ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 10, 2018

பள்ளிப் படிப்பில் ஆர்வமாகப் படித்து முன்னுக்கு வந்த குழந்தைகள் மேல் படிப்பில் தேர்வில் தேறாமல் (FAIL) போவதன் காரணம் என்ன...?


ஓர் இன்ஜினியருக்குப் படிக்கக்கூடியவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி... அவர்கள் படிக்கச் செல்லும் பொழுது வீட்டிலே எந்த அளவுக்கு மன நிம்மதி இருக்கின்றதோ அந்த உணர்வு அவர்களுக்கு முன்னணியில் இருக்கும்.

வீட்டிலே கொஞ்சம் சஞ்சலப்பட்டுவிட்டு கல்லூரிக்குச் சென்று இன்ஜினியரிங் படித்தால் நீங்கள் பாடங்கள் எதைக் கூர்மையாக கவனித்தாலும் உங்கள் சஞ்சல அலைகளுடன் கலந்து இந்த உணர்வுகள் பதிவாகிவிடும்.

1.படித்ததை மீண்டும் நீங்கள் நினைக்கப்படும் போது
2.இது சரியா...! தவறா...? என்று உங்களுக்குள் சரியான நிர்ணயம் செய்யாதபடி
3.இந்தச் சஞ்சல நிலைகளையே உண்டாகும்.

அந்தச் சஞ்சல நிலைகள் ஏற்படும் பொழுது கல்லூரியிலே தேர்வு வைத்தாலே போதும். கேள்விகளைப் பார்த்தவுடனே விடை தெரியாதபடி திகைப்புகள் ஏற்பட்டு...! சரியான பதில் எழுத முடியாதபடி அந்தப் பரீட்சையில் தேறாத நிலை (FAIL) ஆகிவிடுவீர்கள்.

ஆனால் பரீட்சை எதற்காக வைக்கின்றனர்...?

படித்த உணர்வைத் திடீரென்று அதைச் சிந்தித்து இந்த உணர்வின் தன்மையை “இப்படித் தான்...!” என்று நாம் அறிந்து கொள்வதற்காகத் தான் பரீட்சையாக வைக்கின்றார்கள்.

அதாவது ஆசிரியர் நமக்குச் சொல்லி கொடுத்ததை நினைவுபடுத்தி அதை பரீட்சையாக நம்மை எழுதச் செய்து “படித்ததை...” நாம் அறிந்து கொள்வதற்காக வேண்டிப் பரீட்சையாக வைக்கின்றனர்.

நாம் வீட்டிலே அமைதி கொண்டு இருந்தாலும் வெளியிலே வரப்படும் போது நண்பர்கள் பால் உள்ள பற்றால் அங்கே அதைப் பார்த்தேன்.. இங்கே இதைப் பார்க்கலாம்...! என்று பொழுது போக்குக்காக ஆர்வங்களைத் தூண்டப்படும் பொழுது கவனங்கள் அங்கே திரும்புகின்றது.

அத்தகைய ஆசை கொண்டு ஆர்வங்கள் அங்கே செல்லப்படும் பொழுது படிப்பிற்கு என்று செல்லப்படப் போகும் போது இந்த ஆர்வ உணர்ச்சிகள் முன்னாடி வந்து உந்தும்.

அங்கே ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் நிலையில் இது இடைமறிக்கும். பாட சம்பந்தமாக (ENGINEERING) நுண்ணிய உறுப்புகளின் செயல்களை இதை இப்படிப் பொருத்தினால் இன்னது தான் நடக்கும் என்று அங்கே சொல்லிக் கொடுக்கும் பொழுது அதை முழுமையாகக் கவனிக்கும்  எண்ணம் வராது.

அதைப் பார்க்க வேண்டும் அங்கே போக வேண்டும் என்ற ஆர்வ உணர்வுகளுக்குள் இங்கே ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை எண்ணிப் பார்த்தவுடனே மனதிற்குச் சிக்கலாக வரும்.

எதையோ சொல்கிறார்...! சொல்லிக் கொடுப்பது ஒன்றும் புரியவில்லையே...! என்ற உணர்வுகள் இயக்கப்படும் போது இந்த நினைவலைகள் வரப்படும் போது
1.கண்ணின் ஈர்ப்பு சக்தி சோர்வடையும்... கண் கனமாகும்.
2.தன்னை அறியாமலேயே தூக்கம் வரும்.
3.நான் படிக்கச் சென்றேன்... ஆனால் எனக்குத் தூக்கம் வருகின்றது.
4.என்னால் சரியாகப் முடியவில்லையே...! என்று சொல்வார்கள்.

ஏனென்றால் நுண்ணிய கருத்துக்கள் அங்கே பாட நிலையாக வரப்போகும் போது அதை எடுத்து நம் எண்ணத்துடன் அதைப் பிணைத்து அதைத் தெரிந்து கொள்ளும் நினைவலைகளை ஊட்டப்படும் போது ஊரைச் சுற்ற வேண்டும் என்ற இந்த ஆர்வங்கள் முன்னணியில் வந்து அதைப் புரியவிடாதபடி மறைத்துக் கொண்டு இருக்கும்.

நான் அழகான பொருள்களை அங்கே கண்டேன். அங்கே மிகவும் சந்தோஷமாக இருந்தேன் என்று நண்பர்கள் வெளிப்படுத்திய மகிழ்ச்சி இங்கே ஆர்வத்தை உந்தச் செய்யும் பொழுது பாடங்களைக் கற்க விடாது செய்யும்.

சிறிதளவு பதிவானாலும் அதைச் செயல்படுத்த முடியாது செய்து விடும். இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் பரீட்சையில் தேறவில்லை என்று கேள்விப்படும் தாய் தந்தையரோ பிள்ளைக்குப் பாடங்கள் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதனால் தான் படிக்க முடியவில்லை...! என்று அவர்களும் வேதனைப்படுவார்கள்.

காசைக் கொடுத்துத் தான் படிக்கச் செல்கின்றோம். அங்கே படிக்கும் எண்ணம் இல்லாது சிந்தனைகள் வேறு பக்கம் செல்லப்படும் பொழுது இந்த நிலை ஆகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் குருநாதர் காட்டிய வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதை நமக்குள் அதிகமாக வலுவாக்கிக் கொண்டால் நம்மை அறியாது இயக்கும் குடும்பத்தில் ஏற்படும் சங்கடங்களிலிருந்தும் சஞ்சலங்களிலிருந்து விடுபட முடியும்.

அதே போல படிக்கும் ஆர்வத்தைத் திசை திருப்பும் மற்ற நண்பர்களின் உணர்வுகளிலிருந்து விடுபடலாம்.

தாய் தந்தையரும் தங்கள் குழந்தைகள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று கல்வியில் சிறந்த ஞானமும் கருத்தறிந்து செயல்படும் திறன் பெற்று உலக ஞானம் பெறவேண்டும் என்று அடிக்கடி இந்த உணர்வுகளைப் பாய்ச்சுதல் வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் உணர்வுகள் குழந்தைகளுக்குள் ஊடுருவி அவர்களை நல்வழிப்படுத்தும்.
2.கல்வியைச் சீராகக் கற்கச் செய்யும்.
3.உலக அனுபவத்தையும் பெறச் செய்யும்.