ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 4, 2018

தியான வழியில் செல்லும் போது நம்முடைய வேகம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்...?

யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்துமே அந்த மெய் ஞானிகளின் ஞான வித்துக்களாக உங்களுக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிப் பதியச் செய்கின்றோம்.

ஏனென்றால் ஒரு தரம் சொன்னாலும் அதைச் சொல்லிக் கொண்டே போகும் பொழுது அடுத்து நீங்கள் எண்ணினால் உங்களுக்கு அதனின் நினைவு வராது.

திரும்பச் சொல்லும் பொழுதுதான் இந்த உணர்வின் அலைகள் மீண்டும் உங்களுக்குள் பதிய ஏதுவாகும். பதிந்த பின் நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் உங்கள் நினைவுக்கு வர இது உதவியாக இருக்கும்.
1.இப்பொழுது தான் சொன்னார்...!
2.மீண்டும் அதையே திரும்பச் சொல்கிறார் என்று சொல்லி
3.யாம் சொல்வதை விட்டுவிட்டீர்கள்…! என்றால்
3.உங்களுக்குள் ஏற்கும் பக்குவம் குறைவாகி விடுகின்றது.
4.ஒரே நாளில் ஒரே தரம் உபதேசித்தால் (சொன்னால்) அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற நிலை இல்லாது போய்விடும்.

மணல் செங்கல் சிமெண்ட் தண்ணீர் எல்லாவற்றையும் போட்டுத்தான் கட்டிடம் கட்டுகின்றோம். ஆனால் சீக்கிரம் கட்டிடத்தைக் கட்டி முடித்துவிடலாம் என்ற எண்ணத்தில்
1.ஒரே நாளில் செங்கலை ஏற்றிக் கட்டினால் என்ன ஆகும்…?
2.ஒரே அமுக்காக அமுக்கி எல்லாம் சரிந்துவிடும்.

அதைப் போலத்தான் மெய் ஞானிகள் பெற்ற பேராற்றல்களை உபதேச வாயிலாக உங்களைப் பெறச் செய்யும் பொழுது ஒரேயடியாகக் கொடுக்க முடியாது.

கட்டிடம் கட்டும் சமயம் ஒவ்வொரு இடத்திலும் அதை நிறுத்தி (ஈரம்) உணரும் வரையிலும் பொறுத்திருந்து தான் அடுத்தடுத்து கட்ட வேண்டும்.
1.கட்டிடம் எந்தப் பக்கம் சாய்ந்திருக்கின்றது..?
2.சரியாகக் கட்டியிருக்கின்றோமா..? என்று அதைச் சிந்தித்துப் பார்த்து
3.கட்டிடத்தை ஆறப் போட்டு அதற்குப் பின் மேற் கொண்டு கட்டுவதுதான் சாலச் சிறந்தது.

அதைப் போன்று துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் நிலையாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் வரும் பொழுது அந்தத் துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் உணர்வின் ஆற்றலாக அதற்குத் தகுந்த மாதிரி ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றேன். அதைத்தான் “தொட்டுக் காட்டுதல்…!” என்பது.

சில பேர்...
1.நான் அங்கே அவரிடம் போனேன்... அவர் என் முதுகில் தட்டிக் காண்பித்தார்... பிறகு நெற்றியிலே தொட்டுக் காண்பித்தார்...
2.நீ நெற்றியிலே பார்… அங்கே தெரியும்...! என்றார்.
3.அதற்குப் பின் உச்சிக்குக் கொண்டு போ.. அது தெரியும்...! என்றார் என்பார்கள்.

ஒருவர் நம்மைத் திட்டுகிறார் என்றால் அவர் திட்டியதைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது ஆழமாக உங்களுக்குள் பதிந்து விடுகின்றது. பதிந்த அந்த நிலையை மீண்டும் எண்ணும் பொழுது அந்தக் கோபம் உங்களுக்கு அப்படியே வருகின்றது.

இதைப் போன்று தான் மெய் ஞானியின் அருளாற்றலை உங்களுக்குள் பதிவு செய்து கொண்டால் அது உங்களுக்குள் துன்பத்தைப் போக்கும் உணர்வுகளாக வரும். ஆகவே
1.உங்கள் உணர்வுக்குள் ஆழமாக...
2.உங்கள் உள்ளத்திற்குள் தொட்டு...
3.உங்கள் உள்ளத்தைத் தொடும் நிலைகளுக்கு உணர்வுகளை உந்தச் செய்து
4.மெய் ஞானிகளின் உணர்வைப் பதியச் செய்வது தான் “தொட்டுக் காட்டும் முறை...!” என்பது

நீங்கள் எப்பொழுதெல்லாம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ உடனடியாகக் காற்றிலே பரவியிருக்கக் கூடிய அந்தச் சக்திகளைச் சுவாசித்து உங்கள் வாழ்க்கையில் வரும் படபடப்பு பயம் வேதனை இதைப் போன்ற நிலைகளைக் குறைத்திட இது உதவும்.

இப்படிச் சிறுகச் சிறுக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் சேர்க்கும் அந்த ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் சக்தி கூடும். அதனின் துணை கொண்டு எத்தகைய தீமைகளோ துன்பங்களோ சங்கடங்களோ உங்களுக்குள் வராதபடி தடுத்து என்றுமே ஏகாந்தமாக நீங்கள் மகிழ்ந்து வாழ முடியும்.