ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 7, 2018

குரு இல்லாத வித்தை ஒரு வித்தையாகாது...! ஏன்...?


பள்ளியிலே நாம் படிக்கிறோம் என்றால் பாடங்களை அங்கே சொல்லாகச் சொல்லி வெறும் பாடமாகப் படிக்கும் நிலைகள் (THEORY) வேறு.

அதே சமயத்தில் நேரடியாக “இன்ன இன்ன செய்கின்றது...!” என்று பாட நிலைகளுடன் அனுபவத்தைக் காட்டி (PRACTICAL) உணரச் செய்யும் நிலைகள் வேறு.

1.அனுபவத்துடன் காட்டும் நிலை வரும் போது பொருள் கண்டுணர்ந்து
2.விரயமற்ற நிலைகளில் செயல்படுத்த முடியும்.
3.ஆனால் வெறும் பாட நிலைகளைப் படித்துவிட்டு வரும்போது
4.அதை அறிந்து கொள்ள வரும் போது விரயங்கள் நிறைய ஆகும்.
5.ஏனென்றால் புதிதாக நான் கண்டுணரப் போகின்றேன் என்ற நிலை வரும் போது அது “குருவற்ற நிலை...!”

ஆகவே வெறும் பாட நிலைகளைக் கற்றபின் யாருடைய துணையும் இல்லாது ஒன்றைச் செய்யும் பொழுது காலமும் விரயமாகும்... பொருள்களும் விரயமாகத்தான் செய்யும்.

அதைப் போன்று தான் மெய் ஞானத்தை உணர வேண்டும் என்றால் அனுபவம் பெறாதபடி குரு துணையில்லாது சென்றால் நாம் போகும் பாதையில் சிறு சிறு தடைகள் பட்டாலும் பிறருடைய சோர்வான எண்ணங்களை நாம் கவரும் போது அந்த மெய் ஒளியைக் காணும் நிலைகள் திறனற்றதாகி விடுகின்றது.

அதற்குத்தான் குரு பலம் வேண்டும் என்று சொல்வது. நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் காட்டிய அருள் வழிப்படி
1.அவரை நான் (ஞானகுரு) எண்ணி மெய் ஒளியைப் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வுகளைக் கூட்டிக் கொள்ளும் போது
2.அவர் கண்டுனர்ந்து எனக்கு உபதேசித்த உணர்வின் அலைகளை நானும் பின் தொடர்ந்து அதை நுகர நேருகின்றது.
3.நுகரும் போது குருநாதருடைய உணர்வுடன் ஒன்றி அவர் பருகிய மெய் ஞானத்தை நானும் பருக முடிகின்றது
4.அந்த உணர்வின் சத்தை நான் பருகப்படும் போது அந்த உணர்வின் எண்ண அலைகள் எனக்குள்ளும் குவிகின்றது.
5.அதே உணர்வின் எண்ணங்களை நான் வெளிப்படுத்தும் போது இது சூரியனின் காந்த சக்தி கவருகிறது.
6.இப்பொழுது நீங்கள் இதைக் கூர்மையாகப் படித்துணரும் போது அந்த மெய் உணர்வின் தன்மை உங்களுக்குள்ளும் பதிவாகின்றது.

இந்தப் பதிவின் நிலைகளை மீண்டும் நினைவாக்கி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று விண்ணை நோக்கி உணர்வைச் செலுத்தி விண்ணிலிருந்து அதை ஈர்த்து உங்கள் உடலுக்குள் அந்த நினைவலைகளைச் செலுத்தப்படுத்தும் போது அந்த ஆற்றல் உங்களுக்குள் சிறுகச் சிறுகச் சேர்கின்றது.

மெய் ஞானிகளின் உணர்வுகளை குரு பலத்தால் தான் நாம் பெற முடியும். குரு துணையில்லாது விண்ணின் ஆற்றலைப் பெற முடியாது...!