ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 24, 2018

அறிவின் ஞானமாக ஒளியின் சுடராக மனிதனின் ஆறாவது அறிவைக் காத்து வந்த கார்த்திகை நட்சத்திரம் தனிப் பிரபஞ்சமாக மாறிக் கொண்டிருப்பதால் “மனித சிந்தனை அழிவின் பாதையில் சென்று கொண்டுள்ளது…!”


நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த கார்த்திகை நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரமும் இதைப் போன்று ஏனைய ஐந்தாறு நட்சத்திரங்கள் தனித் தனிப் பிரபஞ்சமாக இயக்கும் நிலைகள் வளர்ச்சி பெறும் தன்மைக்கு வந்து விட்டது.

இவ்வாறு அது வளர்ந்து வரும் நிலையில் அறிந்திடும் உணர்ச்சியைத் தூண்டும் ஒரு பொருளின் தன்மை பிளந்து அறிந்திடச் செய்யும் ஆற்றல் மிக்க அந்தக் கார்த்திகை நட்சத்திரத்தின் நிலையை இன்று நமக்குக் கிடைக்காத நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது.

மனிதன் ஆறாவது அறிவைச் சரஹணபவா குகா கந்தா கடம்பா கார்த்திகேயா என்று சொல்கின்றோம். மனிதனின் ஆறாவது அறிவிற்குள் அந்தக் கார்த்திகை நட்சத்திரத்தின் நிலைகள் எத்தனையோ உண்டு.

ஏனென்றால் பல கோடித் தாவர இனங்களுக்குள் கார்த்திகை நட்சத்திரத்தின் சத்துகள் உட்புகுந்து அதனை அதைக் காத்திடும் நிலையாக வந்தது.

அந்தத் தாவரத்தின் உணர்வை உணவாக எடுத்த உயிரணுவின் தன்மை வளர்ச்சியில் மனிதனாகி
1.அவ்வாறு சுவாசிக்கும் அந்தத் தாவர இனத்தின் மணம் எண்ணமானாலும்
2.அந்த மணத்தின் உணர்வின் சத்து அது உடலாகி அந்த உடலுக்குள் எண்ணமாகி
3.எண்ணத்தின் நிலைகள் இயக்கமாகி அதனின் உணர்வாக அறிந்துணர்ந்து வாழ்ந்து வளர்ந்து
4.அறிவின் ஞானமாக ஒளிச் சுடராக வளர்த்திடும் நிலைகளைத்தான் “கார்த்திகேயா…!” என்று ஞானிகள் உணர்த்தினார்கள்
5.அது தான் கார்த்திகை நட்சத்திரத்தின் நிலைகள்.

பல கோடித் தாவர இனங்களின் நிலைகளிலும் அந்தக் கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வலைகள் அது கலந்து பல நிலைகள் கொண்டு மனிதனுக்குள் ஐந்து புலனறிவானாலும்
1.ஆறாவது அறிவின் தன்மை அறிந்திடும் நிலையும் அறிந்து செயல்படும் திறனும்
2.தீமையைத் தன் எண்ணத்தால் அகற்றிடும் நிலையும்
3.தீமையை அடக்கி அது நன்மை பயக்கும் சக்தியாக மாற்றும் நிலையும்
4.மனிதனின் இந்த ஆறாவது அறிவிற்குள் உண்டு.

ஆறாவது அறிவிற்குள் வளர்ந்து வந்த அந்தக் கார்த்திகை நட்சத்திரத்தின் அணுக் கதிரியக்கங்கள் இன்று மனிதனுக்குள் வந்து சேர்ந்து கொண்டு இருக்கும் நிலைகள் மனிதனுடைய விஞ்ஞான அறிவால் மாறிவிட்டது.

சிந்திக்கும் நிலை அற்ற மனிதனாக மனிதனுக்குண்டான சிந்தனைகள் மாறி கதிரியக்கச் சக்தியின் வெறி கொண்டு தாக்கிடும் உணர்வாக இன்று மாற்றப்பட்டு விட்டது. இதற்குக் காரணம் என்ன…?

கார்த்திகை நட்சத்திரத்தின் இருளை மாய்த்து ஒளியைப் பெற்றிடும் இந்த உணர்வின் தன்மை அது விண்வெளியில் படராததனால் தாவர இனங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்கவில்லை. அதனால் நஞ்சு கொண்ட தாவர இனங்கள் தான் இன்று ஓங்கி வளர்கின்றது.

நஞ்சு கொண்ட உணர்வுகளாக மனிதனின் எண்ணங்களுக்குள் அது ஓங்கி வளர்ந்து சிந்தனை அற்ற செயலாக ஆகிக் கொண்டு இருக்கின்றது.

நம் சூரிய குடும்பத்தைப் போல கார்த்திகை நட்சத்திரமும் அது ஓர் பிரபஞ்சமாக மாறி அதற்குள் கோள்கள் வளர்ந்து முன் தோன்றிய கோள்கள் அனைத்தும் நட்சத்திரங்களாக மாறி தனித்துத் தன்னைத் தானே இயக்கிடும் நிலைகள் பெற்றுவிட்டது.

நமக்குத் திருமணமான பின் குழந்தைகள் பிறப்பது போல மற்ற உயிரினங்கள் இரண்டறக் கலக்கப்பட்டு உயிரினங்கள் தோற்றுவிப்பது போல இன்று பருவம் அடைந்த கார்த்திகை நட்சத்திரமும் விண்வெளியின் ஆற்றல் மிக்க அருள் சக்தியைத் தனக்குள் எடுத்து பிரபஞ்சமாக உருவாகிக் கொண்டிருக்கின்றது,

அவ்வாறு பிரிந்ததால் கார்த்திகை நட்சத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க அறிவின் நிலைகள் நமது பிரபஞ்சத்திற்குக் கிடைக்காது போய்விட்டது. இதனால் தான் நம் பிரபஞ்சத்திற்குள்
1.மனிதனுடைய சிந்தனை விஞ்ஞான அறிவால் எவ்வளவு முன்னேற்றம் அடைந்து வளர்ச்சி அடைந்திருந்தாலும்
2.மனித சிந்தனையும் மனிதன் தன்மை முழுமை அடையும் பருவமும் இன்று அற்றுவிட்டது.

உடலின் பற்று கொண்ட மனிதனல்லாத மற்ற உயிர் இனங்கள் மிருகங்கள் மிகவும் சிரமப்பட்டுத்தான் தன் உடலை வளர்க்கின்றது. அதே போல தன் எதிரிகளிடமிருந்து தன்னைக் காக்கவும் மிகுந்த சிரம்ப்படுகின்றது.

ஒரு பாம்பினம் ஊர்ந்து சென்றாலும் அது தன்னைக் காத்திட வேதனை கொண்ட நிலையில் தன் உடலைக் காத்திடச் செய்வது போலத்தான் இன்றைய உலகில் மனிதனும் வேதனைப்பட்டுத் தன் உடலைக் காத்திடும் நிலை தான் வருகின்றதே தவிர
1.இந்த உடலுக்குள் விளைந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு
2.உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிடும் அறிவின் ஞானம் கொண்டு செயல்படவில்லை.

ஆனால் இந்தச் சக்தியை இழக்காது காத்து காத்திட்ட உணர்வின் தன்மை கொண்டு ஒளியாக மாறி விண் உலகம் சென்றவர்கள் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் இன்றும் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்.

விஷத் தன்மையாக மாறிக் கொண்டிருக்கும் இந்த நிலையிலிருந்து மீண்டு நம் உயிராத்மாவை ஒளியாக மாற்றி அந்த ஞானிகள் வாழும் எல்லையான சப்தரிஷி மண்டலத்தை அடைய வேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியை உங்களுக்கு உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.