ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 2, 2018

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் தான் மகரிஷிகளின் ஆற்றலைப் பெரும் தகுதி எமக்குக் (ஞானகுரு) கிடைத்தது – அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை உங்களுக்கும் கிடைக்கச் செய்கின்றோம்…!

பண்டைய கால மெய் ஞானிகள் பல ஆற்றல்களைத் தன் உடலிலே விளைய வைத்து மற்ற மக்கள் எல்லோரும் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் உபதேசித்து வெளியிட்ட ஆற்றல் மிக்க இச்சக்தி நமது பூமியில் பரவிப் படர்ந்து கொண்டே உள்ளது. அத்தகைய மெய் ஞானிகளில் முதன்மையானவன் “அகஸ்தியன்…!”

அகஸ்தியனைப் பின்பற்றிச் சென்ற மகா ஞானிகளில் நமது குருநாதர் ஒருவர். அகஸ்தியரின் உணர்வுகளைச் சந்தர்ப்பவசத்தால் எடுத்து வளர்த்துக் கொண்ட நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவரைச் சந்திக்கும் வாய்ப்பு எமக்குக் (ஞானகுரு) கிட்டியது.

அவர் உடலுடன் வாழ்ந்த காலத்தில் அவர் தான் எடுத்துக் கொண்ட அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை எல்லாம் எம்மைக் கூர்ந்து கவனிக்கும்படி செய்தார்.
1.பண்டைய கால மக்களின் வாழ்க்கையும்
2.அவர்கள் வாழ்ந்த காலத்தில் தீமையை நீக்கி மெய் உணர்வைத் தனக்குள் வளர்த்து
3.அவர்கள் எவ்வாறு விண் சென்றார்கள்…? என்ற நிலையை உணர்த்தி
4.அதை நேரடியாகப் பார்க்கவும் செய்து அனுபவ ரீதியிலே அந்த ஆற்றலைப் பெறவும் வைத்தார்.
5.அதை நான் பார்த்தேன்….. என்று இப்பொழுது உங்களுக்குச் சொன்னால்
5.நான் பார்க்க வேண்டுமே…! என்று உங்களுக்குள்ளும் அந்த நினைவு வரும்.

 அத்தகைய உணர்வின் ஆற்றல் மிக்க இச்சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் உங்கள் மனதை உயர்வாக்கிக் கூர்மையாக்கிக் கூர்மையின் ஈர்ப்புக்குள்…
1.அந்த மகா ஞானிகள் பெற்ற சக்தியை
2.நீங்கள் பெறும் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் வண்ணம்… யாம் உபதேசிப்பது.

உபதேசிக்கும் போது நீங்கள் கூர்ந்து கவனித்த இந்த உணர்வுகள் ஊழ் வினையாக உங்களுக்குள் பதிவாகின்றது. அதனின் துணை கொண்டு நீங்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

அந்த மெய் ஞானிகளின் சக்தி பெறவேண்டும் என்று அனைவரும் ஒன்று சேர்ந்து தியானிக்கும் போது சிறு துளி பெரு வெள்ளம் போல் ஆகின்றது. அதாவது மழை நீர் சிறு துளிகள் ஒன்று சேர்ந்து பெரும் வெள்ளமாகும் பொழுது அது திரண்டு ஓடி அதற்குள் செத்ததைகளையும் குப்பைகளையும் தள்ளிக் கொண்டு போகும்.

அதைப் போல நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் உணர்வுகளைப் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் சுவாசிக்கும் பொழுது
1.அந்த உணர்வினை எல்லோரும் ஏகமாக எடுத்து ஈர்க்கும் இந்தச் சந்தர்ப்பத்தில்
2.வலுக் கொண்ட உணர்வலையாக இங்கே வரும் போது
3.தீமையை விளைவிக்கும் உணர்வுகள் அனைத்தும் நம்மிடமிருந்து அகன்று செல்லுகின்றன.
4.உங்கள் வாழ்க்கையில் தெளிந்திடும் தெளியச் செய்யும் உணர்வுகளை நீங்கள் பெறுகின்றீர்கள்.

ஒரு தேர்…! அது சக்தி வாய்ந்த மிக கடினமான நிலைகளில் இருந்தாலும் ஆயிரம் பேர் ஒன்று சேர்ந்து வலுவாக இழுக்கும் போது தேரை எல்லை சேர்க்க முடிகின்றது.

அதைப் போன்று தான் ஒரே ஏக்க உணர்வு கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தின் ஈர்ப்பை நாம் அனைவரும் ஒன்றாகச் செலுத்தும் போது
1.விண்ணிலே அது வெகு தொலைவில் படர்ந்திருந்தாலும்
2.நம் அனைவரது எண்ண ஏக்கத்தால் ஈர்க்கப்பட்டு நமக்கு முன் படரச் செய்து
3.அதை நமது ஆன்மாவாகச் “சிறிது நேரத்தில் மாற்றுகிறது…!”

நம் ஆன்மாவாக மாற்றி நாம் சுவாசிக்கும் பொழுது நம் உடலுக்குள்  சென்று அது ஊழ்வினை என்ற வித்துக்களாகப் பதிவாகின்றது. இவ்வாறு அந்த மெய் ஞானியின் உணர்வை நமக்குள் ஊழ்வினையாகப் பதியச் செய்து உடலிலுள்ள எல்லா அணுக்களுக்குள்ளும் விளையச் செய்தால்… “நாம் அந்த வினைக்கு நாயகனாக ஒளிச் சரீரம் ஆகின்றோம்….!”

அந்தச் சக்தி வாய்ந்த அந்த மகரிஷிகளின் உணர்வை வளர்த்துக் கொள்ளும் நிலைக்குத்தான் இந்த உபதேசமே.