ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 10, 2018

தியான வழியில் நாம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் தீமையை நீக்கும் அனுபவம் (ஞானம்) பெறவேண்டும்…!


ஒரு குழம்பை வைக்கும் போது அதிலே காரம் அதிகமாகி விட்டால் காரம்…காரம்…! என்று சொல்கின்றோம். உப்பு அதிகமாகி விட்டால் உப்புக் கரிக்கிறது…! என்று சொல்கின்றோம். அதிலே எப்பொருள் அதிகமாகின்றதோ மற்ற பொருள் அதற்குள் அடங்குகின்றது.

இதைப் போல நமக்குள் நல்ல குணங்கள் இருந்தாலும் நாம் நுகரும் தன்மை கொண்டு கோப குணத்தை அடிக்கடி எடுத்துக் கொண்டிருந்தால் அந்த உணர்வின் தன்மை முன்னணியில் வந்து நம் நல்ல குணங்களை மறைத்து நம்மைக் கோபக்காரனாக ஆக்கும்.

அடிக்கடி நாம் சலிப்புப் பட்டால் அந்த மணம் நம் ஆன்மாவில் பெருகி அடிக்கடி சலிப்பாகவும் சஞ்சலமாகவும் பேச வைக்கும்.

இதைப் போல வெறுப்பின் தன்மையை அதிகமாக எடுத்துக் கொண்டால் யார் எதைச் சொன்னாலும் வெறுத்துப் பேசும் உணர்வுகள் அதிகமாகி நம் சொல்லைக் கேட்போருடைய நிலையும் நம்மை வெறுக்கச் செய்யும் நிலையாக உருவாகின்றது.

நாம் எந்தக் குணத்தை முன்னணியில் வைக்கின்றமோ அது நம் உடலுக்குள் பதிவாகி மொத்தமாகச் சுவாசிக்கும் பொழுது இதனின் நிலையை அது நமக்குள் உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

1.இதைப் போன்ற நிலைகளிலிருந்து மனதைச் சமப்படுத்துவதற்குத் தான்
2.அந்த மெய் ஞானிகளின் உணர்வலைகளை எடுப்பதற்கு
3.இந்தத் தியானத்தைப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.

இதையெல்லாம் போதிப்பது எதற்கு என்றால் இன்ஜினியராகக் கற்றுக் கொள்ளும் போது இன்னென்ன பொருள்கள் இன்னென்ன வகையில் தான் செயல்படுகிறது என்று நாம் அறிந்து கொள்கின்றோம்.

பின் அந்த இயந்திரங்களைக் காட்டி அந்தப் பொருளின் நிலையை நினைவுக்குக் கொண்டு வருகின்றனர். அது எந்த அளவிற்கு ஆழமாகப் பதிகின்றதோ அதை நாம் பழக்கத்தில் ஏற்படுத்திக் கொள்கின்றோம்.

படித்து முடித்து வேலை செய்யும் இடங்களில் இயந்திரங்களில் சில குறைகள் ஏற்பட்டால் அதை எண்ணிப் பார்க்கப்படும் போது எதனால் இப்படி வந்து இருக்கும்…? என்று தன் சிந்தனையின் நிலைகள் தூண்டச் செய்து அது சரிபடுத்தும் நிலையாக பின் அனுபவ ரீதியிலே வருகின்றது.

இதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் நல்லதையே எண்ணிக் கொண்டிருந்தாலும் பிறர் தவறு செய்யும் உணர்வுகளை நாம் நுகர்ந்து கண் கொண்டு பார்க்கப்படும் போது அவர் உடலிலே விளைந்த தவறான உணர்வை நாம் நுகர நேர்கின்றது.

நுகர்ந்த உணர்வுகளை உணர்ச்சிகளாக இயக்கி நம் உயிர் அது உணர்த்திக் காட்டினாலும் இந்த உணர்வின் சத்து நமக்குள் பதிவாகி விடுகின்றது.

ஏனென்றால் இதையெல்லாம் சொல்லி நாம் எதைச் செய்யப் போகின்றோம்…? சாமி (ஞானகுரு) சுருக்கமாகச் சொன்னால் போதுமே…! என்று சிலர் எண்ணுவார்கள்.
1.யாம் சுருக்கமாகச் சொல்வதற்கு இல்லை.
2.நீங்கள் விரிவாகத் தெரிந்து கொண்டாலும் பாட நிலையாகத் தான் கற்றுக் கொள்ள முடியும்.
3.அதனின் உட்பொருளைக் காண முடியாது…!

ஆகவே…
1.யாம் உபதேசிக்கும் ஞானிகளின் உணர்வுகளை நீங்கள் கூர்ந்து கவனிக்கப்படும் போது
2.அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை நுகர நேர்கின்றது.
3.நுகர்ந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் பரவுகின்றது… உடலுக்குள் பதிவாகின்றது.

இந்த மனித வாழ்க்கையில் நீங்கள் தவறு செய்யாமலே பிறிதொரு உணர்வு உங்கள் உடலுக்குள் புகுந்து அது இயக்கும் நிலையை
1.“நீங்கள் சிந்தித்து…
2.அனுபவ ரீதியாக உணர்ந்து…
3.தீமைகளைக் கட்டுப்படுத்தும் நிலைக்கு… வழி கோரச் செய்வதற்கு தான்…!”
4.இதை யாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வருகின்றோம்.