ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 6, 2018

அரசர்கள் தங்கள் குழந்தைகளை உடல் வலிமை மிக்கவர்களாக உருவாக்கினார்கள் – குருநாதர் காட்டிய வழியில் உங்கள் உயிராத்மாவை என்றுமே அழியாததாக உருவாக்கச் செய்கின்றோம்

நல்ல உணர்வுடன் நாம் வாழ்ந்து வந்தாலும் ஒருவர் நமக்குத் துன்பமூட்டும் செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அதனால் நம் நல்ல உணர்வுகள் சீர்கெட்டு நல்ல குணங்களைச் சிந்திக்க முடியாதபடி நோயாக வளர்ந்து விடுகிறது.

இதைப் போன்ற நிலையில் வாழ்க்கையைச் சீர்கெடச் செய்யும் இந்த உணர்வை மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லவா...!

என்னுடைய (ஞானகுரு) வாழ்க்கையில் துன்பங்கள் வரும் பொழுதெல்லாம் அதை நிவர்த்திப்பதற்காக வேண்டி குருநாதர் உபதேசித்த அருள் உணர்வுகளை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் ஆற்றலைச் சுவாசித்துப் பழகினேன்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் எனக்குள் அறியாது வந்த நஞ்சுகள் ஒடுங்கி என்னுடைய துன்பங்கள் அகன்று மகிழ்ச்சியூட்டும் செயலை உருவாக்கியது.

அதைப் போலத்தான் வேதனையும் துன்பமும் பல கஷ்டங்கள் கொண்டு நீங்கள் வந்தாலும் அதை நிவர்த்திப்பதற்குத்தான் எம்மிடம் வருகின்றீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட இடர்களிலிருந்து மீட்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்தக் கருத்தில் தான் இங்கே வருகின்றீர்கள்.

கஷ்டமாக இருக்கிறது...! என்ற நிலையில் உடலிலே வேதனை... தொழிலிலே கஷ்டம்... நண்பர்களால் சில துன்பங்கள்... என்று இதைப் போன்று வாழ்க்கையில் வரக்கூடியதை எண்ணிச் “சாமிகளிடம் (ஞானகுரு) போனால்... எப்படியும் நிவர்த்தி ஆக்கலாம்...!’ என்ற ஏக்கம் அது ஒன்றாக அமைகின்றது.

அந்த ஏக்கத்தின் நிலையில் வரும்பொழுது நீங்கள் ஏங்கித் தவிக்கும் இந்த உணர்வுக்குள் மெய் ஞானிகளின் உணர்வின் நிலைகளை யாம் உபதேசிக்கின்றோம்.

உபதேசிப்பது உங்கள் செவிப் புலன்களில் அது தாக்கப்பட்டு அந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு அந்த மெய் ஞானிகளின் உணர்வின் நிலைகளை உங்களைச் சுவாசிக்கச் செய்கின்றது.

அன்றைய அரசர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கருவிலிருந்தே சிறுகச் சிறுக விஷத்தை ஊட்டி வளர்த்தார்கள். குழந்தை பிறந்த பின்னாடியும் ஆகாரத்துடன் சிறுகச் சிறுக விஷத்தை ஊட்டினார்.

ஏனென்றால் வலுக் கொண்ட குழந்தைகளாக உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு செய்தார்கள். அதைப்போன்று தான்
1.உங்கள் வாழ்க்கையில் துன்பத்தை துடைக்கும் நிலையாக வரும் பொழுது
2.அந்த மெய் ஞானிகளுடைய அருள் சக்தியைச் சிறுகச் சிறுக உங்களுக்குள் ஏற்றி
3.அவர்களின் பேராற்றல் மிக்க உணர்வின் சத்தை உங்கள் நல்ல உணர்வுகளுடன் சேர்ப்பிக்கின்றோம்.

ஆகவே நீங்கள் எப்போது யாரிடத்தில் துன்பமான நிலைகளைக் கேட்டுணர்ந்தாலும் பார்த்துணர்ந்தாலும்...
1.அந்த உணர்வின் தன்மைக்கு அடுத்து
2.“ஈஸ்வரா...1” என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை வேண்டி
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வினைச் சுவாசித்து
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலிலுள்ள ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்ற நினைவின் அலைகளை
5.உள்முகமாக உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும்.
6.கண்களைத் திறந்து ஒரு நிமிடமும் கணகளை மூடி ஒரு நிமிடம் அவ்வாறு செய்ய வேண்டும். இதற்கு “ஆத்ம சுத்தி...” என்று பெயர்.

தீயது அணுகாது கெட்டது தனக்குள் நுழையாது தனக்குள் காத்திடும் நிலையாக உயர்வான எண்ணங்களை நாம் அடிக்கடி எடுத்துக் கொள்வதற்காக இதைத் தியானப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.