ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 9, 2018

நேற்று நன்றாகத்தான் இருந்தேன்… ஏனோ தெரியவில்லை இன்று என் மனதே சரியில்லை என்போம்…! அடுத்து நாளை என்ன ஆகுமோ..? என்று இப்படிப்பட்ட மாறுபட்ட உணர்வுகள் நம்மை இயக்குவதன் காரணம் என்ன…?


நாம் வெண்மையான துணியைப் போட்டுக் கொண்டு ரோட்டிலே நடந்து போகின்றோம். எங்கேயோ பட்ட தூசி அது காற்றிலே மிதந்து வந்து நம் சட்டை மீது பட்டு அழுக்காகின்றது.

மிளகாயைக் காய வைத்திருப்பார்கள். அதை உலர்த்திக் கொண்டு இருக்கப்படும் போது காற்றுக்குள் நெடி கலந்ததாகப் பரவி வரும். அந்தக் காற்றை நாம் சுவாசித்தால் “நச்... நச்...” என்று தும்முவோம்.

ஒரு இடத்தில் நல்ல வாசனையான பொருள்களை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். சந்தனமோ மற்ற பொருள்களிலிருந்து ஆவியின் அலைகள் வெளிப்பட்டுக் காற்றிலே மிதந்து வரும் அந்தப் பாதையில் ஒருவர் நடந்து சென்றால் அதைச் சுவாசிக்கப்படும் பொழுது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

சிறிது நேரம் கழித்து இன்னொருவர் அதே பாதையில் வரப்படும் போது எனக்கு எப்படியோ இருந்தது. கப...கப... என்று இருந்தது. முதுகுப் பக்கமும் எரிச்சலாக இருந்தது என்பார்.

ஆனால் முதலில் வந்தவரோ இல்லை… அப்படி இருக்காது.. நான் அந்தப் பாதையில் தானே வந்தேன்.. எனக்கு ஒன்றும் இல்லையே…! நல்ல வாசனை தான் வந்தது என்பார்.

இது எல்லாம் ஏனென்றால் நொடிக்கு நொடி காற்றலைகள் மாறிக் கொண்டே இருக்கின்றது. அதைச் சுவாசிக்கும் பொழுது அதற்கொப்ப நம் சுவாசத்திலும் கலந்து நம்மையும் இயக்கத்தான் செய்யும். இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

அதை போலத் தான் நாம் கடையில் உட்கார்ந்து வியாபாரம் செய்து வியாபாரத்தில் நல்ல இலாபத்தைப் பெருக்கி விடலாம் என்று எண்ணுவோம்.

ஆனால் கடைக்கு வரும் ஒரு சிலர் வீட்டிலே தன் குடும்பத்தில் ஏற்பட்ட துன்பமான எண்ணத்துடன் வருவார்கள். அவர்களுடைய பிழைப்புக்காக வேண்டி எப்படியும் சாமான் வாங்கித் தான் ஆக வேண்டும்.

கஷ்டத்துடன் வரப்படும் போது நம்மிடம் வந்து இந்த அரிசி என்ன விலைங்க...? பருப்பு என்ன விலைங்க...!” என்று கேட்கின்றார்கள்.

குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டத்திற்குத் தகுந்த மாதிரி அவர்கள் சொல்லும் போது நமக்குச் சரியாகக் (விவரம்) கேட்காது. அப்புறம் நாம் என்னய்யா...! கேட்கின்றீர்கள்....? என்று அழுத்திக் கேட்க வேண்டும்.

இந்த அரிசி தான் என்ன விலைய்யா...? என்று அவரும் அழுத்தமாகக் கேட்பார். அப்போது வீட்டிலே ஏற்பட்ட கஷ்டத்தால் கஷ்டமான உணர்வுகள் அவருக்குள் விளைந்தது நம்மிடம் வந்து கேட்கும் போது
1.அதே கஷ்டமான உணர்வுகள் நமக்குள் பட்டு
2.அதை நாம் சுவாசிக்கும் பொழுது நம் உடலுக்குள்ளும் சேர்கின்றது.
3.ஆக ஒருவருக்கு ஒருவர் நாம் பிரிந்து செல்வதில்லை.
4.(அவர் கஷ்டத்ததைச் சந்தித்து துன்பப்படுகின்றார்... ஆனால் நாம் அந்தத் துன்பப்படுவோர் உணர்வைச் சுவாசித்துத் துன்பத்தை நமக்குள் விளைய வைக்கின்றோம்...!) முக்கியமானது

விண்ணிலே 27 நட்சத்திரங்களும் வானவீதியில் இருந்து வெளிப்படும் அந்த மற்ற விஷத்தின் தன்மைகளை முறித்து நாம் பிரபஞ்சத்திற்குள் அணுக்களானாலும் அந்த வட்டப் பாதையில் போகும் கோள் எதுவோ அது இழுத்து தன் உணர்வுடன் சேர்க்கின்றது.

உதாரணமாக சனிக் கோள் அந்தச் சக்திகளைப் பெற்று அதிலிருந்து வரும் உணர்வின் தன்மை நம் பூமிக்குள் வந்தால் பெரும் மழையாகப் பெய்கின்றது.

ஆனால் சனிக்கோளில் இருந்து வரக்கூடிய அந்த உணர்வுகள் நிலையை மற்ற கோள்களில் அதாவது புதன் கோளில் மோதும்போது வெடிப்பின் தன்மை அடைகின்றது.

நெருப்பின் மேல் நீரை ஊற்றினால் அது எப்படி வெடித்துச் சிதறுகின்றதோ அதைப் போல அடைகின்றது. இதைப்போல ஒவ்வொரு கோளிலும் சனிக் கோளின் தன்மைகள் படும் பொழுது அதற்கு எதிர் நிலையாகின்றது.

ஏனென்றால் புதன் கோள் சூரியனுக்கு அருகில் இருப்பதால் அந்த வெப்பத் தணல்களில் நீரின் சத்து பட்டவுடனே வெடிப்பின் தன்மை வரும்.

சில பாறைகளிலே நீரின் தன்மை அது படும் போது அது இஞ்சாத நிலைகள் ஏற்படும். ஆக மற்ற கோள்களினுடைய நிலைகளில் சனிக்கோளின் தன்மைகள் பட்டால் அது எதிர்த்து அந்த நீரின் தன்மையை மீண்டும் வெப்ப அலைகளாக மாற்றி விடும்.

நீரைக் கொதிக்க வைக்கும் போது நீரின் சத்து மாறி ஆவியாக மாறுகின்றது. இதைப்போல தான் சில கோள்களில் எதிர் நிலையாகின்றது.
1.இதைப் போன்று தான் நமக்குள்ளும்
2.ஒவ்வொரு விதமான குணங்கள் கொண்ட உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது எதிர் நிலையாகும்.

நாம் வியாபராம் நன்றாக இருக்கிறது என்று எண்ணி உட்கார்ந்து பேசிக் கொண்டு இருப்போம். ஒருவர் குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடத்தால் வேதனையுடன் நம்மிடம் வந்து அவரின் சங்கடத்தை எல்லாம் நம்மிடம் சொல்லிப் பேசிக் கொண்டிருந்த பின் அவருக்கு வேண்டிய சரக்கை நாம் எடுத்துக் கொடுத்தால் போதும்.

சிறிது நேரம் கழித்துப் பாருங்கள். உடலில் என்னமோ மாதிரி இருக்கின்றது. கிறு…கிறு…! என்று வருவது போல இருக்கின்றது. தும்மல் வருவது போல இருக்கிறது. உடலில் பளீர்…பளீர்..! என்று குத்துவது போல இருக்கிறது என்று சொல்வீர்கள்.

இந்த மாதிரி இருந்தது என்றால் அடுத்தாற்போல நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். வந்தவர் இதற்கு முன்னாடி எப்படி வந்தார்…? அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். வீட்டில் எப்படி இருக்கின்றார் என்று பாருங்கள். அப்போது அவர்கள் குடும்பத்தில் இந்த கஷ்டமான நிலை இருந்திருக்கும்.

வியாபார நிலைகளில் முதலில் நாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவருடைய பேச்சின் நிலைகளைக் கேட்டுணர்ந்ததனால் நம்மை அறியாமல் உடலில் இத்தனை மாற்றங்களும் வந்து விடுகின்றது. ஏனென்றால்
1.நம் பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் எதுவும் தனித்து வாழ்வதில்லை.
2.ஒன்றின் தன்மை ஒன்றிற்குள் அது கலந்து ஒன்றின் சக்தியை ஒன்று எடுத்துத்தான்
3.எல்லாமே இணைந்த நிலைகளில் சுழன்று கொண்டு வாழ்கின்றது.

அதைப் போன்று தான் நாம் மனிதனாக இருந்தாலும் வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் சந்திக்கும் போது இத்தகைய நிலைகள் மாறிக் கொண்டே தான் இருக்கும்.
1.நேற்று இருந்த நிலை இன்று இல்லை…!
2.நேற்று மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்று துன்பப்படுவோருடைய நிலைகளைக் கேட்டால் நம் மகிழ்ச்சி காணாது போய்விடும்.

உதாரணமாக முன்னாடி ராஜீவ் காந்தியை வெடி குண்டு வைத்துக் கொன்று விட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் சாதாராண நிலைகள் எல்லாம் மாறி எல்லாருக்கும் பதட்டங்களும் பயமும் பீதியும் ஏற்பட்டது.

அப்பொழுது ரோட்டில் போவதற்கே முடியாதபடி பய உணர்வுகள் அதிகமாகி ஒருவருக்கு ஒருவர் அதை வெளிப்படுத்தும் போது மனிதருக்குள் சஞ்சலமும் பயமும் அதிகமாக ஏற்பட்டது.

இந்த மாதிரி உணர்வுகள் சந்தர்ப்பத்தால் நம் நல்ல குணங்களுடன் சேர்த்து ஒவ்வொரு நொடியிலேயும் விஷத் தன்மைகள் நமக்குள் சேர்ந்து விடுகின்றது.

ஆனால் மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும் எல்லோரையும் சந்தித்துத் தான் ஆக வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் இருப்பார்கள்.

நமது நண்பர் என்று மகிழ்ச்சியாக நாம் சந்திக்கின்றோம். ஆனால் அவரோ மற்றொரு இடத்தில் வெறுப்பாக வேதனையான சொல்களைக் கேட்டுவிட்டு இங்கே வருகின்றார்.

அவருடன் கலந்த அந்தச் சத்து… நண்பர் என்று பாசத்தோடு நாம் கலந்து உறவாடப்படும் போது அவர் உடலிலே இருக்கக்கூடிய உணர்வு நம் உடலிலே கலந்து விடுகிறது.
1.அவர் உடலில் அது அதிகமாக இருந்தாலும் அவர் உடலுக்குள் கலந்தது
2.இந்தப் பாசத்துடன் கலந்து நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.
3.இப்படி நமது வாழ்க்கையில் அடிக்கடி வந்து விடுகின்றது.

ஆனாலும் உயர்ந்த ஆறாவது அறிவு கொண்ட நாம் எத்தகைய பொருளானாலும் அதைச் சமைத்துச் சுவையாக்கி உணவாக உட்கொள்ளத் தெரிந்தவர்கள்…!
1.கசப்பையும் நாம் சுவை கொண்டு தான் மாற்றுகின்றோம்.
2.காரத்தையும் சுவை கொண்டதாக மாற்றுகின்றோம்
3.காரலையும் புளிப்பையும் சுவை கொண்டதாக மாற்றுகின்றோம்.

காய்கறிகளைச் சுத்தப்படுத்தி அதை எப்படி அறுசுவையாகச் சமைக்கின்றோமோ இதைப்போல மனித வாழ்க்கையில் நாம் எல்லோருடன் பழகினாலும்
1.நம் ஆறாவது அறிவின் திறமை கொண்டு
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நம் உடலுக்குள் செலுத்திச் செலுத்தி
3.வரக்கூடிய துன்பங்களையும் வேதனைகளையும் அதனின் விஷத்தின் தன்மையைக் குறைத்தே ஆக வேண்டும்.