உதாரணமாக நாம் ரோட்டிலே நடந்து போய் கொண்டிருக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.
எதிர்பாராத விதமாக நமக்கு எதிரிலே தீய செயல்கள் கொண்ட ஒருவன் ஆத்திரத்துடன் மற்றொருவனை
அடித்து நொறுக்குகின்றான்.
1.தாக்குண்டவனோ வேதனையுடன் அலறுகின்றான்.
2.அடிப்பவனோ மகிழ்ச்சியாக இருக்கின்றான்
3.இந்த இரண்டு உணர்வுகளும் வெளிப்படுகின்றது… சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
அலைகளாக மாற்றுகின்றது
4.நம் கண்ணோ அவர்களைப் பார்க்கின்றது அவர்கள் உடலைப் படமெடுக்கின்றது
5.அடிப்பட்டவரிடமிருந்து வெளிப்படும் வேதனையைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்த
அலைகளை நம் கண்ணின் காந்தப் புலனறிவு ஈர்க்கின்றது
6.ஈர்க்கப்படும் உணர்வுகளை நாம் சுவாசிக்கும் பொழுது புருவ மத்தியிலிருக்கும்
நம் உயிரிலே படுகின்றது
7.உயிரிலே படும் போது உணர்ச்சிகளாக இயக்கப்பட்டு பயமும் ஆத்திரமும் அவன் படும்
வேதனையும் நமக்குள் தோன்றுகின்றது.
நம் உயிருக்குள் பட்ட உடனே அதை நாம் உணர்ந்தறிந்தாலும் அந்த உணர்வின் சத்து
நம் உடலுக்குள் சென்று விடுகின்றது. அதாவது அடி வாங்கியவன் பயந்து ஓடிவிட்டாலும் சரி…
அல்லது இப்படி ஆகிவிட்டானே…! என்று நாம் “எப்படி எண்ணினாலும்…!” அந்தப் பயம் நமக்குள்
வந்து விடுகின்றது.
இப்படி ஒரு தரம் பயமும் ஆத்திரமும் எடுத்து விட்டாலும் அடுத்த கணம்
1.எங்காவது “ஓய்…!”என்று சப்தம் கேட்டால் போதும்…! திடீர் என்று இங்கே திரும்பிப்
பார்ப்போம். ஓடுவதற்கு ஆரம்பிப்போம்.
2.ஏதாவதொரு சாமான் “டொப்…” என்று விழுந்தால் போதும். அந்தச் சப்தத்தைக் கேட்டு
நாம் செயலிழந்து விடுவோம்.
3.ஒரு வேலை செய்ய வேண்டும் என்ற நிலையில் வேகமாக எண்ணினால் போதும்…! நாம் எப்படி
வேகமாகச் செய்ய முடியும்…? என்ற பதட்ட நிலை வந்து விடும்.
அடிபட்டுப் பயந்த நிலைகளை ஒரு முறை தான் நாம் பார்த்துச் சுவாசித்தோம். அதைத்
துடைக்காமல் விட்டதால் அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் விளைந்து விடுகின்றது.
இந்தப் பய உணர்ச்சிகள் சிறுகச் சிறுக நம் நல்ல உணர்வுடன் சேர்ந்து நம் செயலில்
பதட்டமும் பயமும் அதிகமாகி “நடுக்க வாதமாக…!” வந்து விடுகிறது.
1.நம் செயலில் நடுக்கத்தின் தன்மை வந்து விடுகின்றது
2.நம் எண்ணத்தில் நடுக்கத்தின் தன்மை வந்து விடுகின்றது.
3.நாம் பேசும் சொல்லிலே பய உணர்வுகள் கலந்து விடுகின்றது
4.நம் பேச்சை அடுத்தவர்கள் கேட்டபின் பதிலுக்கு அவர்கள் நம்மைக் கேட்கும் பொழுது
அது மிரட்டும் தொனியாக வரும்.
5.(அதாவது நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.. என்னை மிரட்டுகிறானே…! என்ற நிலை
தான் நமக்குள் வரும்)
6.ஆக நம்முடைய எண்ணமே நமக்குள் எதிரியாக மாறுகின்றது.
அதை நாம் துடைக்க வேண்டுமல்லவா…? அதற்குத் தான் கூட்டுத் தியானங்களை அமைக்கச்
சொல்கிறோம்.
மகரிஷிகளின் அருள் சக்தி தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவரும் பெறவேண்டும்
என்று எண்ணும் பொழுது அந்த அருள் சக்தி உங்களுக்குள் பதிவாகின்றது. அடுத்து நீங்கள்
தனித்துச் சென்றாலும் அந்த எல்லோருடைய ஆசியையும் உங்களுக்குள் பெறச் செய்கின்றோம்.
ஏனென்றால் ஒவ்வொருவரும் எத்தனையோ துன்ப நிலைகள் கொண்டு வந்தாலும் அனைவரும் இதைக்
கேட்டுணர்ந்து அந்த மகரிஷியின் அருள் ஒளியை நாம் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்கும்படி
செய்கின்றோம்.
தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவரது உடல்களிலும் மகரிஷிகளின் அருள் சக்தி
படர வேண்டும். எல்லோரும் உடல் நலமும் மன பலமும் பெற வேண்டும். வாழ்க்கையில் எல்லா நலமும்
பெறவேண்டும் என்று எல்லோருடைய வாழ்த்து உணர்வுகளும் ஒருக்கிணைந்து பதிவு செய்யும் போது
“வலுக் கொண்ட சக்தியாக… ஒரு கூட்டமைப்பாகச் சேர்கின்றது….!”
இவ்வாறு கூட்டு தியானத்தில் பதிவு செய்த இந்த உணர்வின் ஆற்றல்களை நாம் அடிக்கடி
எண்ணி எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும்.
அடுத்து அசம்பாவிதங்கள் ஏதாவது பார்க்க நேர்ந்தால்… உடனே “ஈஸ்வரா...!” என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள்
உடல் முழுவதும் படர வேண்டும் என்று வானை நோக்கி ஏகி கவர்ந்த உணர்வைக் கண்ணின் நினைவு
கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும் என்று உடல் முழுமைக்கும் சிறிது நேரம்
செலுத்த வேண்டும்.
அப்பொழுது எதிர்பாராது மற்றவர்கள் சண்டையிட்ட உணர்வுகளையோ மற்ற பயந்த உணர்வுகளையோ
அதை எல்லாம் நம் உடலிலிருந்து அகற்றி நம்மைச் சுத்தப்படுத்தும் நிலையாக வருகிறது.
1.நம்மை அறியாது இயக்கிய அந்தப் பயமான உணர்வுகளும்
2.பதட்டமடையச் செய்யும் நிலையும் நமக்குள் முழுமையாககத் தணிகிறது.
3.மன பலமும் மன வளமும் தெளிந்த சிந்தனைகளையும் நாம் பெறுகின்றோம்…!
செய்து பாருங்கள் உங்கள் அனுபவம் பேசும்…!