ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 3, 2018

பக்தி என்றால் என்ன…? தியானம் என்றால் என்ன…?


நாம் கையிலே ஆயுதத்தை வைத்துக் கொண்டு ‘’புலி வருகிறது… புலி வருகிறது…!” என்று சொன்னால் துப்பாக்கி எதற்கு வைத்திருக்கிறோம்…? துப்பாக்கியைக் கையில் கொடுத்திருக்கிறோம், சுடுவதற்கும் சொல்லிக் கொடுக்கிறோம்.

“ஐய்யய்யோ…! புலி வருகிறது… புலி வருகிறது…!’’  என்று துப்பாக்கியை வைத்துக் கொண்டு சுடாமல் இருந்தால் என்ன செய்யும்…? அது நம்மைத் தாக்கிவிடும்.
 
இதைப் போலத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளேன். 

சந்தர்ப்பத்தில் நீங்கள் பிறருடைய கஷ்டமான நிலைகளைக் கேட்டு அறியத்தான் வேண்டும். “நீங்கள் அவர்களுக்கு உதவி செய்துதான் ஆக வேண்டும்…!”
 
உதவி செய்தாலும்… அவர்கள் சொன்ன துன்பமான உணர்வுகள் உங்களுக்குள் ஆட்டிப் படைக்காதபடி ‘’ஆத்ம சுத்தி” என்ற இந்த ஆயுதத்தை எடுத்துச் சுத்தப்படுத்த வேண்டும்.

உயிரான ஈசனிடம் வேண்டி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்க வேண்டும்.

அடுத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்தங்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் 
1.கண்களைத் திறந்து ஒரு நிமிடமும், 
2.கண்களை மூடி ஒரு நிமிடமும் எடுத்துக் கொள்ள வேண்டும்,.

கண்களைத் திறந்தபின் துன்பப்பட்டவர்களிடம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியால் உங்கள் துன்பங்கள் நீங்கும், நீங்கள் நலம் பெறுவீர்கள் என்று சொல்லிவிட்டு அந்தப் பொருளைக் கொடுத்துப் பாருங்கள்.
      
இந்த முறைப்படி செய்தால் அவர்களது கஷ்டம் உங்களுக்குள் வராமல் தடுக்க முடிகின்றது, 

நாம் நகை வாங்கியபின் அடுத்த நகை செய்யும்போது, அதில் உள்ள வெள்ளியையும் செம்பையும் எப்படிச் சுத்தப்படுத்திக் கொள்கிறோமோ அதே போல அடுத்த நிமிடமே கேட்டறிந்த பிறருடைய கஷ்டத்தைச் சுத்தப்படுத்திக் கொண்டு நமது மனதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் ‘’தியானம்…!” என்பது.

நமக்குள் தீயது சேராது தடுக்கும் இந்த ஆற்றல் மிக்க சக்தியின் துணை கொண்டு நமக்குள் தியானமிருக்க வேண்டும். 

தியானம் என்பது எது…? நமக்குள் கெட்டது சேரவிடாது வைராக்கியமான நிலைகள் பெறவேண்டும். இதுதான் தியானம் என்பது. 

பக்தியில் என்ன செய்கின்றோம்…? பக்தி என்பது நல்லதை நினைப்பது. நல்லதை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பார்கள். 

1.தியானம் என்பது நமக்குள் நல்லதைச் சேர்த்துக் கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்வது.
2.தியானம் என்பது உயர்ந்த ஞானிகளின் சக்திகொண்டு நமக்குள் நல்லதைக் காக்கச் செய்வது
3.இந்த சக்தி இல்லையென்றால் செயல்படுத்த முடியாது.

நமக்கு முன்னால் சுழன்று கொண்டிருக்கும் அந்த ஞானிகளின் அருள் சக்தியை
1.வலு கொண்டு உங்களுக்குள் பெறச்செய்து, 
2.அருள் வாக்கின் நிலையாக உங்களுக்குள் கொடுத்து
3.எப்பொழுதெல்லாம் கடுமையான நிலைகளில் துன்பத்தைப் பார்க்கின்றீர்களோ… நுகர்கின்றீர்களோ… கேட்கின்றீர்களோ…
4.அவைகளெல்லாம் உங்களுக்குள் சேராமல் தடுப்பதற்காகத்தான் இந்த ‘ஆத்ம சுத்தி என்ற கடுமையான ஆயுதம்.
 
ஆத்ம சுத்தி செய்துவிட்டு 
1.நாளை நடப்பவை அனைத்தும் நல்லவைகளாக இருக்கவேண்டும், 
2.நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும், 
3.நாங்கள் பார்ப்போரெல்லாம் நலமும் வளமும் பெறவேண்டும். 
4.எங்கள் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பயக்கும் சக்தியாகப் படரவேண்டும்…! என்ற எண்ண அலைகளை நீங்கள் பரப்புங்கள்