காலையிலிருந்து இரவு வரையிலும் கேட்டறிந்த பார்த்தறிந்த
தீமைகளை அந்த அசுர குணங்களின் செயல்களை அகற்றும் நிலைக்காக மாமகரிஷி ஈஸ்வராய
குருதேவர் காட்டிய வழியில் ஆத்ம சுத்தி என்ற இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.
இரவில் தூங்கச் செல்லும் போது இதை அவசியம் செய்து பழக வேண்டும்.
தினசரி நம் உடலிலே இருக்கும் அழுக்கைப் போக்க நல்ல
நீரைக் கொண்டு உடலைத் தேய்த்துக் குளிக்கின்றோம். அது போல இரவிலே நாம் தூங்கச் செல்லும்
போது சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...! என்று ஒரு நூறு முறை
நம் உயிரை வேண்ட வேண்டும்.
ஏனென்றால் அன்றாடம் நாம் எத்தனையோ தீமையான செயல்களை
டி.வி. பத்திரிக்கை கம்ப்யூட்டர் மூலமாகவும் அல்லது நேரடியாகவும் நாம் பார்க்க
நேர்கின்றது.
1.அவை அனைத்தும் நம் கண்களால் கவரப்பட்டு உயிருடன்
இணைக்கப்படும் பொழுது
2.நம் உயிர் அதை எல்லாம் இயக்கச் செய்யும் பொழுது
3.தவறு செய்கின்றான்... குற்றம் செய்கின்றான்... கொலை
செய்கிறார்கள்... வேதனையால் துடிக்கின்றார்கள்...! என்று உணர்கின்றோம்.
இவ்வாறு உயிரால் இயக்கப்பட்டு அந்த உணர்வுகளை நாம்
அறிந்து கொண்டாலும்
1.இயக்கிய உணர்வின் சக்தி ஜீவன் பெற்று
2.நமக்குள்ளும் அதே தீமைகளை விளைவித்து விடுகின்றது.
கொலைகாரனயோ தவறு செய்பவனையோ வேதனைப்படுபவனையோ பார்த்து
நுகர்ந்தறிந்த உணர்வுகள்
1.நம் உயிரின் நிலைகளைத் திரை மறைவாக மறைத்துக் கொண்டு
2.நம் சிந்திக்கும் உணர்வினைச் செயலற்றதாக மாற்றிவிடும்.
அத்தகைய தீமைகளை நீக்க வேண்டும் என்றால் புருவ
மத்தியில் இருக்கும் உயிரான ஈசனிடம் எண்ணங்களைச் செலுத்த வேண்டும். உயிருடன் ஒன்றி
நினைவினை விண்ணை நோக்கிச் செலுத்தித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி
மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிக்க
வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி
மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள
ஜீவான்மாக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...! என்று நூறு முறை நம் உடலுக்குள் செலுத்துவது
நல்லது.
சப்தரிஷி மண்டலங்களாக இருப்பினும் துருவ நட்சத்திரமாக
இருப்பினும் அவர்கள் அனைவரும் தங்கள் ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் கொண்டு ஒளியாக மாற்றிச்
சப்தரிஷிகளாக ஆனவர்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி
மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உடலுக்குள் பல முறை கண்ணின்
நினைவாற்றலைச் செலுத்தித் தியானிக்க வேண்டும்.
ஆக நம் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி
பெற வேண்டும் என்ற நினைவினை உள் செலுத்தி நம்மை அறியாது சேர்ந்த தீமையின் உணர்வுகளைச்
செயலற்றதாக மாற்றச் செய்வது தான் “சூரசம்ஹாரம்...!” என்பது.
ஒரு விளக்கை மறைத்துக் கொண்டிருக்கும் இருளைப் பிளந்து
விட்டால் விளக்கின் வெளிச்சம் அருகிலே இருக்கக்கூடிய அனைத்துப் பொருளையும் தெரிவிக்கின்றது.
அது போலத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை
நுகர்ந்து அந்த உணர்வுகளை நம் ஆன்மாவாக்கி மீண்டும் சுவாசிக்கும் பொழுது இருள் சூழச்
செய்யும் அந்த இருள் சக்தியை அது அகற்றச் செய்யும்.
தீமையான செயல்ளைச் செயல்படுத்தும் அந்த கொடூர சக்தி
கண்ணின் நினைவு கொண்டு அகற்றப்படுகின்றது. ஆகவே தான்
1.இரவிலே தூங்கச் செல்லும் போது நூறு முறையாவது சப்த
ரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் உடலில் உள்ள தீமையான உணர்வுகள் மடிய வேண்டும்
3.சப்தரிஷிகளின் அருள் சக்தியால் நாங்கள் பொருள் கண்டுணர்ந்து
செயல்படும் திறன் பெறவேண்டும்
4.எங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த தீயவினைகள்
அனைத்தும் நீங்க வேண்டும்
5.எங்கள் விவசாய நிலங்களில் அறியாது சேர்ந்த தீய அணுக்களின்
நிலைகள் மறைய வேண்டும்
6.சப்தரிஷிகளின் அருள் சக்தி விவசாய நிலங்களில் படர்ந்து
நல்ல அணுக்கள் உரு பெற வேண்டும்
7.அதனின் மலத்தின் தன்மை கொண்டு தாவர இனங்கள் செழித்து
வளர்தல் வேண்டும்
8.சப்தரிஷிகளின் அருள் சக்தி எங்கள் தொழில் வளாகம்
அனைத்திலும் படர வேண்டும்
9..எங்கள் வளாகத்தில் தொழில் செய்யும் அனைவரும் மன
பலம் மன வளம் பெற வேண்டும்
10.அவர்கள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்கிப் பொருள்
கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று
11.இந்த ஏக்க உணர்வினை நாம் நம் நினைவால் பரவச் செய்து
நம் ஆன்மாவைத் தூய்மை செய்ய வேண்டும்.
நம் ஆன்மாவைத் தூய்மை செய்வது போல் வீட்டைத் தூய்மைப்படுத்துவதும்
நம் தொழில்களிலுள்ள தீமையான உணர்வுகளை நீக்குவதும் விவசாய நிலங்களில் நல்ல உணர்வுகளைப்
பரவச் செய்வதும் வேண்டும்.
தினசரி இரவு இவ்வாறு எண்ணி ஆத்ம சுத்தி செய்து இந்தக்
கணக்கைக் கூட்டிக் கொண்டு வந்தாலே போதுமானது. நம் வாழ்க்கைப் பாதை சீராகும். நம் பயணம்
அழியா ஒளிச் சரீரம் பெறுவதாக அமையும்.