ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 27, 2018

உயிருக்குள் ஏற்படும் அதீத வெப்பத்தின் தணலால் உண்டாகும் விளைவுகள்..!


நம் உயிரின் இயக்கத்தை ஈசன் என்றாலும் அதற்குள் ஏற்படும் துடிப்பினால் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும் ஞானிகள் காட்டியுள்ளார்கள். அதே சமயத்தில் விஷ்ணுவிற்குக் காளி என்றும் பெயரை வைத்திருக்கின்றார்கள். ஏன்...?

சிறு தீயை வைத்து அதை விளக்காக ஏற்றும் போது அந்த விளக்கின் ஒளியில் நாம் பொருள்களைக் காண முடிகின்றது. சிறு தீயின் உதவியால் பாத்திரத்தை வைத்துச் சமையல் செய்ய முடிகின்றது.

அதிக தீயை வைத்துக் கொதிகலனாக்கும் பொழுது கடினமான இரும்பையும் உருக்கி விடுகின்றோம். இரும்பையே உருக்கும் அத்தகைய நெருப்போ மற்றதை எல்லாம் அழித்திடும் சக்தி பெற்றது. அதே போலத்தான்
1.சாதாரண எண்ணங்களை எண்ணும் போது
2.நமது உயிரின் இயக்கத்தின் ஓட்டத் துடிப்பு குறைந்து
3.சாந்த நிலையாக நம்மை இயக்கச் செய்கிறது.
4.ஆனால் அதுவே இயக்கத்தின் வேகத் துடிப்பு அதிகமாகும் போது வெப்பத்தின் தணல் அதிகமாகின்றது.
5.அப்படி வெப்பத்தின் தணல் அதிகமாகும் போது மற்றதை எரித்திடும் உணர்வின் அலைகள் நமக்குள் பெருகுகின்றது.
6.அதனால் தான் விஷ்ணுவைக் காளி என்றும் பெயரை வைத்து அழைக்கின்றார்கள்.

உதாரணமாகப் பிறர் நம்மைப் பற்றித் தவறான சொல்களைச் சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நாம் அதைக் கேட்கும் போது உணர்ச்சி வசப்பட்டுக் கோபம் அடைகின்றோம்.
1.அந்தக் கோபத்தால் சிந்திக்கும் திறன் இழந்து
2.சாந்தமாகப் பேசும் இயக்கத்தையும் இழந்து விடுகின்றோம்.

ஏனென்றால் அவர் சொன்ன தவறான உணர்வை நுகர்ந்த பின்  அந்தக் கொதிகலனாக ஏற்படும் உணர்வின் சக்தியை நமக்குள் உருவாக்கி விடுகின்றது நமது உயிர்.

தவறான உணர்வை நுகர்வோம் என்றால் விஷ்ணு ஓங்காரக் காளியாக மாறி நெருப்பின் தணல் அதிகமாகி
1.எவன் தவறு செய்கிறானோ அவனின் உணர்வும் நம் நல்ல உணர்வும்
2.இந்த இரண்டும் சேர்க்கப்படும் போது இயக்கத்தின் ஓட்டம் அதிகமாகின்றது.
3.அதனால் ஏற்படும் விளைவுகள் அந்தத் தீமையைக் கொதிகலனாக மாற்றுகின்றது.

செடியோ செத்தைகளோ நெருப்பில் விழுந்தால் கருகி விடுகின்றது. ஆனால் இரும்போ அந்த வெப்பத்தைத் தாங்குகின்றது. ஆக நெருப்பின் தணல் நமக்குள் கொதிகலனாக அதிகமாகும் போது நம் நல்ல உணர்வுகள் தாங்காது இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது...!

அப்பொழுது நல்ல உணர்வுகளைச் செயலற்றதாக மாற்றி நல்லதை விளைய விடாது இது தடுக்கின்றது. இதையும் உருவாக்குவது யார்…? நமது உயிரே.

ஒருவன் தவறு செய்கின்றான். கண்ணுற்றுப் பார்த்த பின் அவனின் உணர்வைத் தவறென்று உணரப்படும் போது எதிர் நிலையாகி உராய்வின் தன்மை அதிகமாகிறது.
1.அதிலே ஏற்படும் தீயின் ஓட்டத்தால் உணர்வின் ஆக்கங்கள் அதிகமாகின்றது.
2.நம்முடைய சிந்திக்கும் திறனை மறைத்து விடுகின்றது.
3.அந்தக் கொதித்தெழும் உணர்வின் சத்து நமக்குள் ஆழமாகப் பதிந்து இரத்தக் கொதிப்பாக வருகின்றது.
4.அடுத்து நாம் எதைச் சிந்தித்தாலும் சிந்திக்க முடியாத நிலைகளும்
5.சிறு குறைகளைக் கண்டாலும் கூடக் கொதிக்கும் தன்மையாக நமக்குள் விளைந்து விடுகின்றது.

சாதாரண நெருப்பில் ஒரு பொருளை இட்டால் அது அப்படியே இருக்கின்றது. ஆனால் மரக் கட்டையை அதிகமாகச் சூடாக்கினால் அது  நெகிழ்ந்து வளைவது போல
1.நமது உயிரின் ஓட்டத்திற்குள் நுண்ணிய அலைகளாக இயக்கும் நரம்பியலின் தன்மைகளை
2.அதற்குள் இருக்கும் அமிலத்தை (ACID) இது குடித்து விடுகின்றது.

நரம்புகளுக்குள் அமிலத்தின் (ACID) தன்மை இயங்கவில்லை என்றால் நமது அங்கங்கள் சுருங்கி விடும். அதனால் தான் இரத்தக் கொதிப்பு உள்ள சிலருக்குக் கை  கால்கள் சுருங்கி விடுவதும் உள் நாக்கு இழுத்துக் கொள்வதும் அல்லது செயலற்றதாகவும் ஆகி  விடுகிறது.

நீரைக் கொதிக்க வைத்து அதிலே மரக்கட்டையைப் போட்டால் அந்தக் கட்டையை எடுத்து நாம் வளைக்க  முடியும். ஏனென்றால் நீரின் ஆவிகள் கட்டைக்குள் சென்று அதைச் எளிதாக்குகிறது.

இதைப்போலத்தான் நாம் எடுக்கும் உணர்வுகள் சீரான வெப்பத்தின் தன்மையாக வரும்போது எதை எதையெல்லாம் எண்ணுகின்றோமோ நரம்புகள் சீராக வளைந்து கொடுத்து நம்முடைய செயல்களுக்கு ஆக்கமாகின்றது.

ஆனால் அதுவே அதிகமான வெப்பத்தின் தன்மை கூடும்போது  நரம்புகளில் உள்ள அமில சக்திகளை மாற்றி வடிகட்டும் திறன் இழந்து நாம் சுவாசித்த உணர்வுகள் அந்த அமிலத்தையே கொதிக்கச் செய்து முழுமையாக விழுங்கி விடுகிறது.

அப்பொழுது அந்த அமிலத்தின் துணை கொண்டு உறுப்புகளை இயக்கக்கூடிய அந்த நரம்புகள் சுருங்கப்படும் போது கை கால்களை எல்லாம் முடக்கி விடுகின்றது.

இதற்கெல்லாம் வைத்தியம் பார்த்தார்கள் என்றால் நரக வேதனையை அனுபவிப்பார்கள். எல்லோரைப் போல நன்றாகத்தான் இருந்தோம். ஆனால் இன்று நம்முடைய நிலை இவ்வாறு ஆகி விட்டதே என்ற எண்ணங்களினால் சோர்வும் வேதனையும்படும் போது நஞ்சின் தன்மை அதிகரித்து விடுகின்றது.

வேதனை பெருகும் போது நமது உடல் உறுப்புகள் சீராக இயங்காது. உறுப்பின் தன்மையும் சிறுகச் சிறுக மாறி உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் மடியத் தொடங்கி விடுகின்றது. பின் எலும்புருக்கி (டி.பி.) நோயாகின்றது.

நாம் எடுக்கும் நல்ல உணர்வினுடைய அணுக்கள் அதனுடைய மலத்தால் தான் நல்ல எலும்பாக உருவானது. ஆனால் வேதனை என்ற உணர்வுகள் தாக்கும் போது விஷத்தைக் குடித்தால் நாம் எப்படிக் குறுகுகின்றோமோ அதைப் போல்
1.வேதனையால் உருவான அணுக்கள் பெருகிய பின் அதனுடைய மலத்தை இடும் போது
2.நல்ல எலும்பாக உருவாக்கிய அணுக்களை அது விழுங்கத் தொடங்கி விடுகின்றது.
3.எலும்பையே அது தின்றுவிடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. பிறர் செய்யும் தவறுகளையும் அவர்கள்படும் வேதனைகளையும் நாம் பார்த்துக் கேட்டுணர்ந்த நிலைகளால் இவ்வாறு வந்துவிடுகின்றது

காரிலே பிரேக் ஆயில் (OIL BRAKE) குழாய்கள் மூலம் சென்று எப்படி வேலை செய்கின்றதோ ஆயில் ஜாக்கி (HYDRAULIC JACK) மிகப் பெரிய இயந்திரங்களைத் தன் அழுத்தத்தின் தன்மை கொண்டு தூக்குவது போல
1.நமது உணர்வின் நினைவலைகள்
2.நரம்பியல்களுக்குள் இருக்கும் அமிலத்தின் மூலமாக இயக்கப்பட்டு
3.எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவுக்குக் கையோ காலோ அதனதன் உறுப்புகளை இயக்குகின்றது.

நல்ல உணர்வின் அமிலமாக இருந்தால் சீராக இயக்குகின்றது. ஆனால் வேதனையால் பெருகும் உணர்வின் அமிலத் தன்மைகள் நரம்புகள் வழி கூடி எலும்புடன் ஒட்டிய நிலைகளில் இயக்கும் பொழுது அங்கங்களைச் சீராக இயக்க முடியாதபடி ஆகின்றது.

அதனைத் தொடர்ந்து நாம் சுவாசிக்கும் வேதனையான உணர்வுகள்  நுரையீரலில் இருக்கும் சுவாசப் பைகளிலும் குடிகொண்டு அதனுடைய மலத்தை உமிழ்த்தி சுவாசப் பையை உருவாக்கிய அணுக்களையும் உட்கொள்ளத் தொடங்கி விடுகின்றது. காச நோயாகின்றது.

இப்படி சந்தர்ப்பத்தால் நாம் எடுக்கும் உணர்வுகளால் மனித உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் மடிகின்றது. அதைக் கொன்று புசிக்கின்றது, நாம் எண்ணிய எண்ணத்தால் உறுப்புகள் நலிவடைகின்றது.

இதிலிருந்து நாம் விடுபட வேண்டுமா இல்லையா...? சிந்தியுங்கள்...!