ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 12, 2018

கேது சந்திரனை விழுங்குகின்றான்...! என்று சாஸ்திரம் சொல்கிறது


பல கோடிச் சரீரங்களில் புழுவிலிருந்து சிறுகச் சிறுக அறியும் தன்மையாகப் பெற்று பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனான பின் முழுமையாக அறிந்து கொள்ளும் “பௌர்ணமி” ஆகின்றோம்.

வாழ்க்கையில் அறிந்து கொள்ளும் நிலை வரப்போகும் போது சந்தர்ப்பத்தால் வேதனை வேதனை என்ற இருள் சூழும் உணர்வுகளைக் கவர்ந்து அதனால் உடலுக்குள் விஷம் கொண்ட தன்மையையே நாம் அடைகின்றோம். இதைத்தான்
1.கேது சந்திரனை விழுங்குகின்றான் என்று அன்றைக்குக் காட்டினார்கள்.
2.அதைக் கிரகணம் என்றும் சொல்வார்கள்.

அதாவது வாழ்க்கையின் நிமித்தமாக நம்மை அறியாமல் நுகரும் தீமையான உணர்வுகள் விஷத் தன்மையாக நமக்குள் இணைவதைத்தான் கேது விழுங்குகின்றான் என்ற நிலையாகக் காட்டுகின்றார்கள்.

நம் நல்ல குணங்களை இந்த விஷத்தன்மைகள் நமக்குள் வந்து மறைத்து விடுகின்றது என்பதைக் “கிரகணம்...!” என்று காட்டுகின்றனர்.

சூரியனின் காந்த ஒளிகள் சந்திரனில் படாதபடி மற்ற கோள்கள் தடைப்படுத்தும் போது அது வளரும் தன்மையைத் தடைபடுத்தி விஷத்தின் தன்மையைச் சந்திரனில் வளர்க்கச் செய்கின்றது.

இதையெல்லாம் அன்றைய சாஸ்திர விதிகளாக உருவாக்கப்பட்டு ஞானிகளால் தெளிவாகக் காட்டப்பட்ட நிலை தான்.

வாழ்க்கையில் இருள் சூழும் இத்தகைய நிலைகளிலிருந்து மீள்வதற்காகத்தான் கோவிலை உருவாக்கினார்கள் ஞானிகள். அதன் மூலம் விஷத்தை வெல்லும் வழியையும் காட்டினார்கள்.

 விநாயகரை பூஜிக்கும் போது இன்று நாம் என்ன செய்கின்றோம். குளித்து விட்டு இரண்டு அருகம் புல்லைத் தேடி எடுத்துக் கொண்டு
1.இந்தாப்பா...! உனக்குப் பிரியமான அருகம்புல்லை வைத்திருக்கின்றேன்
2.எனக்கு அந்தக் காரியம் முடிக்க வேண்டும்... இந்தக் காரியம் முடிக்க வேண்டும்..! என்று
3.தன்னிடம் இருக்கிற ஆசைகளை எல்லாம் விநாயகரிடம் சொல்லிக் கேட்போம்.
4.அதையே எண்ணி ஏங்கிக் கொண்டு இருப்போம்.

பத்து நாள் செய்து விட்டு அதன் பின் தான் எண்ணிய காரியம் நடக்கவில்லை என்றால்
1.உனக்காக நடந்தேன்... உனக்கு வேண்டியதை எல்லாம் படைத்தேன்
2.எனக்கு ஏன் இப்படித் தொல்லை கொடுக்கின்றாய்.
3.எனக்குச் செய்ய உனக்கு மனமில்லையா…? என்று வேதனைப் பட்டு அங்கே பூஜிக்கின்றோம்.

அடுத்தாற்போல் விநாயகருக்கு எருக்கன் பூவை மாலையாகச் சாற்றுவார்கள்.
1.வாழ்க்கையிலே விஷத் தன்மை வரும் பொழுது
2.எருக்கண் மாலையை விநாயகருக்குச் சாற்றிவிட்டால்
3.விஷத்தை முறித்து அவன் மனமுவந்து நமக்கு நன்மைகளைச் செய்வான் என்று இதைப்போல கோரிக்கைகளைச் செய்கின்றனர்.

அது நிறைவேறவில்லை என்றால்... உன்னைத் தினம் தினம் வணங்கினேனே…! உன் பெயரைச் சொல்லாத நாளே கிடையாது, உன்னை நினைக்காத நாள் கிடையாது...! ஆனால் எனக்கு ஏன் நீ இப்படிச் செய்கின்றாய்...? என்று வேதனையான உணர்வைக் கலந்து நாம் பூஜிக்கின்றோம்.

இப்படி நாம் பூஜித்தால் மீண்டும் விஷத்தைத் தான் வளர்க்கின்றோம். விஷத்தை நீக்குவதற்கு ஞானிகளால் படைக்கப்பட்ட தெய்வச் சிலையைப் பார்த்து வேதனையையும் கவலைகளையும் தான் நாம் வளர்க்கின்றோம்.

இதை உணர்த்துவதற்காகத்தான் ஆலயங்களில் சன்னதியில் திரையிட்டுக் காட்டுகின்றார்கள்.
1.பின் திரையை விலக்கி
2.விளக்கைக் காட்டி இருளை நீக்கும் நிலையாக அங்கே காட்டுகின்றார்கள்.

அந்த நேரத்தில் இருள் நீக்கிப் பொருள் காணும் அந்த அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். எங்கள் குடும்பத்தில் உள்ளோரும் இங்கே ஆலயம் வருவோரும் இருள் நீக்கிப் பொருள் காணும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணினால் அந்தச் சக்தி நமக்குள் கூடி வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கச் செய்யும்.