ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 21, 2018

நல்லதை “நான் பெறவேண்டும்...” என்று விரும்புவதற்கும் “நாம் பெறவேண்டும்...” என்று விரும்புவதற்கும் உள்ள வித்தியாசம்

மாமரத்தில் விளைந்த உணர்வின் சத்து மாங்காயாக இருக்கும் போது புளிப்பின் தன்மையாக இருந்து அந்த மணத்தையே வெளிப்படுத்தும். ஆனால் அது மாங்கனியாகும் பொழுது நல்ல மணமாக வெளிப்படுத்துகின்றது.

அதைப் போன்று தான் இந்த மனித வாழ்க்கையில் வந்த வெறுப்பின் சத்தையும் புளிப்பின் சத்தையும் மெய் ஞானிகள் கனிவாக்கிக் கனியின் தன்மை அடைந்து ஒளியின் சரீரம் பெற்று விண்ணிலே வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

மெய் ஞானிகள் கண்டுணர்ந்த அந்த உணர்வினை எண்ணும் போது அதை நீ பருகும் சக்தி பெறுகின்றாய். அதே சமயத்தில் அதைப் பருகும் நிலை அடைந்த நீ
1.உனக்குள் விளைந்த மணமாக அந்த மெய் ஞானிகளின் உணர்வை அனைவரும் பெற வேண்டும் என்று ஏங்கும் போது
2.அந்த உணர்வின் சக்தி உனக்குள் கனிவாகும் - கனியின் தன்மையைப் பெறும் தகுதியாக நீ பெறுகின்றாய்...! என்று குருநாதர் இதைச் சொன்னார்.

அந்த அருள் ஞானிகளின் உணர்வின் சக்திகளை “நாம் அனைவரும் பெற வேண்டும்...!” என்ற நிலையிலேயே என்றும் வளர வேண்டும்.
1.“நாம்...!” என்ற ஒருக்கிணைந்த நிலையை அடைந்தால் நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்த்து வலுக் கொண்ட நிலையாக ஆகின்றோம்.
2.”நான்...!” என்ற நிலையில் தனித்துச் சென்றோம் என்றால்
3.மற்றவர்களின் உணர்வின் வலு நமக்குக் கிடைக்காது இழக்கப்படுகின்றது.
4..அப்பொழுது நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் நிலை வருகின்றது என்று குருநாதர் என்னை எச்சரித்தார்.

எந்த மெய் ஞானிகளின் அருள் சக்திகளைப் பருகினோமோ எதை நாம் கலந்து உறவாடினோமோ அந்த உணர்வின் சத்தை நீ பெற வேண்டும் என்று... நான் எப்படி எண்ணினேனோ...!
1.நீ பெற வேண்டும் என்று நான் எண்ணும் போது
2.உன்னுடன் இணைத்தே நான் ஆகிறேன். அப்பொழுது நாம் ஆகின்றோம்.

இதைப்போல  அனைவருக்கும் அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நீ எண்ணும்போது
1.அவர்களுடன் இணைந்தே நீயும் அவர்களாகின்றாய்.
2.அவர்களும் உன்னுடன் இணைந்தே உன் தன்மை பெறுகின்றார்கள்.

விண்ணிலிருந்து விஷத் தன்மைகள் பல வந்தாலும் சூரியன் அதையெல்லாம் ஒன்றாக இணைந்து ஒளியாக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தையே ஒளியின் சுடராக இயக்குவது போல் உனது உணர்வும் செயல்பட வேண்டும்.
1.மெய் ஞானிகளின் உணர்வை நீ பருகி
2.பருகிய அந்தச் சத்தை அனைவரையும் நீ பெறச் செய்ய வேண்டும்
3.அதனின்று தான் நீ இதைப் பெறுகின்றாய்...! என்று தெளிவாக எமக்கு உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

நாம் ஒவ்வொருவரும் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியை இந்த உலகில் வாழும் அனைத்து மக்களையும் பெறச் செய்வோம்.

கனியின் தன்மையை அடைந்த அந்த மெய் ஞானிகள் பெற்ற அழியா ஒளியின் சரீரத்தை நாம் அனைவரும் பெற வேண்டும் என்ற நிலைக்குத் தான் இதை உணர்த்துகின்றோம்.