் நிலையாகத்தான் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

தன்னைக் காத்திடும் நிலைகளைத்தான் உருவாக்கியதே தவிர பிறருடைய நிலைகளைத் தன் சகோதரன் என்ற நிலைகள் உருவாக்கவில்லை. வாயளவிலே “சகோதரர்” என்று பேசிக் கொள்கின்றோம் அவ்வளவு தான்…!

ஆனால் இந்தப் பூமியிலே ஒருவருக்கொருவர் இணைந்து தான் நாம் வாழுகின்றோம். யாரும் இணையில்லாது வாழ்வது இல்லை.

ஒரு தொழிலைச் செய்தாலும் ஒருவருக்கொருவர் நட்பின் தன்மை கொண்டுதான் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்கின்றோம். நட்பில்லை என்றால் வியாபாரம் இல்லை. ஆகவே ஒருவருக்கொருவர் தொடர் கொண்டு தான் இந்த வாழ்க்கையே நாம் வாழுகின்றோம்.

ஒருவருக்கொருவர் பகைமை கொண்டால் மனித வாழ்க்கையை ஒருவருக்கொருவர் அழித்துக் கொள்கின்றோம் என்று தான் அர்த்தம். இதைப் போன்ற நிலைகள் இல்லாதபடி நாம் மாற்றிட வேண்டும்.

கடலிலே பெருங்காயத்தைக் கலக்கினால் அதனுடைய வாசம் சிறிது நேரமே இருக்கும். அடுத்த நிமிடம் அந்த மணம் மறைந்து விடுகின்றது.

இதைப்போல உயர்ந்த நிலைகளை நாம் பேசினாலும் கடலைப்போல ஒவ்வொரு நிமிடத்திலும் வேதனையும் வெறுப்பும் உப்புக் கரிப்பது போல நமக்குள் கைப்பான வாழ்க்கையாகத்தான் மனித வாழ்க்கையில் அதிகம் இருக்கின்றது.

நாம் நல்லதை எண்ணினாலும் கடலிலே கரைத்த பெருங்காயத்தைப் போன்றே சிறிது நேரமே அந்த நறுமணங்கள் இருக்கின்றது. அடுத்த கணம் அந்த நறுமணங்கள் அனைத்தும் மறைந்து விடுகின்றது.

1.நமக்குள் இருக்கக்கூடிய நல்ல எண்ணங்கள் அனைத்தும் சிறிது நேரத்தில் மறைந்து
2.அடுத்துக் கவலையும் சோர்வும் வெறுப்பும் வேதனையும் படக்கூடிய உணர்ச்சிகளே நமக்குள் தூண்டி
3.நாளை என்ன செய்வது…? என்ற நிலைக்கே ஆளாகிவிடுகின்றோம்.

நல்லது செய்ய வேண்டும் என்று சிறிது நேரம் சிந்திக்கின்றோம். ஆனால் அடுத்த கணம் எப்படி நடக்குமோ…? இது எப்படி நடக்கப் போகின்றது…? என்று தனக்குத் தானே பலவீனமாகி சந்தேக உணர்வுகள் தோன்றி விடுகின்றது.

இதைப்போன்று தான் மனித வாழ்க்கையில் நஞ்சிற்குள் சிக்கப்பட்டு நம்முடைய எதிர்காலத்தையும் அது நசியச் செய்து கொண்டிருக்கின்றது.

இயற்கையில் விளைந்த நெல் மற்ற தானியங்களில் உருவாகும் மணி முத்துக்கள் பயிரிலே இணைந்து வளர்வதற்கு நஞ்சு உதவியாக இருந்தாலும் அதை நம் ஆறாவது அறிவு கொண்டு அகற்றிவிட்டு வேக வைத்துச் சமைத்துச் சுவை மிக்கதாக உருவாக்கி உட்கொள்கின்றோம்.

உதாரணமாக நாம் பொங்கல் வைக்கப்படும் போது அதை வேக வைத்து அந்தப் பொருள்களில் உள்ள நஞ்சினை நீக்கி அதிலே பல நல்ல பொருளைக் கலக்கப்படும் பொழுது மிகுந்த சுவையாகின்றது.

இதைப் போன்று தான் நமது வாழ்க்கையில் நம்மை அறியாது ஒரு தொழிலின் நிமித்தம் சிறிது குறைகள் ஏற்பட்டு அதனால் வேதனையான உணர்வை நாம் கவர்ந்தாலும் பொங்கலை எப்படிச் சுவையாக உருவாக்குகின்றோமோ அதைப் போல நமக்குள் பொங்க வைக்க வேண்டும்.
1.அந்த மகிழ்ச்சியின் தன்மை பொங்கி வழிந்து
2.நாம் பிறரைக் காணும் போதெல்லாம் அந்த மகிழ்ச்சியின் உணர்வுகள் நமக்குள் தோன்ற வேண்டும்.
3.நாம் இடும் மூச்சலைகள் இந்த நாட்டிலே அது படர்ந்து தீமை விளைவிக்கும் நிலைகள் அனைத்தும் அகன்றிட வேண்டும்.
4.ஏனென்றால் நஞ்சின் தன்மை நீக்கும் சக்தி மனிதனுக்கு உண்டு.

நஞ்சினை நீக்கிடும் உணர்வைத் வளர்த்துக் கொண்ட அந்த மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் கலக்கச் செய்யும் போது அந்த உணர்வு ஆற்றல் மிக்க நிலையாக நமக்குள் விளைகின்றது. இத்தகைய உணர்வின் எண்ண அலைகள் படரப்படும் போது தீமைகள் அகற்றிடும் நிலையே இங்கே வருகின்றது.

இன்று எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் எந்த மதத்தோராக இருந்தாலும் அவர்கள் கடை வைத்தால் நாம் அங்கே சென்று நமக்கு வேண்டிய பொருள்களை அங்கு வாங்குகின்றோம். அவர்களுக்கு வேண்டியது இருந்தால் நம்மிடம் வந்து வாங்குகிறார்கள்.
1.இதில் வேற்றுமை இருக்கின்றதா…? இல்லை.
2.இவ்வாறு நாம் வேற்றுமையற்ற நிலைகள் வாழப்படும் போது
3.மற்ற நிலைகளில் ஏன் வேற்றுமையை ஏற்படுத்த வேண்டும்…?

எந்த மதமாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் உலக மக்கள் அனைவரும் அந்த மகரிஷியின் அருள் ஒளி பெற வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

எங்களுக்குள் சகோதர உணர்வுகள் வளர வேண்டும் என்ற எண்ணத்தை ஓங்கி வளர்த்துக் கொண்டு பகைமை உணர்வை ஓங்கச் செய்யாது அதைத் தாளச் செய்ய வேண்டும்.

சகோதர உணர்வுகளையும் சகோதரப் பாசங்களையும் ஏற்படுத்தும் நிலைக்குத்தான் மகரிஷிகள் நமக்குப் பல பண்டிகைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள்.

ஒட்டு மொத்த நாட்டு மக்கள் அனைவரும் ஏகோபித்த நிலையில் - தன்னை அறியாத பகைமை வேற்றுமைகளை அகற்றிடவும் தெய்வீகப் பண்பை வளர்க்கவும் பண்பின் பெருக்கமாகச் சகோதர உணர்வுகளை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ளவும் ஒவ்வொரு மாதத்திலும் உருவாக்கப்பட்டது தான் பண்டிகைகள்.

அகண்ட அண்டங்களும் பிரபஞ்சங்கள் எல்லாமே ஒன்றை ஒன்று தழுவிய நிலையில் தான் இயங்கிக் கொண்டுள்ளது.
1.”தனித்த சக்தி ஒன்று தான்…!” என்ற நிலையில்
2.அப்படிப்பட்ட ஒரு சக்தி எங்கேயும் இல்லை.
3.ஆகவே சகோதரத்துவத்தை நாம் அனைவரும் வளர்ப்போம்.
4.பகைமையில்லாது எதிர்ப்பில்லாது மகிழ்ந்து வாழ்வோம்.
5.மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் சென்று ஏகாந்த நிலை பெறுவோம்.