ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 29, 2018

“ஊழ் வினையை…” நீக்கச் செய்யும் தியானப் பயிற்சி


நம் உடலில் நோய் வந்துவிட்டால் அந்த நோய்களை நீக்க மருந்தினை உட்கொள்கின்றோம். அந்த மருந்து இரத்தங்களில் பரவப்படும் போது நல்ல அணுக்களுக்கு வீரிய சக்தி கிடைக்கின்றது. அந்த நோய் குறையக் காரணமாகின்றது.

இருப்பினும் நம் உடலில் நோய்களை உருவாக்கிய அணுக்கள் முழுமையாக இறப்பதில்லை.
1.நல்ல அணுக்களுக்கு ஒரு கவசமாகத் தான் மாறியுள்ளதே தவிர
2.நோயை உருவாகும் அணுக்களை அடுத்து உருவாக்காமல் தடைப்படுத்தும் சக்தி
3.அந்த மருந்திற்கு இல்லை.
4.(ஏனென்றால் சிறிது காலத்திற்கு ஒன்றும் தெரியாது. நோயை உருவாக்கும் அணுக்களின் எண்ணிக்கை கூடியபின் மறுபடியும் மருந்தை உட்கொள்ள வேண்டும். இப்படித்தான் வாழ்கின்றோம்)
5.காரணம் நாம் முதலில் பதிவு செய்த உணர்வுகளின் “மூல வித்து…!” எலும்புக்குள் இருந்து கொண்டேதான் இருக்கும்.

உதாரணமாக எப்படி மரத்தின் கிளைகளை நீக்குகிறோமோ அது போல் தான் நாம் சாப்பிடும் மருந்துகள் அனைத்தும். மரக்கிளைகளை முழுவதும் வெட்டினாலும் சிறிது காலம் கழித்து மீண்டும் அந்த மரம் சிலிர்த்து எப்படி முளைக்கின்றதோ அதைப் போல தான் நமது உடலில் நோய்கள் மீண்டும் வளரத் தொடங்குகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு உறுப்புகளை மாற்றி அமைத்தாலும் அந்த உறுப்புகளை இழந்தபின் அவர்கள் சொல்லும் கட்டுப்பாட்டுடன் உணவுகளை நாம் உட்கொள்தல் வேண்டும். அந்தக் கட்டுப்பாடு தவறினால் துரித நிலையில் மரணம் ஏற்படுகிறது. இருப்பினும் நிலையான உணர்வுகளை நாம் சேர்க்க முடிவதில்லை.

இந்த வாழ்க்கையில் நாம் உற்றுப் பார்த்தது கேட்டது நுகர்ந்தது  அனைத்தும் ஊழ் வினை என்ற வித்தாக எலும்புக்குள் இருப்பதனால்
1.மருந்துகளை உட்கொண்டு மேலெழுந்தவாறு தசைகளிலோ மற்ற இடங்களிலோ உள்ள நோயை அகற்றினாலும்
2.“ஊழ்…” என்ற வித்தின் மூலமாக அது ஜீவன் பெற்று வளரத்தான் செய்யும்.
3.எந்த மருந்தை எடுத்துக் கொண்டாலும் எலும்புக்குள் இருக்கும் இந்த ஊழ்வினை என்ற மூல வித்தை அகற்ற முடியாது.

ஏனென்றால் அது நிலையானதாகி விடுகின்றது. ஆக ஊழ்வினை என்ற வித்தை மாற்ற என்ன செய்ய வேண்டும்...?

பாம்பினங்கள் தன் உணவுக்காக விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை விழுங்குகின்றது. விழுங்கிய உயிரினங்களின் உடல்களிலுள்ள விஷத் தன்மைகளை எல்லாம் தனக்குள் சத்தாக வடித்து எடுத்துக் கொள்கிறது.

இப்படிப் பல பல உயிரினங்களின் விஷத் தன்மைகள் சேரச் சேர உடலுக்குள் அது அடங்கிய பின் அந்த விஷமே பல வண்ணங்கள் கொண்ட நாக இரத்தினமாக உறைந்து விடுகின்றது.

இதைப் போல அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன நிலையில் அந்தத் துருவ நட்சத்திரம் சர்வ நஞ்சுகளையும் ஒடுக்கி அந்த விஷத்தையே உணவாக எடுத்து ஒளியாக மாற்றும் திறன் கொண்டது.

1.எல்லா விஷத்தையும் வென்று ஒளியாக இருக்கும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அந்த உணர்வுகளைத்தான்
3.நமது குரு காட்டிய அருள் வழியில் இப்பொழுது உங்களைப் பெறச் செய்கின்றோம்.

ஒவ்வொரு நிமிடமும் செவி வழி ஓதி… கண் வழி கவரச் செய்து… மூக்கு வழியாக நுகரச் செய்து… உடலிலிருக்கும் இரத்தங்களில் கலக்கச் செய்து… தீமைகளை நீக்கும் உணர்வுகளை உங்கள் உடலுக்குள் பரவச் செய்கின்றோம்…! ஆகவே
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா…!
2.அது எங்கள் இரத்தங்களில் கலந்து எங்கள் இரத்தங்களில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் பெற வேண்டும் ஈஸ்வரா…!
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் உடல் முழுவதும் படர்ந்து உறுப்புகளில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவ ஆன்மாக்களும் பெற வேண்டும் என்று
4.அந்தத் தீமையை நீக்கும் உணர்வினை ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கச் செல்லும் போது ஒரு பத்து நிமிடமாவது ஏங்கித் தியானியுங்கள்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள சிறு குடல் பெருங்குடல் கல்லீரல் மண்ணீரல் கணையங்கள் நுரையீரல் சிறுநீரகம் இருதயம் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்,

நம் உடலில் உள்ள இந்த முக்கிய உறுப்புகளை உருவாக்கிய அணுக்களை வீரியமடையச் செய்ய இதை போல எண்ணி நினைவாற்றலைக் கூட்டி அந்த உறுப்புகளில் நல்ல அணுக்களின் தன்மையை உருவாக்க வேண்டும்.

வாழ்க்கையில் எது வந்தாலும் அந்தக் கவலையோ சஞ்சலமோ சோர்வோ நம்மை இயக்காதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலிலுள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குப் பெறச் செய்து பழக வேண்டும்.

ஏனென்றால் வேதனைப்படுபவரையோ வெறுப்படைந்தவரையோ சஞ்சலப்படுபவரையோ நாம் பார்த்தோம் என்றால்
1.கண்களில் உள்ள கருமணி அதைப் படமாக்கி
2.அந்த உணர்வின் உணர்ச்சிகளை அதனுடன் இணைத்துள்ள நரம்பு மண்டலத்தின் வழி கொண்டு
3.நம் உடல் உறுப்புகளில் உணர்ச்சிகளைத் தூண்டி செய்தியாக உணர்த்தி அதை உஷார்படுத்துகிறது.
4.அதே சமயத்தில் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கி
5.நரம்பு மண்டலத்தின் வழியாக உடல் உணர்ச்சிகளைத் தூண்டி
6.நாம் நுகர்ந்த உணர்வுகளை எண்ணம் சொல் செயல் என்ற வழியில் வெளிப்படச் செய்கின்றது.

உதாரணமாக ஒரு டம்ளரில் விஷத்தைப் போட்டுக் கொட்டிய பின்பு அதைச் சீராகச் சுத்தம் செய்யாமல் மறு முறை பயன்படுத்தினால் அந்த டம்பளரில் தொக்கியுள்ள விஷம் மற்ற பொருளை அதிலே போட்டாலும் அதையும் விஷமாகத் தான் மாற்றும்.

அது போல வேதனைப்படுபவரைப் பார்த்து அவர் சங்கடப்பட்ட உணர்வுகளை எல்லாம் பேசிவிட்டு அடுத்து நீங்கள் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்தால் சீராக வராது. ஏனென்றால் கண்களில் உள்ள கரு மணிகளில் அந்த உணர்வுகள் அழுக்காகப் படிந்துவிடுகின்றது.

அந்த நேரத்தில் ஒரு நோட்டிலே எழுத வேண்டும் என்றாலும் எழுத்தின் வடிவம் சரியாக வராது. அல்லது ஒருவர் நல்ல விஷயத்தை நம்மிடம் சொன்னாலும் அதைக் கேட்கும் மனது இருக்காது. சோர்வும் சஞ்சலமும் எரிச்சலும் தான் நமக்கு வரும்.

அதே சஞ்சல உணர்வை எடுத்துத் தொழில் செய்தாலும் அது நமக்குச் சரியாக வருவதில்லை. உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆகவே அந்த விஷத்தைத் துடைக்க துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கண்களில் கரு விழிகளில் படரச் செய்ய வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் கருமணிகள் பெற வேண்டும் என்று எங்கும் போது அது கரு மணிகளைத் தூய்மையாக்குகின்றது.

டி.வி. ரேடியோ ஒளி, ஒலி அலைகளை பரப்பும் போது அந்தந்த ஸ்டேஷனில் வைத்தால் அந்தந்த அலை வரிசையில் எடுத்துக் காட்சிகளைப் பார்க்க முடிகின்றது, ஒலியைக் கேட்கவும் முடிகின்றது.

அதே போல துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அரும்பெரும் சக்திகள் நம் பூமியில் நிறையப் படர்ந்துள்ளது. இப்போது நான் சொல்லும் போது நீங்கள் கேட்ட உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்ற உணர்வுகளை எடுத்துக் கவர்ந்து உங்கள் உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புகளை உருவாக்கிய அணுக்களையும் பெறச் செய்ய முடியும்.

கண்களில் உள்ள கரு மணிகளைத் தூய்மையாக்குவதும் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் வீரியத்தை அடிக்கடி ஊட்டிப் பழகிக் கொண்டால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வு உடலிலுள்ள அணுக்களுக்குள் பெருகிப் பெருகிப் பெருகி
2.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடையும் சக்தி பெறுகின்றோம்.
3.அதற்காகத்தான் இதை உபதேசிக்கின்றோம்…!